
குருவாயூர் கோயிலில் இன்று நல்ல கூட்டம். என்று கூட்டமில்லாமல் இருக்கிறது? தினம் தினம், அலை அலையாய் மக்கள், சின்னக் கண்ணனை கண்ணாரப் பார்த்து; கண்ணீர் மல்கி,மெய்யாற தழுவி, புளகாங்கிதம் அடைகிறார்கள்.
நானும்; இதோ, காலம் சென்ற என் தாயாரின் அந்திம வேண்டுதல் இச்சையை பூர்த்தி செய்யத்தான் வந்துள்ளேன்.
"கோமளி! நீ நாராயணீயம் நன்றாகக் கற்று தேர். அகத்தில் ஒரு நாள் முழுவதுமாக பாராயணம் பண்ணி பால் பாயசம் வைத்து கண்ணனுக்கு நேவித்யம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடு. அடுத்து நீ குருவாயூர் சென்று கோவிலில் ஒரு முறை அவனை மனக்கண்ணால் கண்டு தரிசனம் செய். சந்நிதியில் கூட்டமாய் இருக்கும். விடமாட்டார்கள். கொடிமரம் பக்கம் இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து சொல். இது என்னால் செய்ய இயலவில்லை ; நீயாவது என் வேண்டுதலை முடித்து வா" என்றாள்.
"சரிம்மா" என்று எளிதாக சொல்லிவிட்டேன். ஆயிரத்து
சொச்சம் பாசுரங்களையும் கற்று தேர்வதற்கு வருடம் மூன்றாகி விட்டது. அகத்தில் அம்மா சொல்படி பூஜை முடித்து ஆறுமாதம் கழித்துதான் கோயிலுக்கு வந்து நான்கு நாட்களில், அந்தியும், சந்தியும் நாரயணீயத்தை முழுவதுமாக பாராயணம் செய்து முடித்தேன்.
இப்போது வயதானவர்கள் செல்லும் வரிசையில் நின்று கொண்டு தரிசனம் செய்ய காத்திருக்கிறேன். மெதுவாக வரிசை நகர ஒரு வழியாய் கமலக்கண்ணனை எனது எழுபத்துநாலாவது வயதில் தரிசனம் செய்தேன். இனி என்னால் இங்கு வரமுடியுமா; என்று அறியேன்.
கிருஷ்ணா! என்னால் இனி இங்கு வரமுடியுமா? நீ என்னுடன் வந்து விடேன்! ” என்று யாசித்தேன். எனக்கே சிரிப்பு வந்துவிட்டது; என் அறியாமையை எண்ணி! ஆயினும் மனதால் அந்த குட்டி கண்ணனை பாவனையாய் என் கையில் தாங்கி, தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டேன்.
அறைக்கு வந்து பேருந்து பிடிக்கக் கிளம்பினேன். அருகிலிருக்கும்” “ராமகிருஷ்ணா வில்” ஒரு காஃபி சாப்பிட்டுக் கிளம்பலாம் என்று என்னவர் சொன்னார்.
இளம் தம்பதிகள் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். எதிர் இருக்கைகள் காலியாய் இருக்க; அங்கே போய் அமர்ந்தோம்.
அவர்கள் ஶீ வில்லிப்புத்தூரிலிருந்து வந்திருக்கிறார்கள்; என்று பேச்சு வாக்கில் அறிந்து கொண்டோம்.
திடீரென”ஆட்டோ வந்துடுத்து; நாங்க கிளம்பறோம்” என்று சொல்லிவிட்டு வேகமாய் கிளம்பி விட்டார்கள். அவர்கள் போனபின்தான் பார்த்தோம். ஒரு அட்டைப் பெட்டி பார்சலை அங்கேயே மறந்து வைத்த விட்டுப் போனதை.
என்னவர் ஓடிப்போய் அவர்களிடம் கொடுக்க பிரயத்தனம் செய்தார்.ஆட்டோ போயே போய் விட்டது.
நான் அதில் அப்படி என்ன இருக்கும் ஆவலில் பிரித்தால், பஞ்சலோகத்தில் அழகிய கிருஷ்ணன் சிலை! என் ஆனந்தத்தை சொல்லால் வடிக்க இயலாது. கண்ணனை என் இல்லத்தில் எழுந்தருளப் பண்ணியுள்ளேன். கடந்த ஒரு வருடமாக என்னுடன் கூடத்தான் அவன் இருக்கிறான், அவன்.அடுத்த முறை நீங்கள் பெங்களூர் வந்தால், அவசியம் அவனை தரிசனம் செய்ய என் இல்லத்திற்கு வாருங்கள்.
