அழகியசிங்கர்/பச்சைப் பக்கெட்டும் சிவப்புப் பக்கெட்டும்…

குளியலறையில்
இரண்டுக்கும்
போட்டாபோட்டி

பச்சைப் பக்கெட்டைத்தான்
எல்லோரும் பயன்படுத்துவார்கள்

சிவப்புப் பக்கெட்டைப்
பார்த்து கர்வமாய்ச் சிரிக்கும் பச்சைப் பக்கெட்

நான்
வெந்நீரில்தான்
குளிப்பேன்
எப்போதும் பச்சைப்
பக்கெட்டைப் பயன்படுத்துவேன்

குளிக்கும்போது
சிவப்புப் பக்கெட்டைப்
பார்த்தபடியே
குளிப்பேன்

நானும் மனைவியும்
வீட்டில் என்பதால்
பச்சைப் பாக்கெட்டுக்கு
ஜே..ஜே..

துக்கத்துக்குப் போனால்
சிவப்புப் பக்கெட்டில்
உடுத்தியிருக்கும்
துணிகளைக் கழற்றிப் போட்டு
தண்ணீரில் ஊற வைப்போம்

அன்று மட்டும் கர்வமாய்ப்
பார்க்கும் சிவப்புப் பாக்கெட்

நாங்களிருவரும்
ஊருக்குப் போனால்
இரண்டு
பக்கெட்டுகளும் சும்மா
இருக்கும்
ஒன்றைப் பார்த்து
ஒன்று புன்னகைக்கும்..