
எங்கெங்கே உடம்பில் கயிறுகள் சுற்றி கட்டப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. யார் எதற்காக இப்படி கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்பது சுத்தமாக ஞாபகத்திற்கு வரவில்லை. உடம்பை அசைத்துப் பார்த்தாள். இம்மி அசைக்க முடியவில்லை. உதவிக்கு வாய் விட்டு கத்த நினைத்தாள். ஊஹூம் எவ்வளவு கத்திப் பார்த்தும் சப்தம் வாயை விட்டு வெளியே வரமுடியவில்லை. சுற்றி சுற்றிப் பார்த்தாள். அருகே ஒரு பெரிய கத்தரிக்கோல் கிடந்தது. இது இப்போது கைக்கு கிடைத்தால் கட்டுக்களை அறுத்தெறிந்து விடலாமென்று மனதார நினைத்தாள். அந்தக் கத்தரிக்கோல் நகர்ந்து நகர்ந்து அவளது கையருகே வந்தது.
இது தான் வாய்ப்பு என்று சிரமப்பட்டு , அதை எடுத்து ஒரு கையால் கட்டுக்களை அறுத்தெரிய ஆரம்பித்தாள். அறுத்தெறிய , அறுத்தெறிய புதிய புதிய கட்டுக்கள் அவள் உடம்பில் முளைத்துத் கொண்டே இருந்தன. அறுத்தெறிந்து அறுத்தெறிந்து கடைசியில் களைத்துப் போனாள் அவள் .
என்ன செய்வதென்று தெரியாமல் கட்டுக்களையெல்லாம் கொஞ்சம் உன்னிப்பாக பார்த்த போது தான், அவளது உடம்பில் உள்ள எலும்புகளும் கூட கட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தாள். . இன்னும் உற்று நோக்க நோக்க
எலும்புகளில் மட்டுமில்லை மனதில், இதயத்தில் , புத்தியில் என்று எங்கு பார்த்தாலும் கயிற்றால் கட்டுபோடப்பட்டிருந்தது. இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தாள். அவள் தலை சுழன்றது. ஆமாம் அவள் வீடே பெரிய கயிற்றால் தான் கட்டப்பட்டிருந்தது.
வீதிக்குப் போனால் அதுவும் கயிறால் தான் கட்டப்பட்டிருக்குமோ என்னவோ ?
” அடக் கடவுளே எத்தனை எத்தனை கட்டுக்களை கட்டியிருக்கிறார்கள் பெண்கள் மீது ?
சொல் என்றாள் ” சினந்து.
” அச்சம் , மடம் நாணம் பயிர்ப்பு கற்பு கலாச்சாரம் , அன்பு காதல், குழந்தைகள் தாய்மை பெண்மை ,பொறுமை , சக்தி ” என்று பதில் வந்து கொண்டேயிருந்தது.
“போதும் போதும் நிறுத்து
இதென்னபாஞ்சாலியின் சேலை போல வளர்ந்து கொண்டே செல்கிறது ,
ஏந்த மந்திரவாதியின் வேலை இது ?
அதைச் சொல் என்றாள் “
” கண்களை மூடிப்பார்”
கண்களை மூடி உள்ளே பார்த்தாள். அவளது பாட்டன் பூட்டனிலிருந்து கணவன் குழந்தைகள் வரை கையில் ஆளுக்கொரு கயிறை வைத்துக் கொண்டு அவளை கட்டிப் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
அளவற்ற ஆத்திரத்தில் கையில் கத்தரிக்கோலை எடுத்துக் கொண்டு ” பக்கத்துல வந்தீங்கன்னா உங்க கையை எல்லாம் அப்படியே கத்தரிச்சு போட்டிருவேன் . நீங்கள் எல்லாமே ஒரு கும்பல் தான,
ஒடுங்கடா ஒடுங்கடா என்று உரக்க கத்திய படியே அவர்களை விரட்டிப் போனாள்.
” பவானி பவானி …. ஏதாவது கனவு கினவு கண்டியா ? ஏன் இப்படி தூக்கத்துல காட்டு கத்து கத்துற ” என்று அவளை உலுக்கினான் அவளது பக்கத்தில் படுத்திருந்த அவளது கணவன்.
விழிகளைத் திறந்து
, கொஞ்சமும் ஆத்திரம் அடங்காமல் , அவனைப் பார்தது ” நீ ஒரு மோசமான திருடன் ” என்று கத்தினாள் அவள்.

Arumai ! 👏🙇♀️🙏🌺