
நேற்று அஞ்சலக தினம். எதாவது அவர்களைப் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்தேன். மறந்து விட்டேன்.
உண்மையிலேயே அஞ்சலகருக்கு நன்றி கூறவேண்டும்.
சமீபத்தில் நான் விருட்சம் இதழை எல்லாருக்கும் வெற்றிகரமாக அனுப்பி முடித்தேன்.
எனக்கு ஒரு இதழ் அனுப்ப ₹ 5 ஆகிறது. ₹ 4 தபால் தலை செலவு. ₹ 1 கவர் செலவு. ₹ 5 எல்லோருக்கும் போய் சேர்ந்து விடுகிறது.
பத்திரிகைப் பிரதிகளைத் தபாலில் அனுப்ப எனக்கு ₹ 4000 வரை செலவாகிறது.
விருட்சம் பத்திரிகை தபால் துறையினரை நம்பி இருக்கிறது.
அவர்கள் அற்புதமாக சேவை செய்வதால் எல்லோரிடமும் விருட்சம் போய்ச் சேர்ந்து விடுகிறது.
என் சந்தாதாரர்கள் நல்லவர்கள். நான் அனுப்பும் விருட்சம் இதழ் கிடைத்தது என்று சொல்ல மாட்டார்கள்.
என் குறுநாவல்கள் தொகுப்பு வந்தவுடன் எப்போதும் வரும் தபால்காரர் விசாரித்தார். என் முதல் தொகுதியை அவரிடம் கொடுத்து ரீலிஸ் செய்து மகிழ்ந்தேன்.
எனக்கு ஒரு கெட்டப் பழக்கம். தபால் அலுவலகம் போனால் தபால் கார்டுகளை வாங்கி வாங்கி சேர்ப்பேன்.
எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. கோபிகிருஷ்ணன் புத்தாண்டு வாழ்த்துகளை தபால்
கார்டில்தான் வெளிப்படுத்துவார்.
திகசியும் வல்லிக்கண்ணனும் தபால் கார்டுகளில்தான் விருட்சம் இதழ் குறித்து எழுதுவார்கள்.
இன்னும் கூட பிரசுரிக்க முடியாத மோசமான கவிதைகள் தபால் கார்டில்தான் எழுதப் படுகின்றன.
அந்தக் காலத்தில் நான் விருட்சம் கூட்டம் நடத்துவேன். எனக்கு மொத்த செலவு ₹100 தான் ஆகும்.
தபால் கார்டில் கூட்ட அறிவிப்பை தெரிவிக்க ₹ 25, காப்பி டீ செலவு ₹ 25 , ஹால் வாடகை ₹ 50. ஆக மொத்தம் ₹100.
விருட்சம் சந்தாவை புதுப்பிக்கும்படி தபால் கார்டில்தான் தெரிவிக்கலாமென்று நினைக்கிறேன்.
தினமும் பத்து கார்டுகள் எல்லோருக்கும் அனுப்பலாமென்று நினைக்கிறேன்.
இன்று அஞ்சலக நாளின் அடுத்த நாள். ஆரம்பித்து
விடுகிறேன்.
