மூவர்கள்/பி.ஆர்.கிரிஜா

லலிதா, பத்மினி, ராகினி மூவரும் மூவர்கள். ஆம். மூன்று பேரும் ஒன்றாய் ஒரே சமயத்தில் பிறந்தவர்கள். ஆங்கிலத்தில்
ஈசியாக டிரிப்லெட்ஸ் என்று சொல்லி விடலாம். இரண்டு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வந்ததால் அப்பாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு கோவளம் கடற்கரையில் குளித்து மகிழலாம் என்று கிளம்பி விட்டார்கள். அம்மாவிற்குத்தான் பயம். காலம் கெட்டுக் கிடக்கே, பெண்கள் தனியாக குளித்தால் பாதுகாப்பு இல்லையே என்று புலம்ப ஆரம்பித்தாள். “.அம்மா, டோண்ட் வொர்ரி….. நாங்க மூணு பேரும் கராத்தே , குங்ஃபூ எல்லாம் கற்று அத பிராக்டீஸ் வேறு பண்றோம் ….எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது, கவலப் படாத” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள்.
அவர்கள் மூவரும் கோவளம் வந்து சேர்ந்தனர். அழகாக உடை உடுத்தி குளிக்க ஆரம்பித்தனர். இவர்களைப் பார்த்து தைரியம் வந்து இன்னும் சில இளம் பெண்கள் புடவையோடு கடலில் குளிக்க இறங்கினர். எல்லோரும் குளித்து கும்மாளம் போட ஆரம்பித்தனர். அப்போது எதிர்பாராமல் ஒரு பெண் கொஞ்சம் உள்ளே செல்ல ஆரம்பித்து தடுமாற ஆரம்பித்தாள். மூவருக்கும் அந்தப் பெண்ணிற்கு ஏதாவது ஆகி விடும் என்று உள்ளுணர்வு சொல்லிற்று. சற்றும் தாமதியாமல் லலிதா பாய்ந்து அந்தப் பெண்ணை இழுத்தாள். மற்ற இருவரும் உடனே உதவியதால் அந்தப் பெண் பத்திரமாக கரை வந்து
சேர்ந்தாள்.
அப்பொழுது கடற்கரையில் எல்லோரையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த பெண் காவலாளி ஒருவர் இவர்களைப் பார்த்து பாராட்டி கை குலுக்கி மற்ற பெண்களிடம் அறிவுரை கூற ஆரம்பித்தார். அந்தப் பெண்ணை மூவரும் காப்பாற்றியதால் உடனே மீடியா வந்து புகைப்படம் எடுத்து மூன்று பெண்களின் சாகசச் செயல்கள் என்று மைக்கைப் பிடித்து வீடியோ எடுக்க ஆரம்பித்தனர்.
அதை உடனே தடுத்து , ” இதை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் கடமையைச் செய்தோம் என்று கூறி மூவரும் கம்பீரமாக கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
அடுத்த நாள் செய்தித்தாளில் அந்தப் பெண்ணோடு மூவரும் எடுத்த புகைப்படமும் அவர்களின் சாகசச் செயலைப் பற்றியும் செய்தி வெளியிட்டிருந்தனர்.
அப்பாவும் அம்மாவும் அவர்களை பெருமையுடன் பார்த்து
புன்னகைத்தனர்.


23/06/2024