
** *அவள்*
நன்றாக அகப்பட்டுக் கொண்டாள்; மாலதி. அன்பு இத்துணை விலங்காக மாறக்கூடுமா; அவளால் நம்ப இயலவில்லை.
முதலில் எல்லாம் நன்றாகவும், பெருமையாகவும், இன்பமாகவும் தான் இருந்தது. கணவன் எதிராஜ், தன்னை எவ்வளவு நன்றாய் பார்த்துக் கொள்கிறான்! தன்னை கூர்மையாக கவனிக்கிறான்; என்பதில் பெருமிதமே அடைந்தாள்.
அவள் முகம் சற்றே வாடினாலும்,எதிராஜ் உடனே கண்டுபிடித்து விடுவான்.. காரணம் அவனுக்குத் தெரிந்தே ஆக வேண்டும். தலை வலி என்று சொன்ன அடுத்த கணம் காஃபியும், தலைவலி மருந்துமாக முன் வந்து நிற்பான். அவள் அலை பேசியை தன் அலைபேசியோடு இணைந்திருப்பதால்; தன்னை எப்போதும் அவன், தன் பாதுகாப்பில் வைத்துள்ளதாக உணர்ந்து மகிழ்வுற்றாள். ஒரு நாள் பேருந்து தாமதமாகி அரைமணி நேரம் நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது.தொலைபேசியில் தொடர்பு கொண்ட, பத்தாவது நிமிடத்தில் அவள் முன் வந்து நின்று அலுவலகத்தில் கொண்டு விட்டது; அவள் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள்.
ஒரு நாள் ஒரு சந்தர்ப்பத்தில் தான் அவள் அறிந்தாள்; தன் சுதந்திரம் காணாமல் போனதை. அன்று அலுவலகத்தில் இருக்கும்போது அவள் அக்கா பாவனா அவளை அமெரிக்கா விலிருந்து தொடர்பு கொண்டு பேசினாள். வெளிநாட்டு போன் என்பதால்; நீண்ட நிதானமான உரையாடல்; பேச்சு ஸ்வாரஸ்யமாக போனதால் இரண்டு மூன்று முறை எதிராஜின் அழைப்பு வந்தும்; அதை ஏற்காமல் தொடர்ந்து பாவனாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
உரையாடல்முடிந்ததும், எதிராஜை தொடர்பு கொண்டாள். அவன் அவள் அழைப்பை ஏற்கவில்லை. ஏதோ வேலையில் இருப்பான், என் நினைத்துக் கொண்டு விட்டாள். எப்போதும் அவளை இல்லம் கூட்டிச் செல்ல தயாராக அலுவலக வாசலில் காத்திருக்கும் அவனைக் காணாமல், மனம் துணுக்குற்றது. மீண்டும் தொடர்பு கொள்ள அவன் அலை பேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக தகவல் சொல்லியது அலைபேசி. சிக்னல் கோளாறாய் இருக்கும்,என துடிக்கும் மனதை சமனமாக்கி இல்லம் திரும்ப, அவன் இன்னும் வீட்டிற்கு திரும்பவில்லை என்று அறிந்து, மீண்டும் அவனை தொடர்பு கொண்டாள். அலைபேசி" ஸ்விட்ச்ட் ஆஃப்" ஆக மாலதிக்கு கவலை அதிகமாகி விட்டது.
சமையல்வேலைகளை முடித்துக்கொண்டு முகம் திருத்தி முன்வாயிலுக்கு வந்து இருக்கையில் அமர மணி எட்டு ஆகியிருந்தது. டி.வியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. மனம் அதில் நினைக்காமல்,மிரண்டு, எங்கோ சுற்றி அலைந்து கொண்டிருந்தது . "என்ன செய்வது" என்ற கவலையில் மனம் ஆழ்ந்திருக்க; எதிராஜ் வந்ததும்; அவளை அழைத்ததும் அவள் அறியவில்லை.
ஏன் எத்திராஜ்! எங்கே போயிருந்தே? எனக்கு ரொம்ப கவலையாய் இருந்தது. ஏன் என் அழைப்பை ஏற்கவில்லை; போஃனையே பார்க்க வில்லையா? ஏன் எனக்கு போன் செய்யவில்லை ; என்று கண்ணில் நீர் ததும்ப பேசியவளை நோக்கி: அருவருப்பான ஒரு பார்வையை வீசினான். அவள் கையிலிருந்து அலை பேசியை வாங்கி தரையில் விட்டெறிய; அது நாலாபக்கமும் சிதறுண்டது.
அடுத்தடுத்து நிகழ்ந்தவைகள் ஒரு கெட்ட கனவு போல் இருந்தது. அவளால் இன்று வரை ஜீரணிக்க இயலவில்லை.
ஒரு வினா! ஒரே ஒரு வினா தான்; அவனிடமிருந்து, மாலதிக்கு. அவளிடம்;
“நீ இன்று பேசியது எவனிடம்?”
அவள் மனம் இருண்டது போல் அவள் எதிர்காலமும் மங்கியது. தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தாள் மாலதி; எப்போதும் தாங்கும் அவன்; எங்கோ வெறித்த பார்வையுடனும்; கோப உறுமலுடனும்.
இது நடந்து ஒரு வாரமாகி விட்டது. புது போன் வாங்கியாயிற்று. எல்லாம் வழக்கம்போல் நடக்கிறது. அவன் அவளை அன்பாக தந்தான் நடத்துகிறான். மகிழ்வுடன் கவனிக்கிறான்… எல்லாமே வழக்கம் போலவா?.
“ஆம்” என்கிறான் எத்திராஜ். மாலதிக்கு தான் மூச்சு முட்டுகிறது. தப்பிக்க தருணம் பார்த்திருக்கிறாள்
