
மிகச் சின்னஞ்சிறு வயதில் அந்த மருத்துவர் வீட்டருகே திரும்பத் திரும்பப் போய் கோபத்தோடு காத்திருந்த நாட்கள் நினைவில்.
ஆனால், அதைத் தவிர்த்து இன்றளவும் மருத்துவர்கள் பலரோடு நெருங்கிப் பழகவும், அன்பான மருத்துவர்களோடு காதல் நோயாளனாக லயித்திருக்கவும் வாய்த்திருப்பது மகிழ்ச்சியளிப்பது. நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்துகொண்டிருக்கும் எண்ணற்ற மருத்துவர்களை வாழ்த்தி மகிழ்வோம் இந்நாளில்.
சென்னை மயிலையில் வாழ்ந்த இளமைக் காலத்தில் தந்தைக்கு ஆங்கில வைத்தியர், சித்த வைத்தியர் இருவரது பரிச்சயமும் இருந்ததுண்டு. கதவில் விளையாடுகையில் இரும்பாணி காலில் குத்திக் கிழித்தபோது ஆங்கில மருத்துவரிடம் அழைத்துப் போய் ஊசி போட்டு அழைத்துக் கொண்டு வந்து மடிமீது போட்டுக் கொண்டிருந்தார் என்னை, என் தந்தை. எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்த ஒரு மருத்துவரை (சோடா பாட்டில் கண்ணாடி போட்டிருப்பார்) சோ டாக்டர் என்று அழைப்பார் என் தந்தை.
வேலூர் வாசத்தில் நாங்கள் குடியிருந்த கட்டை சுபேதார் தெருவிலேயே பிரகாசம் டாக்டர். அருமையான மனிதர். கவர்ன்மென்ட் பென்ட்லாண்டு மருத்துவமனையிலும் அவரைப் போய்ப் பார்த்து வந்ததுண்டு. ஆறாம் வகுப்பு படிக்கையில் கன்னத்தில் ஏதோ சிறிய பொறி இருக்கக் கண்டு அவரிடம் போய்க் காட்டியபோது, ஏதோ மருந்து தடவி, சிறிய ஊசியால் கீறி உணர்ச்சி இருக்கிறதா, வலிக்கிறதா என்று கேட்டார். பிறகு அவர் கேட்ட கேள்வி புரியாமல், காஞ்சிபுரத்தில் இருந்த என் பாட்டிக்கு நான் அஞ்சல் அட்டையில் எழுதிக் கேட்ட கேள்வி, நம் குடும்பத்தில் யாருக்கேனும் பெருவியாதி இருந்ததா ! அலறியடித்துக் கொண்டு என் பாட்டி வேலூர் வந்துவிட்டார் அடுத்த நாள்.
காஞ்சிபுரத்தில் வடக்கு மாட வீதி ராஜகோபாலன் மருத்துவர் என் அண்ணன் ரங்கராஜனின் ரசனைக்குரியவர். சட்டைக் கையை உயர்த்த தாமதம் செய்தால் அப்படியே துணியை ஊடுருவி ஊசி போட்டு அனுப்பி விடுவார் என்று அவரை நையாண்டி செய்வான். நகராட்சி எளிய மருத்துவமனை எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. வீட்டுத் திண்ணையிலிருந்து குதிக்கும் போது வாசல் படியில் நெற்றி மோதிக் கொள்ள அங்கே தான் தையல் போட்டுக் கொண்டு குணப்படுத்திக் கொண்டது. இனிப்பான சிரப் ருசிக்கவே, கொஞ்சம் இருமினாலே அங்கே போய் வருவதுண்டு.
கல்லூரி காலத்தில், மாம்பலம் குப்பையா தெருவில் டாக்டர் சுந்தரராஜன் (இப்போது அந்த இடத்தின் தடயம் கிடையாது, எப்போதோ அப்பார்ட்மெண்ட் வந்தாயிற்று), அன்பின் அன்பான மனிதர். அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தாலே நோயில் பாதி குணமாகிவிடும் போலான ஓர் அன்பு. அவருடைய மகன் சீனிவாச கண்ணன், மருமகள் (மயக்க இயல் மருத்துவர்) மைதிலி அதே போலவே அன்பான மருத்துவர்கள்.
முதுநிலை கல்வி நாட்களில் ஓயாத இருமலுக்காக ஆறு மாதங்கள் பழங்கள் கூடாது, பால் கூடாது, கீரை கூடாது, நெய் கூடாது என்று எழுதிக் கொடுத்தார் கோவையில் ஒரு மருத்துவர். ருக்மணி சித்தி அப்போது கோவை வந்திருக்கவே, அவள் தான் என்னோடு மருத்துவரைப் பார்க்க வந்தவள். ‘என்ன டாக்டர் எங்க பையனுக்கு பால் கூடவா கொடுக்கக் கூடாது?’ என்று கவலையோடும் சந்தேகத்தோடும் கேட்டாள் சித்தி. ‘உங்க பையனுக்கு பாலிடால் கொடுப்பீங்களா?’ என்றார் அந்த மருத்துவர். ஈஸ்வரா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு என்னை வெளியே அழைத்து வந்துவிட்டாள் சித்தி.
வங்கனூரில் பணியாற்றுகையில் 1984 மே தினக் கொண்டாட்டம் முடிந்த இரவு, என் வேட்டியும் சிவப்பாகி இருந்தது. தொண்டை கட்டிக்கொண்டுவிடக் கூடாது என்று குவளை குவளையாக வெந்நீர் குடித்திருந்தேன் அன்று மாலை முழுவதும். ஏற்கெனவே இருந்த பிரச்ச்சனை இன்னும் தீவிரமாகி பைல்ஸ் காரணமாகப் படு அவதியோடு எழுந்தேன் அடுத்த நாள் விடியலில். டாக்டர் சீனிவாச கண்ணன் அறிவுரைத்தபடி வி ஹி எஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை. ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்கையில், கண்ணீர் மல்க என் தந்தை ஸ்ட்ரெச்சர் பிடித்துக்கொண்டு வந்தது மறக்க முடியாதது. அப்போதுதான் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார் அவர்.
1991இல் என் இணையர் தான் ஹோமியோபதி மருத்துவம் பக்கம் என்னை நகர்த்தியது. அற்புதமான மருத்துவ இணையர்களைக் கண்டடைந்தோம் நாங்கள்: மருத்துவர்கள் பிவி வெங்கட்ராமன் – எஸ் ஜெகதா!
வாழ்க்கை இணையாக தோழர் ராஜேஸ்வரியைக் கண்டடைந்த அதே காலத்தில் எனக்கு விளைந்த கூடுதல் நன்மைகளுள் அருமையானது தான் மருத்துவர் பி வி வி அவர்களது தோழமை. ‘உங்களது உடல் நலம் குறித்த விஷயங்களுக்கு ஓமியோபதி மருத்துவர் பி வி வெங்கட்ராமன் அவர்களை பார்க்கலாமே என்று ராஜி, திருமணத்திற்கு முன்பே என்னிடம் ஒருமுறை சொன்னார். பி வி வி பெயரை அவருக்குச் சொன்னவர் அவரது நெருங்கிய தோழி சி பி மல்லிகா, அஞ்சல் ஊழியர்கள் தொழிற்சங்கத் தலைவராகத் திகழ்ந்த மார்க்சிய தத்துவ ஆசிரியரான தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் அவர்களுடைய மகள்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெரியார் சாலையில் ஒரு மாடியில் இருந்த ஓமியோ கிளினிக்கில் வைத்து பி வி வி அவர்களை முதன்முறையாக சந்தித்த நாள் மறக்க முடியாதது. அதிகம் பேசாது, அதிகம் கூர்ந்து கேட்பவராக, அறிந்து கொள்பவராக, நுட்பமான நகைச்சுவை உணர்வுள்ளவராக – எல்லாவற்றுக்குமேலாக, தேர்ச்சியான இலக்கிய பரிச்சயமிக்கவராக மிகச் சிறிய பொழுதிலேயே எனக்கு நெருக்கமாகிப் போனார் அவர். மூன்று மூன்று உருண்டைகளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி என்னிடம் அவர் தந்த மருந்துக் குப்பியை அவர் எதிரிலேயே திறந்து மூன்று மாத்திரைகளை விரல்களால் தட்டி எடுக்கப் போகவும், மேசை மேல் மொத்த மாத்திரையும் கொட்டிவிட, நான் சங்கடத்தோடு பார்க்க, சற்றும் அசராமல், ‘எடுக்கவோ, கோக்கவோ’ என்று கர்ணனிடம் கேட்ட துரியோதனன் போல, அவரே அத்தனை மாத்திரைகளை எடுத்து மேசையின் கீழிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, சளைக்காமல் இன்னொரு குப்பியை எடுத்து மாத்திரைகளை நிரப்பி, அன்போடு கொடுத்தார். மேலும் நெருக்கமாகிப் போனோம் இருவரும்.
உடல் நலமும் உள நலமும் எத்தனை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதைப் பின்னர் எத்தனை எத்தனை சந்திப்புகளில் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது! அண்மையில் வாசித்த புத்தகம், பார்த்த நூல் அறிமுகம், கேள்விப்பட்ட புதிய புத்தகம் பற்றிய குறிப்புகள் இராது எந்த சந்திப்பும் நிறைவடைவதில்லை என்றானது. எதை வாசித்தாலும், பகிர்ந்து கொள்ளும் வரிசையில் அவருக்கான இடம் முக்கியமானது. அவரது குறிப்புகள் வைத்து நான்கு நூல்கள் எழுத முடிந்தது பெருமைக்குரிய அனுபவம்.
பி வி வி அவர்களது இணையர் மருத்துவர் எஸ் ஜெகதாவும் ஒரு புத்தகக் கொண்டாடி . குடும்ப மருத்துவர்கள் என்பதை விடவும், குடும்ப நண்பர்களாக உருப்பெற்ற உறவின் அடிப்படையில் பரஸ்பரம் சமூகம் குறித்த பார்வை, அரசியல் நோக்கு, நூல் வாசிப்பு இவை வலுவாக அமைந்திருப்பது இந்த நட்பின் சிறப்பு. மட்டுமல்ல, இவர்கள் மூலம் மாநகரின் பல முக்கிய மருத்துவர்களது அறிமுகமும் வாய்த்துக் கொண்டே இருப்பது இந்த அன்பின் கொடை.
மருத்துவர் பிவிவி மூலம் கிடைத்தது அந்தப் புத்தகம். அதில் ஆழ்ந்து ததும்பி இருக்க வாய்த்தது அந்த நூலாசிரியர் நட்பு. தூங்காமல் தூங்கி எழுதியவர், சொல்லாமல் நிரந்தர உறக்கத்தில் ஆழ்ந்து அலைமோத விட்டவர் மயக்க இயல் மருத்துவர் மாணிக்கவாசகம். பழகிய மிகக் குறுகிய காலத்தில் அந்த அலைபேசி உரையாடல்கள், அவரது இலக்கிய வார்ப்பான ஆறு கடிதங்கள், இரண்டாம் பதிப்பின் அறிமுகத்தில் அவர் பொறித்து வைத்துப் போயிருக்கும் பேரன்பு வாசகங்கள் மாணிக்க வாசகங்கள்! ‘மாணிக்கம் உங்களிடம் தான் இதயத்தைக் கொடுத்தான்’ என்று எழுத்தாளர் வண்ணதாசன் மருத்துவரது முதலாம் நினைவு நாளில் சொன்னது கண்ணீரைப் பெருக்கியது. மருத்துவரது மனைவியும் குடும்பமும் தொடர்ந்து பாராட்டும் அன்பு இரந்து கோள் தக்கதுடைத்து.
மணிபால் பல்கலை முன்னாள் துணை வேந்தர், இருதய நோய் சிறப்பு மருத்துவராக உலகப் புகழ் பெற்ற பி எம் ஹெக்டே அவர்களது பேரன்பு வாய்த்தது பிவிவி அவர்கள் மூலம் தான். நிறைய மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துவந்த என் மாமியாருக்காக அவரைச் சென்று பார்க்கையில், அதிக பின் விளைவுகள் அற்ற ஒற்றை மாத்திரை அறுபது மில்லி கிராம் மட்டும் இரவில் எடுத்துக் கொண்டால் போதும் என்று தற்காத்துத் தந்தவர். பிறகு நிறைய பேருக்கு அவரது உதவி கிடைக்க வைத்தது. அவரது ஆங்கில நூல், விகடன் பிரசுரமாக ‘உள்ளங்கையில் உடல் நலம்’ எனும் பெயரில் கொண்டு வந்தார் மருத்துவர் பிவிவி. அதன் வெளியீட்டு விழாவில் மருத்துவர் ஹெக்டே அவர்களது பாராட்டு பெறும்வண்ணம் பேசக் கிடைத்த வாய்ப்பு மறக்க முடியாதது. தனது உற்ற நண்பர் லண்டன் வாழ் லினஸ் அலோஷியஸ் (இலங்கை) அவர்களது நட்பு வாய்க்கச் செய்தார்.
மருத்துவர் பிவிவி மூலம் கண்டடைந்த மருத்துவர் சுரேந்திரன் அவர்களை என் வாழ்வில் கடவுள் என்றே கொண்டாடுவேன். பித்த நீர்ப் பை பிரச்சனை காரணமாக அவரை அணுகியபோது என்னைத் தடுத்தாட்கொண்ட கடவுள் அவர். இயற்கையாக உடல் தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கு…இப்போ எதற்கு கத்தி வைக்கணும்… பார்த்துக் கொள்ளலாம் என்ற அவரது சொற்கள் 2017 மார்ச் மாதத்தில் கேட்டது, இப்போது சொல்வதுபோல் ஒலிக்கிறது காதில். கொரோனா காலத்தில் தனது மருத்துவ அனுபவங்களை நெகிழ வைக்கும் சிறுகதைகளாக எழுதி இருக்கும் அவர் ஓர் இலக்கிய நேயர். நேர்மையின் நெருப்பு வடிவம். எளிமையின் உருவகம். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அதிகார பீடங்களுக்கு எதிராக நின்ற அவரது துணிவுமிக்க போராட்டக் கதை ஒன்று கேட்கக் கிடைக்கும். வியப்பு மேலும் விரிவடைந்து போகும்.
கடந்த ஆண்டு மும்பை சென்றது உறவினர் இல்லத் திருமணத்திற்கு. மறுநாள் மாநகரத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்கையில் நேரு மியூசியத்தில் இசைப்பலகையை என் கவனப் பிசகு விசைப்பலகையாக்கி விழ நேர்ந்து இடது கை எலும்பை முறித்துக் கொண்டேன். அங்கிருந்து உரிய மருத்துவமனைக்குச் சென்று நுழையும்போது எனக்கு உதவுவதற்காக வாசலில் வந்து காத்திருந்தவர் புது மணப்பெண் டாக்டர் அம்ரிதா! இரவின் விளக்கு வெளிச்சத்தில் அவரது கைகளில் மெஹந்தி ஒளிர்ந்து கொண்டிருக்க, எனக்கு நம்பிக்கை அளித்து நல்லபடி குணம்பெற அவர் எடுத்துக் கொண்ட அந்த நேரத்து அக்கறை ஒருபோதும் மறக்க முடியாதது. அங்கே எனக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டுப் போட்டுவிட்ட இளம் மருத்துவர் அநிருத்தா கடம் அவர்களிடம், நான் நாளை தான் உங்களூரில் இருந்து பேக் செய்து புறப்பட வேண்டும், இன்றே முழுக்க பேக் செய்து விட்டீர்களே என்றேன். ‘உங்களுக்கு வலி ஒரு பொருட்டே இல்லையா…எப்படி இயல்பாக ஜோக் சொல்ல முடிகிறது’ என்று வியந்து கேட்டார்.
சென்னையில் ஸ்பாட் மருத்துவமனை மருத்துவர் ரமேஷ் பாபு அவர்களை இந்த ஆண்டு மார்ச் 6 அன்று அழைத்து, டாக்டர் கடந்த ஆண்டு இதே நாளில் எனக்கு அருமையான அறுவை சிகிச்சை செய்து இடது கை குணப்படுத்தி வைத்தீர்கள், நன்றி என்றேன். சார், சர்ஜரிக்கு எல்லாம் ஆனிவர்சரி கொண்டாடும் ஒருவரை இப்போது தான் பார்க்கிறேன் என்று புன்னகை செய்தார். பிஸியோதெரபி செந்தில் அவர்களும் அதே வார்த்தைகள் சொன்னார்.
கண் மருத்துவர் ரமேஷ் காதல் புன்னகை பூக்கும் கண்கள் அமையப்பெற்றவர். மெயிலில் படித்த கட்டுரைகள், கவிதைகள் குறிப்பிட்டு வாழ்த்திவிட்டுத் தான் கண்களைப் பார்ப்பார். நான் கூட நினைத்துக் கொள்வேன், பெருமையில் இன்புற்று இருக்கும் எனது கண்கள் தனது குறையை அவரிடம் எப்படி தெரிவிக்கும் என்று! காது மருத்துவர் இராமகிருஷ்ணன் சுவாரசியமான மனிதர்.
நண்பன் சந்திரமௌலி (அழகியசிங்கர்) சொல்லி அறிமுகமான மருத்துவர் ஜெ பாஸ்கரன், நரம்பியல் மற்றும் தோல் சிகிச்சை சிறப்பு மருத்துவர். ஓர் அருமையான எழுத்தாளரும் கூட. சிறந்த அன்பு கொண்டாடி. குழந்தைகள் நல மூத்த மருத்துவர் கரூர் ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பாராதே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அன்பு பொழிந்து வந்தவர், 2022 புத்தக தினத்தில் போய்ப் பார்த்த நெகிழ்ச்சியான கணங்கள் மறக்க முடியாதவை. கடுமையான உடல் வலிகள் பொறுத்துக் கொண்டு வாட்ஸ் அப்பில் அனுப்பும் படைப்புகள் பற்றி ஆடியோ பதிவில் பாராட்டும் கருத்துகளும் அனுப்பி மனம் குளிரவைக்கும் ஊக்கமூட்டுநர் அவர்.
‘பல்லிடைப்பட்ட காலத்தில் எப்படி சமாளித்தீர்கள்’ என்று அண்மையில் ஓவியர் நெல்லை வள்ளிநாயகம் கேட்டார். எனது பணி நிறைவு நேரத்தில் எனது பற்களும் ஒரு சேர தங்களது பணி நிறைவை அறிவித்தது தற்செயல் ஒற்றுமை. கொரோனா காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக சிப்பாய்கள் வீர மரணம் அடையவும், மீதம் இருப்போரிலும் வலியோடு துடித்துக் கொண்டிருந்தோரை வழியனுப்பி வைத்துவிட்டு செயற்கை பற்கள் பொருத்திக் கொள்ள ஆங்காங்கு சென்று பார்த்ததில் கோடம்பாக்கம் ஜெயின் மருத்துவமனையின் இளம் மருத்துவர் அங்காள பரமேஸ்வரி அவர்களது பொறுமையும் கனிவுமான சிகிச்சையும், உதவியும், பல் பொருத்துதலும் வாய்த்தது. சொற்களையும் சேர்த்துக் காத்தளித்தவர்.
ஜனவரி 2011இல் தி இந்து ஆங்கில ஏட்டின் திறந்த பக்கங்களில் அருமையான நகைச்சுவை கட்டுரை வாசித்த நிமிடத்தில் மனதிற்கு நெருக்கமாகிப் போனார் அந்தக் கட்டுரையாளரான மன நல மருத்துவர் ஜி ராமானுஜம். நேரில் பாராமல் மாதக் கணக்கில் வளர்ந்த நட்பு. நாட்கணக்கில் நேரமற்று உரையாடிய இரவுகள். புதிய ஆசிரியன் இதழின் ஆஸ்தான நையாண்டி பத்தியாளர் ஆனார். நோயர் விருப்பம், சுத்த அபத்தம் என இரண்டு தொகுப்புகள். இசை நுணுக்கங்கள் அறிந்தவர், புல்லாங்குழல் இசைப்பவர், இசை குறித்த கட்டுரை தொகுப்புகளும் வந்துள்ளன. விகடனில் இப்போது மன நல விஷயங்கள் எழுதி வருபவர். விவரிப்புக்கு அப்பாற்பட்ட தோழமை அன்பு அவரது.
தினமணி கதிரில் 2012இல் வெளியான ‘மனசாடுதல்’ சிறுகதை வாசித்துப் பகிர்ந்து கொண்டபோது திருச்சி மருத்துவர் சுப்பிரமணியன் பதிலில் தான் தெரிந்தது கதாசிரியர் நரம்பியல் சிறப்பு மருத்துவர் என்று! சுப திருப்பதி அவர்களது அருமையான நட்பு வாய்த்தது அப்படித்தான்! அருமையான தமிழன்பரான திருப்பதி அவர்கள் சிறந்த நட்பு கொண்டாடியும் கூட. அவரது அன்பமுதம் திகட்டாது பருகி இன்புற்று வருபவன் நான். சீரிய சிந்தனையாளர். சமரசமற்ற கொள்கையாளர். திருப்பதி அவர்கள் மூலம் அறிய வந்த மருத்துவர்கள் தொடர்பு எல்லையற்று விரியும் அன்பின் ஊற்று. பல்துறை மருத்துவர்களது கூட்டு நேசம் அது.
கட்டுரையின் தொடக்கத்தில் மருத்துவர் ஒருவரை வெறுப்போடு பார்த்தது குறிப்பிட்டிருந்தேன். ஒரு முறை சிறிய கல்லெடுத்து அவர் கார் கண்ணாடி மீது ஏறிய நினைத்துப் பிறகு அந்தத் தப்பெண்ணத்தைக் கைவிட்டதுமுண்டு. ஏழாம் பிரசவத்திற்குத் தனது பெற்றோர் இல்லம் சென்றிருந்த என் அம்மா சுகந்தாவிற்கு (நான் ஆறாவதாகப் பிறந்தவன்), பிரசவ வலி ஏற்படுகையில் ஜன்னி பிறந்து மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். ‘உடனடி மருத்துவ உதவி கிடைத்திருந்தால் சுகந்தா பிழைத்திருப்பாள், அந்த டாக்டர் தாமதம் செய்துவிட்டார், அவர் வந்து ஊசி போடும்போது அவள் போயே போய்விட்டாள்’ என்று என் தாய்மாமன் சிலபோது கோபத்தோடு சொல்லியவாறு விசும்புவதுண்டு. வேறு யாரும் அப்படி சொல்லாததும், குறுகிய கால இடைவெளியில் அந்தத் துயரம் தவிர்க்க இயலாமல் நேர்ந்திருக்கக் கூடும் என்பதாலும், மாமாவின் சீற்றம் தனது தமக்கை மீதான அன்பின் வெளிப்பாடு என்று பின்னாளில் புரிந்து கொள்ளப் பழகிக் கொண்டேன்.
என்னை நேரில் பார்க்காமலே, என் எழுத்தின் மீதுள்ள அன்பால், தனது மருத்துவ நூலுக்கு அணிந்துரை எழுதித் தருமாறு கேட்டு அசத்தியவர் புகழ்பெற்ற மருத்துவர் கு..கணேசன். ஆனந்த விகடனில் என் சிறுகதை வரும்போது முதல் தகவல் முதல் நாளே அவரிடமிருந்து வந்துவிடும், ராஜபாளையத்திற்கு புதன் கிழமை வந்து விடும் புத்தகம் என்பார். இந்த ஆண்டுதான் புத்தகக் கண்காட்சியில் நேரில் அவரை சந்தித்தது. எளிமையிலும் எளிமையான அன்பு மனிதர்.
நோயற்ற ஆரோக்கியமான சமூகத்தைத் தான் மருத்துவர்களும் விரும்புவது. தன்னை நாடி வந்தவர் நோய்மை எப்படி தணிப்பது, நிவாரணம் அளிப்பது என்பது அவர்களது உளவியலிலும் ஆர்ப்பரிக்கத் தொடங்கி விடுகிறது. உரிய சிகிச்சைக்கு நோயாளியின் ஒத்துழைப்பு கிடைக்காதபோது அவர்கள் சலிப்படையவோ, அலுப்போடு பேசவோ நேர்வது அதனால் தான்! பதட்டங்கள் நிறைந்த அன்றாடம் தான் ஓர் உன்னதமான மருத்துவரது ! குணம் பெற்று வரும் ஒவ்வொருவரும் மருத்துவரை மேலும் அர்ப்பணிப்போடு பணிகளைத் தொடர உதவுகின்றனர். பிரச்சனை இருந்தால் மட்டும் அழைக்கும் சிலர், குணமாகிவிட்டால் மருத்துவருக்குத் தெரிவிக்கும் எண்ணமே அற்றுப் போவது பற்றி மருத்துவர்களிடம் பேசியதுண்டு. கடமைகளைத் தொடரவேண்டியது எங்களது கடப்பாடு என்பார்கள் அவர்கள்.
தொழிற்சங்க வாழ்க்கையில் தோழர்களது உடல் நலன் குறித்து எண்ணற்ற முறை எத்தனையோ மருத்துவமனைகள் சென்று வந்த அனுபவம் எழுத்தில் அடங்காதது. உறவினர்களுக்காகவும் சென்று வந்த அனுபவங்கள் ஏராளம். வாழ்க்கையில் சந்தித்த மருத்துவர்கள் பலரையும் இன்றும் நினைவில் வைத்திருந்தாலும், சிலரது அருகமை வாய்த்தது சிலிர்ப்புற வைப்பது.
மருத்துவர் பிவிவி கடிதத்தோடு சென்று சந்தித்த மருத்துவர் கிருஷ்ணன், புகழ் பெற்ற மூத்த மருத்துவர். இந்திய பொதுவுடைமை இயக்க நீண்ட காலத் தோழர். அறிஞர் அண்ணாதுரை சோவியத் சென்றபோது அவரது மருத்துவ ஆலோசகராக உடன் சென்று வந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 1999இல் எனது ஹீமோகுளோபின் அளவு 4.5 அலகுகள் என்று மிகவும் கீழிறங்கிப் போயிருக்க, அவரிடம் என்னை அனுப்பி வைத்தார் பிவிவி.
கண்டிப்பும், வாஞ்சையும் சம விகிதத்தில் என் மீது செலுத்திய அவரது அன்பில் கட்டுண்டு கிறங்கிக் கிடந்த நாட்கள் மறக்க முடியாதது. பத்து நிமிடங்கள் தாமதமாகப் போனாலும், ‘அவனை உள்ளே அனுப்பாதே, அப்படியே வெளியே துரத்து’ என்றே வரவேற்பாளரிடம் (?) சொல்லி வைத்திருப்பார், நானோ தாமதமாகவே போய்ச் சேருவேன், அப்போது வங்கியைக் காக்கும் கடுமையான தொழிற்சங்கப் போராட்டத்தில் இருந்த காலம். அன்றாடம் கூட்டம், ஆர்ப்பாட்டங்கள், கிளை விஜயங்கள், அனைத்து சங்க நிர்வாகிகள் அவசர சந்திப்பு என்று ஓடிக் கொண்டிருந்துவிட்டு, பறக்கப் பறக்க டாக்டர் கிருஷ்ணனைப் பார்க்கச் செல்வேன், எல்லாத் தடைகளும் மீறி அவரது அறைக் கதவைத் திறந்து தலை தாழ்ந்து நின்று, மன்னித்துவிடுங்கள் என்பேன். ‘அப்படியே போயிடுங்க…உங்களை யார் உள்ளே விட்டது…விரட்டச் சொல்லி இருந்தேனே’ என்று கேட்டுக் கொண்டே என்னையும் கைப்பற்றி இழுத்துக் கொண்டு வெளியே வருவார்,. அப்படியே குனிந்து அவரது பாதங்களைத் தொடுவேன். ”இந்த நாடகம் எல்லாம் நடக்காது’ என்பார். பிறகு, வந்து தொலைங்க என்று அறைக்குள் அழைத்துச் செல்வார்.
இப்போது நினைத்தாலும் கண்கள் குளமாகி விடும். “நானும் கம்யூனிஸ்ட் கட்சி தோழன் தான்…உடம்பைப் பார்த்துக்காம யாருக்காக ஓடியோடி வேலை செய்ற நீ …ஒரு நாள் பொத்துன்னு விழுந்தா இயக்கத்துக்கு என்ன லாபம், உன்னால கெட்ட பேருதான் வரும். அதிக காலம் மக்கள் பணியில் இருக்கணும்னா முதல்ல உன் உடம்பு நல்லா இருக்கணும்….இப்படித்தான் கனரா வங்கியில் சுப்பிரமணியன் இருந்தான் (AIBEA சங்கத் தலைவர் சி எஸ்), சொல் பேச்சு கேக்காம ஓடிட்டே இருந்தவன்…எங்கேயாவது வடக்கே டாக்டரே இல்லாத இடத்துல, இல்ல ரயில்ல திடீர்னு உடம்பு முடியாம பிடிச்சுக்கிட்டு திணறுவ, அப்ப என் நினைவு வரும்னு மிரட்டிக்கிட்டு இருப்பேன்…உன்னையும் சொல்றேன்..ஒழுங்கா உடம்ப பார்த்துக்கோ” என்று சொல்வார். என் வீட்டு எண்ணுக்கு அழைத்து என் மாமியார் கோமதி அம்மாளிடம், ‘உங்கள் மாப்பிள்ளையைத் தட்டிக் கேட்க மாட்டீர்களா, அவர் ஒரு காம்ரேட்….உடம்பை ஒழுங்காகப் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்’ என்று பேசுமளவு என்மீது காதல் கொண்டிருந்தார்.
ஹீமோகுளோபின் அளவு உயர்த்திக் கொடுத்திருக்கிறேன், பத்திரம் என்பார். முதுமையில் அவர் மறைந்தது எனக்கு துயரமிக்க நாள். இரவு தற்செயலாக மருத்துவர் பிவிவி அவர்களை அழைக்கையில் சொன்னார். மறுநாள் காலையில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெசன்ட் நகர் செல்கையில், எல்லாம் முடிந்து குடும்பத்தார் வீட்டுக்கே திரும்பி விட்டிருந்தனர். பெருத்த ஏமாற்றம், தாளமாட்டாத குற்ற உணர்ச்சியும் துக்கமும்.
வருகை தருவோர் குறிப்புகள் எழுத வீட்டு வாசலில் ஒரு நாற்காலி மீது நோட்டுப் புத்தகம் வைத்திருந்தனர். ‘உங்களைக் கடைசியாகப் பார்க்கவும் நான் நேரம் தவறி விட்டேன். இந்தத் தாமதத்திற்கு இனி ஒரு போதும் உங்கள் முகத்தைப் பார்க்க இயலாத தண்டனையைப் பெற்றுக் கொண்டேன், அய்யோ, என்னை இனி யார் மன்னிப்பார்!’ என்று எழுதி வைத்துவிட்டு வந்தேன்.
கட்டுரையாளர் மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com
அலைபேசி எண்: 94452 59691

மனிதரில் மாணிக்கம் மருத்துவர்கள்.அவர்கள் கிரீடத்தில் மேலுமொரு சிறகு, இந்தக் கட்டுரை.
ஆரோக்கியமாக வாழட்டும் அவர்கள். பின்னே, அவங்க நல்லா இருந்தாத்தானே நாம நலமாக இருக்க முடியும்.
நோயாளி, மருத்துவமனை, மருத்துவர்கள் என இந்தப் பாத்திரங்களை வைத்துக் கூட ஒரு நாவல் எழுத முடியுமா? உண்மைச் சம்பவங்களை , வருத்தங்களை கூட அழகிய விருத்தங்களாகத் தருவதினால் தான் அழகிய சிங்கரோ !! மருத்துவர்களுக்கு நன்றி காட்டும் விதமே கவிதையாக வந்துள்ளது. ரசித்ததுடன் மனத்துள்ளும் பதிவானது. நன்றி . முனைவர் தென்காசி கணேசன் சென்னை
அருமையான அர்ப்பணிப்பு மருத்துவர்களுக்கு.
எஸ்விவி எழுத்து என்றும் மனதைத் தொட்டுச் செல்லும் நிகழ்வுகளும் அனுபவங்களும் நிறைந்தது. வாசிக்கும் நம்மை அவருடனே அழைத்துச் செல்வார்.👏👏
Multi emotional live story mind weeping laughing
சிறப்பான கட்டுரை. மருத்துவர் தினத்தில் அனைத்து சிறப்புகளும் பெற்ற மருத்துவர்களை நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தை கட்டுரை தந்துள்ளது. இலக்கிய வடிவில் மேலும் ஒரு சிறப்பான படைப்பு. இன்னும் சிலர் உண்டு தஙகளுக்கு . அனுபவங்களும் உண்டு
அன்பான, மருத்துவர்களை என்றும் போற்றுவோம்.
மருத்துவர்கள் பற்றிய ஓர் எழுத்தோவியம்!