கார்ப்பெட்டில் ரத்தம்…. முகத்தில்புன்னகை! – சுஜாதா சிறுகதை (1995)/ராம் ஸ்ரீதர் பதிவு 

(நன்றி: சுஜாதாவின் மர்மக் கதைகள் – உயிர்மை வெளியீடு – 5ம் பதிப்பு டிசம்பர் 2022-Rs.360/-)

மரணத்துக்குச் சற்றும் பொருந்தாத – உற்சாகமான காற்றோட்டமான அறையில் ஜன்னலோரத்தில் ரவிசேகர் கிடந்தார். நான் போனபோது எங்கோ புறப்படுவதற்குத் தயாராகத் திறந்த பெட்டியில் சட்டை, பாண்ட்டுகள் அடுக்கியிருந்தன. முகத்தில் எனக்குப் பரிச்சயமான புருவத்து அடர்த்தி,

இறந்தது ரவிசேகர்தான் என்று சொன்னது மற்றபடி முகம் கருநீலமாயிருந்தது.

ஜன்னலருகே கிடந்தார். சுவரில் ரத்தக் கோடு தெரிந்தது. ஒரு ஓரத்தில் வாயைக் கைக்குட்டையாபொத்தி அழுதுகொண்டிருந்த ஸ்வேதா, என்னைப் பார்த்து ஓடி வந்து அணைத்துக் கொண்டது சங்கடமாக இருந்தது.

துக்கமென்றாலும் அரசல்புரசலாக எங்கள் உறவு மற்ற வேலைக்காரர்களுக்குத் தெரிந்திருந்த நிலையில் இப்படி ‘பப்ளிக்’காக அணைத்துக்கொள்வது போலீஸுக்கு அநாவசிய சந்தேகம் தரும்

சூபரின்டெண்டெண்ட் பழனிவேல் ஆறுமுகம் என்று மார்பில் எனாமல் பெயரிலிருந்து தெரிந்தவர் என்னை அணுகி, பேச்சில்எந்த சந்தேகமும் இல்லாமல் மிகுந்த நட்போடு “நீங்க ரவிசேகருக்குஎன்ன வேணும்?” என்றார். அளவான மீசை, கைகுலுக்கல்.

“குடும்ப நண்பன்”

“இவரு எத்தனை கம்பெனி வெச்சிருந்தாருங்க?” என்று மேஜைமேல் இருந்த விசிட்டிங் கார்டுகளைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.

“ப்ரெஷர் டைகாஸ்டிங், டூல் மேக்கிங், அப்புறம் கொஞ்சம் ரியல் எஸ்டேட் பண்ணாரு, சினிமா எடுத்தாரு பார்க்காத வியாபாரம் இல்லீங்க.”

“பார்த்துப் புரட்டுப்பா லாப்காரங்க கோவிச்சுப்பாங்க.””எப்படி இறந்தாருங்க. கத்திக் குத்தா தெரியலையே. “

“கன்ஷாட். உங்க யார்கிட்டயாவது துப்பாக்கி இருக்குதுங்களா?”

“சேச்சே . எந்தப் பக்கம் பிடிக்கறதுன்னே தெரியாதுங்களே.”

சுவரை முத்தமிடுவது போல பக்கவாட்டாக இருந்த உடலைப் புரட்டியபோதுதான் மார்பில் துப்பாக்கிக் குண்டு துளைத்த இடம் அடையாளம் தெரிந்தது. கச்சிதமான துளை. “குண்டு உள்ளயே இருக்குது.”

“துப்பாக்கி தேவைப்படும்படி அத்தனை சிக்கலான மனுஷன் இல்லீங்க நான்.

உங்க பேரு ?”

ஸ்வேதா எதைப் பற்றியும் கவலைப்படாமல் மார்டைநனைத்துக்கொண்டு, “நான் என்ன செய்வேன். என்ன செய்வேன் என அங்கலாய்த்துக்கொண்டிருந்தாள். துக்கம் அவளுக்குச் சரிப்பட்டு வருவது போல் அபலையாக, அழகாக இருந்தாள். முப்பத்தைந்து வயசு அவளை அதிகம் சேதப்படுத்தாமல் விட்டிருந்தது.

மிஸஸ் ரவிசேகர் நீங்க வேணா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க. நீங்க கூடப் போய்ச் சமாதானப்படுத்துங்க. கொஞ்சம் பொறுத்து உங்க ரெண்டு பேரையும் தொடர்ந்து விசாரிக்கிறேன்.”

கீழே சென்றோம். படிகளின் தயக்கத்தில் சுவரில் ரவிசேகர் கிரிக்கெட் தொப்பியும் இளமையும் மட்டையுமாக சிரித்துக்கொண்டிருந்தார். படுக்கை அறையை அடையும்வரை அவரைப் பல்வேறு விதங்களில் நினைவுபடுத்தும் கோப்பைகள் சான்றிதழ்கள், ரோட்டரி பாராட்டுகள்.

கட்டிலில் குப்புற விழுந்தாள் ஸ்வேதா.

“யாரு ரவி? யாரு? உங்களை அத்தனை தூரம் வெறுக்கும்பபடி யாருமே இல்லையே ரவி” என்று மறைந்த கணவனைக் கேட்டாள்

“ஸ்வேதா!அப்பா அம்மாவுக்குத் தகவல் தெரிவிக்க போன் பண்ணட்டுமா ?”

“என்னமோ செய்”

“நம்பர் சொல்லு . ..”

“எல்லாம் அவர் டிஜிட்டல் டயரிலதான் இருக்கு. சுரேஷ் என்னை எதுவும் கேக்காதே .. தலைவலி பிளக்குது.”

தம்ளரில் தண்ணீரும் தலைவலி மாத்திரையும் கொடுத்துவிட அருகில் உட்கார்ந்து முதுகைத் தடவிக் கொடுத்தேன். அந்த மரண வேளையில் கூட ரவிக்கைக்குள் தெரிந்த உள்ளாடை விளிம்புகள் ‘கொஞ்சம் பொறு-கொஞ்சம் பொறு. கொஞ்சம்தான்’ என்றன.

“சுரேஷ் . உன்னை ஒண்ணு கேக்கணும்.

“ஸ்வேதா …உன்னை ஒண்ணு கேக்கணும்.

இருவரும் ஒரே சமயத்தில் அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டோம்.”இல்லை ஸ்வேதா அந்த அளவுக்கு நம்ம ரெண்டு பேருக்குே தைரியம் இல்லை.”

“பின்ன யாரு அவருக்கு யாரும் எதிரிங்கறதே கிடையாதே” என்ன நடந்தது சொல்லு “

அவள் கன்னத்தைத் துடைத்து நெற்றியில் முத்தமிட்டு கேட்டேன். “உனக்குச் சொல்ல விருப்பம்னா சொல்லு”

சற்றே மெளனத்துக்குப் பிறகு கலைந்த கூந்தலை முடிந்து கொண்டு சொன்னாள். “ராத்திரி ரெண்டு பேருக்கும் சண்டை நிறையகுடிச்சுட்டு நம்ம ரெண்டு பேரையும் பத்தி விபரீதமா பேசினாரு. என்னை ரொம்பத் திட்டினார். உங்களையும் திட்டினார். ரெண்டு பேருக்கும் அதுக்கும் எனக்கு வழி வைக்கறேன் பாருன்னு சத்தம் போட்டார். நான் கோவத்தோடு என் ரூம்ல போய் கதவைச் சாத்திப் படுத்துட்டேன். பன்ன ண்டு ஒரு மணி இருக்கும். வந்து கதவைத் தட்டினார். ‘ஸ்வேதா, ஸாரி ஸ்வேதா ஐ லவ் யு ஸ்வேதாஉங்கிட்ட ஒரு விஷயம் முக்கியமா சொல்லணும் கதவைத் திற, நான் பழைய ரவிசேகர் இல்லை’னு கதவைப் போட்டு ஓடைக்கிறார். நான் கதவைத் திறக்கவே இல்லை. அதுக்கப்புறம் மாத்திரை போட்டுக்கிட்டுத் தூங்கிப் போயிட்டேன் காலைல சின்னசாமி வந்து கதவை ரொம்ப நேரம் தட்டியிருக்கணும்.ஏ.ஸி. ரூம்ல கேக்கலை. கடைசில எழுந்து வந்து திறந்தேன். ‘அய்யா ரூம்ல என்னவோ மாதிரி குடிச்சுட்டுக் கிடக்கறாரும்மா. சீக்கிரம் வாங்க….”

“ஓடிப் போய் பார்த்தா …”

ஸ்வேதா கொஞ்ச நேரம் அழுதாள்.

“வாழ்க்கைல அந்தக் காட்சியை மறக்கவே முடியாது. கார்ப்பெட்லாம் ரத்தம். முகத்தில புன்னகை. முகத்தைத் திருப்பிக்கிட்டு ஜன்னலோரமா என்ன பார்த்தார் அங்கே? எதுக்காக அங்கே போனார் ?”

“இல்லை. ஏ.ஸி. ரூம்ல படுத்திருந்த அவர் என்னவோ போதை தெளிஞ்சதும் சொல்ல வந்திருக்காரு. என்னைக் குற்ற உணர்ச்சி கொல்றது. இந்த மனுஷன் என்னை என்னதான் கொடுமைப்படுத்தினாலும் சந்தேகப்பட்டாலும் ரூம்ல வெச்சு பூட்டினாலும் அடிச்சாலும் உதைச்சாலும் கூட பதிலுக்கு வெறுக்க முடியல. மூர்க்கம் கூடப் பழகிப்போச்சு சுரேஷ் சில சமயம் ரொம்ப ரொம்ப … ரொம்ப நல்லவர்.”

“சில சமயம்” என்றேன். அவள் கையைப் பற்றி உள்ளங்கை மேல் கை வைத்து அழுத்தினேன்.

* நீ செய்யலையே ஸ்வேதா? உண்மைய சொல்லிடு!”

“இல்லை சுரேஷ் நீயும் செய்யலியே?”

“நானா நான் கரப்பாம்பூச்சியைக்கூடக் கொல்ல மாட்டேன்…”

ஒரு கான்ஸ்டபிள் வந்து, சூப்பரின்டெண்டண்ட் கூப்பிடறார்” என்றான்.

“யாரைப்பா ?”

“ரெண்டு பேத்தையும்.”

கிளம்பிச் செல்லும் போது, “சுரேஷ் என்னை விட்டுராதே” என்றாள்,என்னுடன் ஒட்டிக்கொண்டு

“மாட்டேன் ஸ்வேதா”

“அவங்க நம்மைச் சந்தேகப்படுவாங்களா” …?

* ஆமாம். அவங்க கேக்கற கேள்விங்களுக்கு ஒளிவுமறைவில்லாம சொன்னபோதும். நம்ம மேல சந்தேகம் வராம போகாது. ஆனா,கேட்காம எதையும் சொல்லாதே. நீ கொன்னியான் னு கேட்டாரு முறை உன் கைவிரல்களைக் காட்டு. ஒரு தரம் பார்த்தாலே மபாதும். அதுவே சாட்சி. இது சுடக்கூடிய கையில்லை, முத்தமிடவேண்டிய கைன்னு.”அவள் என் புஜத்தை வலிக்குமாறு அழுத்தினாள்.

மெதுவாக போலீஸ் விசாரணைகள் நடந்துகொண்டிருந்தன.லாபிலிருந்து வந்தவர்கள் கைரேகை தேடிக் கொண்டிருந்தார்கள்.மற்றவர்கள் துப்பாக்கியைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

ரவிசேகரின் உடல் மூடி, இடம் மாறியிருந்தது.

“மிஸஸ் ரவிசேகர் உங்க வீட்டுல ஏதும் துப்பாக்கி இல்லைதானே .. நிச்சயமா தெரியுமா?”

“நான் பார்த்ததில்லை சார்.”

“உங்களுக்குத் தெரியாம அவர் ஏதும் செய்வாரா?”

“செய்வார்” என்றாள்.

“லெட் மி பி ஃப்ராங்க்” என்று அவர் ஆரம்பித்தபோது,கலவரத்துடன் பார்த்தேன். எனக்கும் ஸ்வேதாவுக்கும் உள்ள உறவைப் பற்றி குடையப்போகிறார் என்று. இல்லை.

“அவர் அண்மைல மோட்டார் ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சு அஃபிஷியலா லிக்விடேட் ஆயிருக்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது சார்” என்றாள் ஸ்வேதா.

“சுரேஷ் உங்களுக்கு?”

“எனக்கும் தெரியாது சார்.”

“குடும்ப நண்பர்ங்கறீங்க?” T

“நிறைய பிஸினஸ் செய்தார். ஆட்டைத் தூக்கி மாட்டுல போட்டுஎத்தனை கம்பெனி வெச்சிருந்தார், அதனுடைய லிக்விடிட்டி என்ன என்கிற விவரங்கள்லாம். அவர் ஆடிட்டர் பத்மனாபன்னு இருக்காரு அவருக்குத் தெரியும்ங்க”.

“போன் நம்பர் இருக்குதா ?

“எல்லாம் அந்த டிஜிட்டல் டயரில வெச்சிருப்பாங்க” என்றேன்.

“சுறுப்பா நீண்ட சதுரமா மேஜை மேல இருக்குதே அதுங்களா”ஆமாம்.”

“மிஸஸ் ரவிசேகர் – உங்க கணவர் ராத்திரி ரொம்ப சண்டை போட்டாராமே … வேலைக்காரன் சொன்னான்.”

“ஆமாங்க. தினமும் ராத்திரி சண்டை போடுவாரு க்ளபோய்க் குடிச்சுட்டு வர்றது வழக்கமாயிருச்சு.

“அவர் எங்கயாவது ஊருக்குப் புறப்பட்டிட்டிருந்தாரா ?”

“எங்கிட்ட சொல்லலை.”

*பெட்டில் துணி எல்லாம் அடுக்கியிருக்கு. ஏர் டிக்கெட் பெங்களூருக்கு இருக்கு. கேஷா ஏதாவது வெச்சிருந்து மிஸ்ஸிங்கான்னுசொல்ல முடியுமா? ஏன்னா பெட்டில் கேஷ், க்ரெடிட் கார்ட் ஏதும் இல்லை.”

“தெரியாதுங்க.” T

“என்னங்க . நீங்க அவர் மனைவிங்கறீங்க?”

“மனைவிதாங்க. ஆனா, சென்ற ஆறு மாதமா அவரு என்னை மனைவியா நடத்தலை. எங்கிட்ட ஏதும் கலந்துக்கலை.”

“காரணம்?”

“அவருக்கு என் மேல சந்தேகம் வந்துருச்சு” என்றாள்.

பழனிவேல் சற்று ஆச்சரியத்துடன் நின்றார்.

“என்ன சந்தேகம்?”

“எனக்கும் சுரேஷ்க்கும் கள்ள நட்பு இருக்கறதா .

” அது உண்மையா ? – இப்போது சட்டென்று என்னை நோக்கிக் கேட்டார்.

“உண்மைதாங்க” என்றேன்.

“ஓ.. அப்படி போவுதா கதை…”

வாசல் வழியாக ஒரு இன்ஸ்பெக்டர் அவசரமாக வந்து”கிடைச்சிருச்சுங்க” என்றார்.

அந்த போலீஸ் அதிகாரி ஜாக்கிரதையாகத் துணியால் மூடிய பொருள் ஒன்றைக் கொண்டுவந்து தேவைக்கதிகமான பத்திரத்துடன் பழனிவேல் கையில் கொடுத்தார்.

“மோகன் . எங்கப்பா கிடைச்சுது இது ?”

நான், அது என்ன என்று எட்டிப்பார்க்கும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இயல்பாக இருக்க முயன்றேன்.

“கைக்குட்டை உங்களுதா மோகன்?” என்றார் பழனிவேல்,

“இல்லை சார் இதுவும் பக்கத்தில கெடந்தது.

“எங்க கெடைச்சுது, காமிங்க”…..இருவரும் ஜன்னலருகே சென்று எட்டிப் பார்த்தார்கள்.

“மேல் ஜன்னலுக்கு நேராங்க”,

பழனிவேல் வீட்டுக்கு வெளியே அவருடன் போவதும், ஜன்னலின் அருகே காம்பௌண்டு சுவருக்குள் சுற்றுப்புறத்தை அராய்வதும் தெரிய, நானும் ஸ்வேதாவும் மௌனமாக நின்றோம். அருகே இருந்த கான்ஸ்டபிள் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தது அருவருப்பாக இருந்தது. பழனிவேல் சுறுசுறுப்பாக மீண்டும் உள்ளே வந்தவுடன் கேட்டார். “மிஸ்டர்1 சுரேஷ் நீங்க இந்த மாதிரி துப்பாக்கி பாத்திருக்கீங்களா?”

அவர் காட்டிய பிஸ்டலை நான் வியந்து பார்த்து “இல்லைங்க.பார்த்ததே இல்லையே.”

– செல்ஃப் லோடிங் பிஸ்டல் சார்” என்றார் மோகன் மெதுவாக.“மாடி ஜன்னலுக்கு நேரா தரையில வெளிய கிடந்துச்சி. ஜன்னல் வழியா சுட்டுப் போட்டுட்டுப் போயிருக்காங்க” என்றார்.

“சால்ஜாவில உங்க மாதிரி உயரமாக ஆசாமி சுலபமா ஏறிட முடியும்.”

“இருக்கலாம்” என்றேன் ஜாக்கிரதையாக.

“ஏம்மா, உங்க கணவர் சமீபத்தில ஆபீஸ் பிரச்னை, கடன்.தொல்லை, யாராவது எதிரிங்க பயப்படுத்தறது-இப்படி ஏதாவது உங்ககிட்ட பேசினாரா? ஏதாவது போன் கால் வந்ததா?”

“இல்லைங்க.”

வீட்டிலேயே தொல்லை இருக்கறப்ப ஆபீஸ் தொல்லையப்பத்தி எங்க பேசப் போறாரு” என்று அவர் சொன்னதன் கொடுமையால் ஸ்வேதாவின் முகம் விழுந்தது.

“சார் அவங்க ரொம்ப துக்கத்தில இருக்காங்க *

“அப்படியா …”

அறை முழுக்க தேடிப் பாத்துட்டம். குண்டு கெடைக்கலைங்க.”எக்ஸிட் வூண்டு இல்லையே? புரட்டிப் பாத்தா குண்டு உள்ளவே இருக்குது..”

குண்டு கெடச்சுட்டா பாக்கி தானா கண்டு பிடிச்சுடலாம்.சுட்டுட்டுப் போனவன் துப்பாக்கியை விட்டுட்டுப் போறதை இப்பதான் முதல் தடவையா பார்க்கிறேன்” என்றார் மோகன்.

“சுட்டுட்டு ஓடறப்ப தவறி விழுந்திருக்கலாம்”

“உங்களைத்தான் காப்பாத்த ஸாரி … பாத்துக்க சார் இருக்காரில்லை. நாளை காலைல அல்லது சாயங்காலம் லாப் ரிப்போர்ட் வந்ததும் மேற்கொண்டு விசாரிக்கிறோம். இந்த ரூம் பூட்டி சீல் போட்டுட்டுப் போறம். நீங்களும் .ஒரு வாரத்திலேயோ ஒரு மாதத்திலேயோ அவர்கிட்ட ஏமாற்றம் அல்லது கவலை அல்லது அதிகமா பணம் போன்ற ஏதாவது செய்தி இருந்தா அதை எங்களுக்குச் சொல்லலாம் நிச்சயமா தெரியுமா ! எதிரிங்களைப் பத்தி ஏதும் பேசலைதானே….”

“இல்லை சார்.”

மறுபடி”அப்ப இது உள் வேலையாத்தான் இருக்கணும்”என்னை ஒரு கணம் பார்த்தார்

“எப்பவாவது இவர் அறையைச் சுத்தம் செய்யறப்ப அலமாரிலயோ மேஜை டிராயரிலயோ லெட்டர், பயமுறுத்தல் கடிதம் ஏதும் பார்த்தீங்களா?”

“இல்லை சார். கடந்த ஒரு மாதமா நாங்க ரெண்டு பேரும் பேசிக்கக்கூட இல்லை. நான் இந்த அறைக்குள்ளவே நுழையலை.அதுக்கு முந்தி பார்க்கலை”.

“பிஸ்டல் எங்க வாங்கினதுன்னு கண்டுபிடிச்சுருவோம். யாரும் பிஸ்டல் வாங்கினதை இந்தியாவில் மறைக்க முடியாது” என்று என்னை அப்பட்டமாகப் பார்த்துக் கொண்டே சொன்னார்

“யார் இந்தக் காரியத்தைச் செஞ்சான்னு நிச்சயமா கண்டுபிடிச்சுரலாம்.

நீங்க ஊர்லதானே இருப்பீங்க சுரேஷ்?”

“ஆமாங்க” என்றேன் சற்று ஆடிப்போய். நிச்சயம் என்னை சந்தேகப்படுகிறார்.

“நீங்க துப்பாக்கி வாங்கலைதானே?”

எனக்குக் கோபம் வந்தது. “பழனிவேல் சார். நீங்க என்மேல சந்தேகப்படறதா இருந்தா பளிச்சுன்னு சொல்லிருங்க. இந்த மாதிரி மறைமுகமா சொல்லாதீங்க. முதல்ல எனக்குத் துப்பாக்கியை எந்தப்பக்கம் பிடிக்கிறதுன்னு கூடத் தெரியாது. அவரைக் கொல்றதால எங்களுக்கு எந்தவித லாபமும் கெடையாது. மேலும் நான் அப்படிப்பட்ட ஆளில்லை. எங்க அப்பா, அம்மா அப்படி வளர்க்கலை.உங்களுக்கு ஸ்வேதா அவர்கிட்ட பட்ட கஷ்டம் முழுக்க தெரியாது. அதுக்கு ஆறுதலா எங்கிட்ட பியானோ கத்துக்க வந்தாங்க,

“அப்படியே காதல் ஆயிருச்சாக்கும் புரியுது”.

“உங்களுக்குப் புரியாது. எதையுமே குற்றத்தின் பின்னணியில் பார்க்கிற உங்க போலீஸ் மனசுக்கு இதில் உள்ள மென்மையான சோக உணர்ச்சிகள் புரியவே புரியாது.”

“இதெல்லாம் நிறைய பாத்துட்டங்க. அதான் ப்ராப்ளம் ஸாரிதப்பா நெனைச்சுக்காதீங்க. சந்தேகப்படறது என் உத்தியோகம்”. அவர் தன் தொப்பியைத் தலையில் பொருத்திக்கொண்டு சென்றார்

அவர் போனதும் ஸ்வேதா என்மேல் வந்து விழுந்தாள். “சுரேஷ் என்னை விட்டுராத . இந்த வீட்டில நான் தனியா இருக்க முடியாது. . கூடக் கூட்டிட்டுப் போயிரு.” T

“ஸ்வேதா” என்று அவள் உச்சந் தலையில் முத்தமிடும் போது .எதையோ விட்டு வைத்தவர் போல உள்ளே வந்து,தொப்பியை எடுத்துக்கொண்டு எங்கள் இருவரையும் அந்தஅணைப்பின் நிறுத்தத்தில் பார்த்து, “ஸாரி, கேரி ஆன்” என்றுகொல்லிவிட்டு ஏளனப் புன்னகையுடன் சென்றார்.

இரவு முழுவதும் அவளுடன் இருந்தேன். டி.வி.யில் அமெரிக்க பாஸ்கெட்பாலை வெறித்துப் பார்த்துக் கொண்டு ஸ்வேதா பேசியதை அர்த்தம் பண்ணிக்கொள்ள முயலாமல், விடியல் தெரியும் வரை அவளைப் பரிவுடன் அணைத்துக்கொண்டு அவ்வப்போது முத்தமிட்டுக்கொண்டதில் செக்ஸ் உணர்வு இல்லாமல் அனுதாபம் மட்டும்தான் இருந்தது. நான்தான் முதல் சந்தேகத்துக்கு உரியவன் என்பது மிகத் தெளிவாக பழனிவேலின் கேள்விகளிலிருந்துதெரிந்தது. என்ன செய்வது? ஓடிப்போய் விடலாம். சேச்சே நான்தான் கொல்லவில்லையே … ! | நிச்சயமாக நான் கொல்லவில்லை. ஏன் இந்த எண்ணம் திரும்பத் திரும்ப வருகிறது.

மறுதினம் போலீஸிடமிருந்து தகவல் ஏதும் வரவில்லை. நான் வகுப்புகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஸ்வேதாவுடன்.உட்கார்ந்திருந்தேன். பழனிவேலுக்கு போன் செய்து, ஸ்வேதா அந்த வீட்டில் தொடர்ந்து இருக்கப் பயப்படுகிறாள் என்று அத்தை வீட்டுக்குக் கூட்டிச் செல்ல அனுமதி வாங்கிக் கொண்டேன். ஸ்வேதாநீங்காத பயத்தில் இருந்தாள். அவள் அடுத்த நடத்தை எதிர்பார்க்கமுடியாதபடி இருந்தது.

ஒரு சமயம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு ஊருக்குப் போய், வேறு பெயர் வைத்துக் கொண்டு வாழலாம்.என்பாள்.

ஒரு சமயம், “எனக்கு நல்லா தெரியும் சுரேஷ். நீதானே கொன்னே…..சத்தியமா சொல்லு, பரவாயில்லை நான் உன்னை மன்னிச்சுடறேன்” என்பாள்.

மீண்டும் மீண்டும் எதுக்காக அந்தப் புன்னகை? அதன் மூலம் எனக்கு என்ன செய்தி சொல்லியிருக்கார்! |சாகப்போறவர் எதுக்கு சிரிக்கணும்.

“சுரேஷ்அவருக்கு முதல்லருந்தே நம்ம ரெண்டு பேரையும் பத்தி தெரிஞ்சிருக்கு”.

ஸ்வேதாவின் தாய் தந்தை இருவரும் மறுநாள் வந்தனர். “எதுக்கம்மா பணத்தாசைப்பட்டு இத்தனை வயசு வித்தியாசத்தில் கல்யாணம் பணணி வெச்சே?” என்று தாயின் மேல் பாய்ந்தாள். தந்தை ராமகிருஷ்ணன் வந்த உடனே இறந்துபோன ரவிசேகரின் எஸ்டேட் விஷயங்களையெல்லாம் பற்றி விசாரிக்கச் சென்று மாலை உற்சாகக்குறைவாக வந்தார்.

“என்ன சார் …”

“எல்ல்ல்லாம் கடன். ப்ராப்பர்ட்டி மொத்தமும் அட்டாச் ஆய்டும் போல இருக்கு. மோட்டார் ஃபைனான்ஸ் கம்பெனிஅஃபிஷியல் லிக்விட்டர்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கு. இவர் மேலாகத்தான் பெரிய பணக்காரர். உள்ள எல்லாம் ஒட்பெரிய ஜீரோ, நல்ல வேளை, இன்ஷூரன்ஸ் ஒண்ணு மட்டும்பெரிய அமௌண்ட்டுக்குப் பண்ணியிருக்கார். ஸ்வேதா பேர்லஅது ஒண்டிதான் வரும்.

“திஸ் மேன் இஸ் வெரி வெரி காம்ப்ளெக்ஸ்.”

*சுரேஷ் சார், நீங்க எங்க குடும்பத்தோட சம்பந்தமே இல்லாதவர்.என் டாட்டருக்கு இத்தனை உதவி செய்திருக்கீங்க. எப்படி நன்றி

“என்ன சொல்றதுன்னே தெரியலை. எப்படியாவது ஸ்வேதாவை எங்ககூடவந்து இருக்கும்படி கன்வின்ஸ் பண்ணிருங்க.”

“நான் இங்கதாம்பா இருக்கப்போறேன்.”

“ஸ்வேதா . ப்ளீஸ். இங்க யாரும் இல்லை உனக்கு. நீ டெல்லி வந்துதான் ஆகணும்.”

“இங்கதானப்பா எனக்கு எல்லாரும் இருக்காங்க” என்றாள்.

“யாரும்மா யாரு? எங்களை விட்டா உனக்கு யாரு இப்பு?”

“சொல்றேன்” என்றாள்.

நான் விரைவாகக் குறுக்கிடுவதற்கு முன் போன் ஒலித்தது.

“மிஸ்டர் சுரேஷ் இருக்காருங்களா?”

“பேசறேன்.”

“நான் எஸ்.பி. பழனிவேல் பேசறேன். கொஞ்சம் நம்ம ஆபீஸ் பக்கம் வரீங்களா. ஜீப் அனுப்பியிருக்கேன்”.

“எதுக்கு ?

“மிஸஸ் ஸ்வேதாவையும் அழச்சுட்டு வரீங்களா?”

“எதுக்கு?”

“ரவிசேகர் விஷயத்தில உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்”.

“புரியலை.”

“ரவிசேகரைக் கொன்னது யாருன்னு கண்டுபிடிச்சட்டோம்.

நாங்கள் மெளனமாக போலீஸ் நிலையத்துக்குச் சென்றபோதுமனத்தில் ஓடிய எண்ணங்களை ஸ்வேதாவுடன் பங்கிட்டுக்கொள்ளத்தயக்கமாக இருந்தது. கடன் தொல்லையால் ரவிசேகர் தற்கொலைசெய்துகொண்டிருக்க வேண்டும் என்பது புரிந்தது. ஆனால், என்ஒரு விநோதமான தற்கொலை! ஏன் இப்படிச் செய்துகொண்டார்

“முதல்ல அதைக் கொலைன்னுதாங்க நினைச்சோம். ஜன்னல் வழியா துப்பாக்கியால் சுட்டுட்டு ஆயுதத்தைக் கீழ போட்டுட்டு ஓடியிருக்காங்கன்னு நினைச்சோம். அவருக்குச் சமீபத்தில் எதிரிங்க ஏராளம். ஃபைனான்ஸ் கம்பெனியில அதிக வட்டிக்கு முதலீடு செய்துட்டு அது லிக்விடேட் ஆகி பணத்தை இழந்த நூத்துக்கணக்கானவங்கள்ல ஒருத்தர் தான்னு சுலபமான முடிவுக்கு வர ஏதுவாஇருந்தது. மாடியில் சஜ்ஜாவில் ஏறி ஜன்னல் வழியா சுட்டிருக்கலாம்லாம் பொருத்தமாகவே இருந்தது. காரணம் இருக்கு. ஆயுதம் கிடைச்சிருக்கு. ஆனா, ரெண்டு சமாசாரம் உதைச்சுதுங்க. ஒண்ணு துப்பாக்கி குண்டு பாஞ்ச ‘எண்ட்ரி பாயிண்ட்’ காயம் ரொம்ப கிட்டத்தில, அதாவது மார் மேல வச்சு வெடிச்ச அடையாளங்கள் இருக்கிறதா லாப்ல சொன்னாங்க. சருமத்திலயும் சரும ஆழத்தில ஸப்க்யூட்டேனியஸா ப்ளாஸ்ட் எஃபெக்ட், துப்பாக்கியோட மஸில்அடையாளம் காயத்தைச் சுத்தி இருந்தது. அதைவிட முக்கியம் துப்பாக்கில ரவிசேகருடைய விரல் அடையாளங்கள் இருந்ததுதான்.கைக்குட்டை வெச்சு சுட்டுக்கிட்டு இருக்காரு. ஆனா, சரியா துடைக்காததினால ‘க்ரிப்’ பில ஒரு பதிவு கிடைச்சுருச்சு”

“துப்பாக்கி யாருது! ?”

“உங்க கணவருதுதான் ! போன வாரம்தான் வாங்கியிருக்காரு |என்றார் மோகன்.

ஸ்வேதா சற்று நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“எதுக்குத் தற்கொலை செய்துகிட்டாருங்கறதுக்கு விடை இருக்கு.பிஸினஸ்ல ஏகப்பட்ட நஷ்டம், கடன் தொல்லை எல்லாத்தையும்காரணமா சொல்லலாம். இன்வெஸ்ட்டிகேஷன்போது அப்படித்தான்,சொல்ல வேண்டியிருக்கும். உங்க மேட்டரைப் போட்டுக் குழப்பம வேண்டாம்னு தீர்மானிச்சுட்டேன். அது உங்க பர்ஸனல் விஷயம்.அதில் குறுக்கிடறதுக்கு எனக்கு விருப்பமில்லை. ரவிசேகர் எப்படிப்பட்ட மனுசரு, பெண்டாட்டியை எப்படி நடத்தினாரு, இதெல்லாம் தெரியாதவரை நான் ஏதும் முடிவு பண்ணக் கூடாது.ஆனா, எதுக்காகத் தற்கொலையைக் கொலை மாதிரி தெரிய ஒரு அமெச்சூர் முயற்சி செஞ்சிருக்காருன்னு தீவிரமா யோசிச்சோம்.ஊருக்குப் புறப்படற மாதிரி பெட்டில துணிகளை வெச்சுட்டு,ஜன்னலுக்குப் போய் கர்ச்சீப் வெச்சு சுட்டுக்கிட்டு, ஜன்னலுக்குவெளியே துப்பாக்கியை எறிஞ்சு .. ஏன் அப்படிச் செய்தார்? பேசாமநாற்காலில உக்காந்துக்கிட்டு நெத்திப்பொட்டில் வெச்சு சுட்டுக்கிட்டுஇருக்கலாம்! அதான் வியப்பா இருந்தது. யோசிச்சுப் பார்த்ததில தற்கொலைனா ஒரு அவமானம் இருந்திருக்கு அவருக்கு. அதனால கொலையா காட்ட விரும்பியிருக்காரு. அதான் காரணம்….”

“இல்லைங்க” என்றாள் ஸ்வேதா. அவள் கண்களில் நீர் இயல்பாகவடிந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன்.

“பின்ன எதனாலங்கறீங்க?”

“தற்கொலைன்னா இன்ஷுரன்ஸ் பணம் எனக்கு வராது” என்றாள்.

================

சுஜாதாவின் உன்னதமான சிறுகதை/ராம் ஸ்ரீதர் பதிவு  – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)