
1
பழுதுபட்டுவிட்ட என் நினைவில் 1985 இலிருந்து 1987 -88க்குள் ஏதோ ஒரு வருடத்தில் என்னுடைய நூல் ‘பிற்கால அமைப்பியலும் குறியியலும்’ வெளிவந்தபோது மிஷேல் ஃபூக்கோவின் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய நூலாக அது இருந்தது. அதாவது ஜுன் 25, 1984இல் ஃபூக்கோ 57 ஆவது வயதில் இறந்ததிலிருந்து ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே தமிழில் ஃபூக்கோவின் சிந்தனைகள் அறிமுகமாகிவிட்டன. என்னுடைய நூலின் அதிர்ஷ்டம் அது ஒரு கல்லூரியின் முதுகலை மாணவர்களுக்கு பாடநூலாக இருந்தது; என்னுடைய நூலின் துரதிருஷ்டம் அந்த நூல் அந்தக் கல்லூரிக்கு வெளியே சுற்றுக்குக் கிடைக்காதது. அதாவது கடந்த முப்பத்தைந்து சொச்ச வருடங்களாக ஒவ்வொரு வருடமும் முதுகலை மாணவர்கள் அந்த நூலைப் பயின்று அதன் வழி அந்த நூல் அறிமுகப்படுத்திய ஃபூக்கோ, தெரிதா, லக்கான் ஆகிய சிந்தனையாளர்களை மேலே தொடர்ந்து பயின்று வருகிறார்கள். அன்றொரு நாள் ரோஜா முத்தையா நூலகத்திற்கு சென்றபோது இரண்டு பேர் அந்த நூலைத் தங்கள் பாடத்திட்டத்தின்படி படித்ததாகக் கூறினார்கள்.
———————-
2
சிறைச்சாலையின் பிறப்பு’ நூலில் ஃபூக்கோ எழுதுவார், “ஒழுங்குபடுத்தப்பட்ட உடல் என்பது பொருளாதார உற்பத்திக்காக சீரமைக்கப்பட்ட உடல்; அந்தந்த பொருளாதார பாங்கிற்கு ஏற்ப உடல்கள் ஒழுங்கமைக்கப்படும். “ஒழுங்கு இவ்வாறாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, தன்னிலை ஒடுக்கப்பட்ட மந்தமான (docile) உடல்களை உருவாக்குகிறது. ஒழுங்கு உடலின் பொருளாதார பயன்பாடு சார்ந்த சில சக்திகளை வளர்த்தெடுக்கிறது; கீழ்ப்படியாமை போன்ற வேறு சில உடல் சார் அரசியல் சக்திகளை குறைத்துவிடுகிறது. வேலை சார்ந்த உற்பத்தி சார்ந்த மனப்பாங்கினையும், பலத்தையும் அதிகரிக்கின்ற அதே வேளையில் அவற்றுக்கு எதிரான உடல் சக்திகளை கணிசமாகக் குறைத்துவிடுகிறது.” (Foucault in ‘Discipline and Punish’)
————
3
Technologies of the self
——-
ஜக்கி வாசுதேவின் விளம்பர யுடூப் வீடியோ ஒன்று பார்த்தேன் அதில் அவர் தன்னுடையது மதமல்ல, போதனையல்ல, ஆன்மீகம் அல்ல, தத்துவமல்ல, தொழில்நுட்பம் என்கிறார். உதாரணமாக நாம் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு உபயோகிப்பது போல நம் தன்னிலையை, ‘நானை’ ஏழு படிநிலைகளில் அதன் முழு கொள்ளளவுக்கு பயன்படுத்த வைக்க தன்னால் பயிற்சி கொடுக்கமுடியும் என்கிறார். அதைத் தொடரும் இன்னொரு விளம்பர வீடியோவில் மலச்சிக்கலுக்கு கொய்யாப்பழம் சாப்பிடச்சொல்கிறார்; வயிற்றுப்போக்குக்கு கொய்யா இலைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து அருந்தச் சொல்கிறார். இரண்டு வீடியோக்களும் ஒன்றோடொன்று தொடர்புடையனவா என்று தெரியவில்லை. ஆனால் அடுத்தடுத்து வந்தன.
தொடர்புடையதா தொடர்பில்லாததா என்றபடிக்கு இன்னொரு விபரம்.
மிஷெல் ஃபூக்கோ 1982 இல் வெர்மோன்த் பல்கலைக்கழகத்தில் “Technologies of the self” என்ற தலைப்பில் தொடர் உரைகளாற்றினார். அவை அனைத்தும் பின்பு புத்தகமாகத் தொகுக்கப்படுள்ளன. ஃபூக்கோவின் உரைகள் தன்னிலைக்கான தொழில்நுட்பங்கள் நம்மை எப்படி ஒரு கண்காணிப்பு சமூகத்தின் லாபமீட்டும் அடிமை அலகாக மாற்றுகின்றன என்பதை விளக்குவதாக அமைந்தன.
———
4
தன்னிலை-மற்றவை என்ற எதிர் இருமையாக இதர தத்துவவாதிகள் கட்டமைத்ததை மொழி ஊடாட்டத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொண்டுவந்ததன் மூலம் தன்னிருப்பினை அரசியலுக்கான களனாகவும் கிறிஸ்தவா மாற்றிவிடுகிறார். தன்னிருப்பு (Subjectivity) மனத்தின் உள்ளார்ந்த தளத்திற்குள் எடுத்துச் செல்லப்படுவதால் அரசு, அதிகாரம், அடையாளப்படுத்தும் செயல்பாடு ஆகியனவும் மனம்-மொழி சார்ந்த மனத்தின் உள்ளார்ந்த செயல்பாடுகளாகிவிடுகின்றன. தன்னிருப்புகளின் தொகுதிகளாக தன்னிலையை கணிக்கும்போதே எந்தெந்த காலகட்டங்களில் என்னென்ன தொகுதிகள் உருவாகி கலைகின்றன என ஃபூக்கோவினால் வரலாறுகளை புது விதமாக எழுதமுடிந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. அரசும் அதிகாரமும் ஒருவனிடத்து மேற்பரப்பின் ஒழுங்காக தன்னிலையில் செயல்படுகிறதென்றால் அதன் மற்றதான எதிர் நிலை அரசு, அதிகார எதிர்ப்பும் அடிப்பரப்பில் செயல்படுவதாக இருக்கிறது. ஒரு சமூகத்தின் நீதியும்-குற்றமும், அறமும்-விகாரமும், எழுச்சியும் -வீழ்ச்சியும், ஒவ்வொரு தன்னிருப்பிலிருந்தும் கிளம்புவதாகவே ஒவ்வொரு வரலாற்றுக்கட்டமும் அமைவதாக இருக்கிறது. வெகுஜன தளத்திலிருந்து வரலாற்றினை ஒவ்வொரு குடிமகளின் தன்னிலைக்குமாக கிறிஸ்தவா நகர்த்தியது நீட்ஷேயிடம் தொடங்கி ஃபூக்கோ, தெல்யூஸ் என்று நீளும் தத்துவ பாரம்பரியத்தின் பகுதியாகும்.
——
5
மே 6, 2024
—-
இன்று நாள் முழுவதும் எனது முன்னாள் மாணவி ஒருவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் ஆன் லைன் மிஷேல் ஃபூக்கோ கருத்தரங்கில் உரையாற்றினேன். பல்வேறு நாட்டவரும் கலந்துகொண்ட கருத்தரங்கு ஆகையால் உரையும் கலந்துரையாடலும் ஆங்கிலத்தில் இருந்தன. அறிவும் எனவே இலக்கியமும் மேலாண்மைக்கான கருவிகளா அப்படித்தானே ஃபூக்கோவின் அறிவு அதிகாரம் ஆகியவற்றுக்கான தொடர்புறுத்தல் சொல்கிறது என்பது கருத்தரங்க ஒருங்கணைப்பாளர் கொடுத்திருந்த கருதுகோள். நான் அறிவியக்கமும் இலக்கியமும் மேலாண்மையை, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கருவிகளல்ல என ஃபூக்கோவின் தொடர்புறுத்தலுக்கு எதிராக வாதிட்டேன்.
நான் என் (ஆத்ம) திருப்திக்காக வாசிப்பவன், எழுதுபவன். அதாவது நான் ஒரு அதிகாரமற்ற, ஏதிலியாக வாசிக்கிறேன், எழுதுகிறேன்; வாசிப்பை, எழுத்தை நான் பகிர்ந்துகொள்ளும்போது நான் கரம் நீட்டுவது இன்னொரு அநாமதேய கரத்தின் குலுக்கலை எதிர்பார்த்து. நாம சமமானவர்களாக கைகுலுக்கிக் கொள்ளலாமா, தோள்களில் கைகளைப் போட்டுக்கொள்ளலாமா, சேர்ந்து கொஞ்சதூரம் நடக்கலாமா, சிறிய நகைச்சுவைத் துணுக்கை, ஒரு கண் சிமிட்டலை, ஓரக்கண் புரிதலோடு கூடிய புன்னகையை பகிர்ந்து கொள்ளலாமா என்று கேட்பதற்காகத்தான். அர்த்த உருவாக்கத்திற்கான முன்னகை ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளும்போது நீங்கள் அதை இன்னும் நுட்பமாக்கி நீங்கள் என்னிடம் மீண்டும் கையளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். நான் கவிஞன், நான் எழுத்தாளன், நான் தத்துவத்தின் மாணவன் என்ற இறுமாப்பு கேவலத்திலும் கேவலமானது. எனது ரசிக குஞ்சாமணிகள் நான் எழுதுவதைக் கொண்டாடுவார்கள் என்ற நட்சத்திர அந்தஸ்து கோரல் அவமானகரமானது. எங்கே? ஒரு ஜனநாயக சமூகத்தில். முன்னோடியாக எழுதக்கூடிய கலைஞன் தன்னளவில் வாசிப்பதிலும் எழுதுவதிலும் தன்னிறைவு அடைந்தவனாக இருப்பான்; அவனுடன் கைகுலுக்கக்கூடியவர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். உலகம் முழுவதும் அப்படித்தான் இருக்கிறது நிலைமை. அதனால் குறையொன்றுமில்லை. இப்படியாக என் உரை அமைந்திருந்தது.
கருத்தரங்க முடிவில் நான் புதிய பல நண்பர்களை சம்பாதித்திருந்தேன்.
——
6
எப்ரல் 6, 2024
—-
சித்திரை விஷு வருகிறதே என்று புத்தக அலமாரிகளில் இருந்து படித்த புத்தகங்களையெல்லாம் எடுத்து பரணில் போட்டுக்கொண்டிருந்தபோது 1985-1988 இல் பிஹெச்டி ஆய்வுக்காக நான் குறிப்புகள் எழுதிய நோட்டுகள் தற்செயலாகக் கிடைத்தன; நான் அவையெல்லாம் தொலைந்து போய்விட்டன என்றே நினைத்திருந்தேன். அவற்றில் ‘பிற்கால அமைப்பியலும் குறியியலும்’ நூலுக்காக நான் சேகரித்திருந்த சுமார் 700 பக்க குறிப்புகளும் அடக்கம். அந்த நூலிலிருந்து பொதிகைவெற்பன் ஏதேனும் மேற்கோள்களைக் காட்டி என்னை அவ்வபோது tag செய்யும்போது சில கணங்கள் துணுக்குறுவேன் அப்புறம் அந்த நூல் என்னிடம் இல்லை என்று மறந்துவிடுவேன். சிலபல வருடங்களுக்கு முன்பு ‘அடையாளம்’ சாதிக் அந்த நூல் அமைப்பியலும், பின் அமைப்பியலும் பற்றி தமிழில் முதன் முதலில் வெளிவந்த நூல்களுள் ஒன்று அதை மீண்டும் பதிப்பிக்கலாம் என்று சொன்னபோது கூட என்னால் அப்போதிருந்த வேலைப்பளுவினால் ஏதும் செய்ய இயலவில்லை. கடந்த பல ஆண்டுகளில் நான் மேலும் எவ்வளவோ படித்துவிட்டேன். என்பார்வைகளும் நிறைய மாறிவிட்டன. குறிப்பாக David Macey எழுதிய Lives of Foucaultவைப் படித்தபோது , Fernand Braudel போன்றோர் எழுதுவதை வாசிக்கும்போதெல்லாம் நானும் இப்படியெல்லாம் எழுத மாட்டேனா என்ற ஏக்கம் தோன்றியது உண்மை. இப்போது என்னுடைய பழைய நோட்டுப்புத்தகங்கள் கிடைத்துவிட்டபடியால் ஃபூக்கோ, தெரிதா, லக்கான் மூவரைப் பற்றியும் தன்னிதனியாக 300 பக்க அளவில் மூன்று நூல்கள் எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். பார்க்கலாம் எப்படிப் போகிறது என்று.
இப்பதிவுக்கு ‘விட்ட குறை தொட்ட குறை’ என்று தலைப்பு வைக்கலாம் என்றிருந்தேன்; ஆனால் ‘விட்டேனா பார்’ என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

