தங்கேஸ்/ஒ (இ) ருவர்

தன்னிலை மறந்த தூக்கத்தில் லயித்திருந்த போது வசந்தியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக வேறொன்றாக மாற ஆரம்பித்தது . அதைப் பார்த்ததும் அவள் திடுக்கிட்டு நடுங்கிப் போனாள் . அவளது உடம்புக்குள் ஏதோ ஒரு சக்தி , அவளது அனுமதியின்றியே உள்ளே புகுந்ததை தன்னுடைய ஒவ்வொரு அணுவிலும் அவளால் உணர முடிந்தது . அவளது முகத்தில் வலது பக்கத்தில் ஆரம்பித்து , உடலின் வலது பகுதி முழுவதும் ஒவ்வெரு அங்கமாக வேகமாகப் பரவியது அது . பரவிய வேகத்தில் உடற் பாகங்கள் ஒவ்வொன்றும் உருவமற்று கரைந்து போக , கரைந்து போன இடங்களிலெல்லாம், ஏதோ பனிப்படலம் போன்ற வெண்மையாக வஸ்து ஒன்று வந்து தேங்கி நின்று கொண்டது. சற்று நேரத்தில் , பனிப்படலம் தேங்கி நின்ற இடமெல்லாம் ஆணின் அங்கங்களாகவும் , அது பரவாத மறு பாதி இவளின் சொந்த பெண்மையின் அங்கமாகவும் மாறிப்போனது. அவளது முகம் பாதி ஆண்வடிவம் கொண்டதாகவும் பாதி பெண் வடிவமாகவும் மாறிப்போனது.
எதுவும் செய்ய முடியாமல் இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ‘பனிப்படலம் போன்ற எடையற்ற ஆண் உடல் பகுதி காற்றில் பறக்கத்துடித்து மேலெழுந்தது.. , இவளது பெண்மையின் உடல் தரையில் தன்னை கிடத்திக் கொள்ள போராடியது. போராடி போராடி ஓய்ந்து போக மூச்சுத் திணறல் ஏற்பட்டதும். ‘’ ஓ ‘’ வென்று கத்தி விட்டாள்.
உடனே தினா வந்து அவளது தலையை ஆதரவாகத் தட்டி எழுப்பி ‘’. தூங்கியது போதும் வா ‘’ வென்று அவளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான். அங்கே எதுவுமே பேசாமல் அவளுக்கு வானத்தை சுட்டிக் காட்டினான். மேலே செப்புக்காசுகளை அள்ளி இறைத்தது போல நட்சத்திரங்கள் சிதறிக்கிடந்தன. அவள் ஆதரவாக அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள். காற்றில் சாய்ந்தது போல அத்தனை மிருதுவாக இருந்தது அவனது தோள்.
‘ நிலவைக் காணவில்லையே ‘ என்றாள்.அவள் .
சற்று ஓய்வெடுக்கச் சென்றிருப்பாள் அந்த துயரத்தின் கன்னி ‘’ என்றான் அவன் .
‘’ அவள் மேகத்தின் மடியில் முகம் புதைத்து தேம்பி அழுவாள் தானே , ஆனால் எனக்கு யார் இருக்கிறது முகம் புதைத்து அழ நீயே சொல் , என்றாள்.
‘’ நான் இருக்கிறேனே தெரியவில்லையா ‘’ என்றான். ‘’
நீ தான் அந்த நிலவைப் போல அவ்வப்போது காணாமல் போய் விடுகிறாயே ‘’ என்று குறைபட்டுக் கொண்டாள் .
‘’ நான் எங்கும் காணாமல் போவதில்லை , எப்போதும் உன்னோடு தானே இருக்கிறேன் ‘’ என்றான் அவளது கைகளைப் பிடித்தபடி.
‘ பின்பு ஏன் நீ இன்று இவ்வளவு தாமதமாக வந்தாய். சற்று நேரத்தில் எனக்கு என்னென்ன நேர்ந்து விட்டது தெரியுமா ?
‘’ அப்படி என்ன நேர்ந்து விட்டது ?’
’ சற்று முன்னர் என்னுடைய உடலில் ஒரு ஆணின் உடல் பனிப்படலம் போல நுழைந்து விட்டது. சிறிது நேரத்தில் நான் அர்த்தநாரி போல் ஆகி விட்டேன் தெரியமா ?
‘’ தெரியும் ‘’
‘’ தெரிந்துமா நீ வரவில்லை ‘
‘’ ஆமாம் ?
ஏன் ?

‘’ ஏனென்றால் உன் உடலுக்குள் பனிப்படலமாக நுழைந்ததே நான் தானே ‘’ என்றான். உடம்பு உதறிப் போட்டது அவளுக்கு .வியர்வை ஆறாகப் பெருக சட்டென்று விழிப்புத் தட்டியது.
எழுந்த வேகத்தில் சுவிட்சைப் போட்டாள். அறைக்கும் வெளிச்சம் பரவ சுவரில் சிரித்த முகத்துடன் தினா புகைப்படமாகத் தொங்கிக் கொண்டிருந்தான்.