சசிகலா விஸ்வநாதன்/விரும்பும் வேலி

சிறு நூல் வேலி தான்

அறுக்க முடியும் என்னால் எளிதாக.

சிறிதும் பெரிதுமாய் முடிச்சுகள்;

கண்ணுக்கு புலப்படாதவையும்,

கட்புலனுக்கு அகப்படாதவையுமாக.

அன்னை இட்டது சில;
அக்கம் பக்கம் இட்டது சில;

உற்றமும, சுற்றமும்,
சூழலும், சமூகமும்,

சேர்ந்து இட்ட வேலியிது.
இருக்கட்டும், அது அப்படியே!

சிலநேரம் பாதுகாப்பு,
சிலநேரம் விலங்கு.

சித்தமாய் தான் இருக்கிறேன்,

சிறு துண்டுகளாக
அறுத்துப் போட.

கூர் அறுவாள்
இரு கரத்திலும்
இருக்கிறது; என்னிடம்.

தக்க தருணத்தில்
தக்க புள்ளியில்
கூர் வாள் வீசி

வெட்டி எறிந்து கொண்டுதான் இருக்கிறேன்.

மீண்டும் உள் சென்று உள் முடிச்சிட்டுக் கொள்கிறேன்;
ஒரு பாதுகாப்புக்குத்தான்;

மீண்டும், மீண்டும் அறுத்தெறிய முடியும்
என்ற நம்பிக்கையில்!

அவளை சிறையிட்டோம் என்று நினைந்து செருக்குறாதீர்!

நீர் அறிய மாட்டீர், இது
நானே விரும்பி,இருக்கும்
சிறை; என்று.

உங்களிடமிருந்து தப்பிக்கவே தான்! நான்,

ஆயுதம் எடுக்காத வரை,
ஆபத்து இல்லை எவருக்கும்.

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/விரும்பும் வேலி”

Comments are closed.