
பாரஸ்ட் ரோடைத் தாண்டி புதிய பேருந்து நிலையத்திற்கு போகிற ஒற்றைச் சாலையில் வண்டி திரும்பிய போது, ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்த மஞ்சள் நிற உருவம் அசைந்தது விநோதமாக அவன் கண்களுக்குத் தெரிந்தது.
ஏதோ முள் வேலிக் கம்பியிலேயே சோளக்கொல்லை பொம்மையை நிறுத்தி விட்டார்கள் போல என்று தான் நினைத்தான். ஆனால் அருகில் செல்லச் செல்ல அது ஒரு அதி அழகிய பெண்ணாக வடிவெடுத்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் அவனுக்கு உற்சாகத்தில் தலை கால் புரியவில்லை.
இன்னும் சற்று பக்கமாக நெருங்கியதும் ,அந்த உருவம் கை அசைத்து , அவனை அருகே அழைத்தது .
.அவன் பரவசத்தில் அதிர்ச்சியடைந்து கண்களை ஒரு கையால் நன்றாக தேய்த்து விட்டான் .” சாயந்திரம் அடிச்ச சரக்கு போதை இன்னும் இறங்கலை போல இருக்கு ” என்று அவனாகவே நினைத்துக் கொண்டான்..
பைக் தானாக நின்று விட்டது. அவள் உண்மையிலேயே அவனிடம் லிப்ட் தான் கேட்டாளா என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. சந்தேகமெல்லாம் அனாவசியம் என்பது போல சட்டென்று அவள் பைக்கில் பின்னால் வந்து தொற்றிக் கொண்டாள். சட்டென்று பிச்சிப்பூ வாசம் அவன் நாசியை
நிறைத்தது.. சுவாசத்தை உள்ளிழுக்க , உள்ளிழுக்க பாதி மயக்க நிலைக்குப் போவது போல் இருந்தது அவனுக்கு.
அவளை பார்க்க ஆசை கொண்டு கண்னாடி வழியாக அவளைப் பார்த்தான் பில்லியன் காலியாக இருந்தது.. உடம்பு முழுவதும் குப்பென்று வியர்க்க , மறுபடியும் அவசரமாக பின்னால் திரும்பிப் பார்த்தான். அவள் . வசீகரமாகச் சிரித்தபடி ஒயிலாக அங்கே அமர்ந்திருந்தாள்.” சத்தியமா மப்பு இன்னும் இறங்கலை தான் போலிருக்கு ” என்று நினைத்தபடியே வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பொதுவாக
“எங்கே போகனும் ” ? என்று கேட்டான்.
“நீங்களே சொல்லுங்க ” என்றாள்.
இப்படியே. நேராப் போனா இந்த ரோடு புது பஸ் ஸ்டாண்டுக்குப் போயிரும். , ஆனா பாரஸ்ட் ரோட்டுலயிருந்து ரைட்ல போனா , முனிச்சாலை வரும் அடுத்து ரெண்டு கிலோ மீட்டர்போனா புளியந்தோப்பு வந்திரும். அங்க யாரும் இருக்க மாட்டாங்க ” என்றான் அவன்.
” அப்டின்னா அங்கயே போகலாம் ” என்றாள் அவள்.
அவனுக்கு அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை.
” என்ன பேச்சையே காணோம் “
“இல்லை உங்களை இந்தப் பக்கம் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை. புதுசா இருக்கு “
” இப்பத் தான இங்கே வந்திருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் இந்தப்பக்கம் தான் இருப்பேன். “
“அப்ப நாளைக்கும் நாம சந்திக்கலாமா”?
” இருந்தா சந்திக்கலாம் “
“என்னது ?”
” நேரம் இருந்தா சந்திக்கலாம் அப்டின்னு சொன்னேன். “
“ஓ… நீ அவ்வளவு பிஸியா இருப்பியா ?
ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு பாரு … நீயே நாளைக்கு நாம மறுபடியும் சந்திக்கலாமான்னு என்கிட்ட கேட்கப்போற ” என்றான் பெருமையாக.
” ஓஹோ அப்படியா அதையும் பார்க்கலாம் ” என்றாள் ஒரு அர்த்தமான புன்னகையுடன்
“ஆமா நீ யாரு உன்னை இதுக்கு முன்னாடி பார்த்ததேயில்லையே”?
” உண்மையை சொல்லவா . பொய்யை சொல்லவா ? “
” உண்மையை சொல்லு””
“அதுவும் சரிதான் உங்ககிட்ட உண்மையைச் சொல்லலாம் தப்பில்ல . என்னா அடுத்து நாம தான் சந்திக்கப் போறதில்லையே ” என்றாள்.
“உன் பேச்சு ஒன்னுமே புரியலை. அடிச்ச சரக்கெல்லாம் கிர்ர்ன்னு தலைகீழா இறங்கி வர்ற மாதிரி இருக்கு. தயவு செஞ்சு கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுறியா”. ? என்று கேட்டான்.
“விளக்கமாகவே சொல்றேன் “என்று ஆரம்பித்தாள்.
” சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னால . சந்தியான்னு ஒரு பொண்னு பக்கத்தில இருக்கிற அரசு மருத்துவமனையில நர்ஸா வேலை பார்த்துக்கிட்டு இருந்தா. வீடு ரத்தினம் நகர் பக்கம். அன்னிக்கு டே டூட்டி முடிஞ்சதுக்கப்புறமும் உடனே அவளால வீட்டுக்குப் போக முடியலை. எமர்ஜென்சியா ஒரு மேஜர் ஆபரேஷன முடிக்க வேண்டியதிருந்தது. ஆபரேஷனை முடிச்சிட்டு கிளம்புறதுக்கு , நைட் பத்து மணிக்கு மேல ஆயிருச்சு. ஒரு ஆட்டோ வ பிடிச்சு புது பஸ் ஸ்டான்ட்டுக்கு போக சொன்னா. ஆனா போகும்போதே , அடுத்த ஸ்டாப்புல இரண்டு பேர் கை நீட்டி ,ஆட்டோவை நிறுத்துனாங்க. அவ டிரைவர் கிட்ட ஆட்டோவ நிறுத்த வேண்டாம்னு சொன்னா.. ஆனா அவன் கேட்கல.
” அப்புறம் “
” ஆட்டோவுல ஏறுன அந்த ரெண்டு பேருகிட்டயிருந்தும் மோசமான சாராய வாடை வந்தது. அவர்களுடைய மட்டமான பார்வையும் , பல் இளிப்பும் அவளுக்கு ஏதோ விபரீதமாகப் பட்டது. சரி இறங்கிக்கலாம்னு நினைச்சு டிரைவரிடம் ஆட்டோவை நிறுத்தச் சொன்னாள். ஆனா அவன் நிறுத்தலை. . அது மட்டுமில்லை.
. ஆட்டோ மெயின் ரோட்டுல போறதுக்குப் பதிலா , வலது பக்கம் திரும்பி ஒத்தையடிப் பாதையில் இறங்கி பாரஸ்ட் ரோடை நோக்கி ஒடுச்சு. அவ சத்தம் போட்டு கத்த முயற்சி பண்ணா.. ஆனா அதுக்குள்ள அவுங்க அவ முகத்துல மயக்க மருந்தை வச்சு கர்சீப்பால அழுத்திட்டாங்க. அடுத்து என்ன நடந்ததுன்னே அவளுக்கு தெரியாது .
” கேட்கறிங்களா” ?
” ம் ம்…”
” நடு இராத்திரியிலதான் அவளுக்கு கொஞ்சம் சுய நினைவு வந்துச்சு. ஆனா , அந்த மூனு மிருகங்களும் சேர்ந்து அப்பவும் அவளை கொடூரமா வேட்டையாடிக் கொண்டிருந்தது அவளுக்குத் தெரிந்தது. ஆனா அவள் ரொம்பவும் பலவீனமா இருந்ததால , தடுக்க முடியலை. மறுபடியும் மயங்கிப் போயிட்டா.
மீண்டும் அவளுக்கு மயக்கம் தெளிஞ்சு நினைவு திரும்பினப்போ , அந்த மூன்று மிருகங்களும் சேர்ந்து , பக்கத்துல வயல்ல ,வேலியடைக்கப் போட்டிருந்த இரும்பு முள் கம்பியால அவளோட கழுத்தைச் சுற்றி இறுக்கி கட்டிக் கொண்டிருந்ததை அவள் உணர்ந்தாள்.
, அவளால கத்தக் கூட முடியலை. கண்ணீர் மட்டும் தான் விட முடிஞ்சுது. அவுங்க கம்பியால கழுத்தை இறுக்கி இறுக்கி அவளை சாகடிச்சாங்க. அவ உயிர் போனதும் அப்படியே அங்கயிருந்த கிணத்துக்குள்ள அவ உடம்பை கல்லை கட்டி தூக்கிப் போட்டுட்டு போயிட்டாங்க .
இப்பதான் அவ அந்த மிருகங்களை பார்த்திருக்கா இனி ஒவ்வொருத்தரா கணக்கு தீர்க்கனும்ல .. ” என்றாள்.
பிறகு அவனைப் பார்த்து ” என்ன கதை நல்லாயிருக்கா ?” என்று காடு அதிர சிரித்தாள்.
இதைக் கேட்டதும் அவனுக்கு முதுகுத் தண்டு சில்லிட்டுப் போனது. இதயம் வாயோடு வந்து ஒட்டிக் கொண்டது போல உலர்ந்து போய் விட்டது.. வார்தைகள் வரவில்லை தட்டுத் தடுமாறி குழறியபடியே
. ” ஏய் அப்டின்னா நீ தான் அந்த நர்ஸா நீ இப்ப பேயா ?” என்று கேட்டான்.
” ஆமாடா நீ தான அன்னிக்கு என் முகத்துல மயக்க மருந்து கலந்த கர்சீப்பை வச்சு அழுத்துனவன். நீ தான நான் வலியால துடிக்க துடிக்க இரும்பு முள் கம்பிய வச்சு என் உடம்பெல்லாம் முறுக்கி கொடூரமா சாகடிச்சவன் வா.. வா மறுபடி நாம அதே தோப்புக்கே உல்லாசமா போகலாம் ” என்று கத்தினாள்..
அவன் அலறியபடி பின்னால் திரும்பி பார்த்தான். பில்லியனில் அவள் இல்லை. பைக்கை நிறுத்த முயற்சித்தான். முடியவில்லை . கை கால்களை அசைக்க முயற்ச்சிதான் ம்ஹூம் சுத்தமாக
முடியவில்லை. அதற்குள் அவன் முதுகு தண்டில் சுருக்கென்று ஒரு வலி பிறந்தது. அப்படியே துடி துடித்துப் போனான் . இப்போது முதுகை பிளந்து கொண்டு , ஒவ்வொரு முள் கம்பியாக மேல் ஏறிச் சென்று ,அவனது உச்சந் தலையிலிருந்து பாதம் வரை ஒவ்வொரு பாகமாக இறுக்கி கட்ட ஆரம்பித்தது. இனி அவனால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நொடியில் |
முன்னால் பார்த்தான். அவள் ஒரு பறவை போல முன்னால் நீந்திச் சென்று கொண்டிருந்தாள்.
