தங்கேஸ்/நூற்றாண்டுகளின் தனிமை வாசி

நூற்றாண்டுகளின்
தனிமை வாசி
யாரை கனவு காண்பான் தூக்கத்தில்

தனித்த உயிரினமாய்
படைக்கப்பட்டதின்
துயரம் இது

இறைக்கப்பட்ட செப்பு நாணயங்களாய்
சிதறிக்கிடக்கும் நட்சத்திரங்களை
பொறுக்கி கொள்ளவும் விருப்பமில்லை
ஆளற்ற வீதியிலே

கடவுள்களெல்லாம் துணையோடு
படைக்கப்பட்ட தேசத்தில் தான்
இப்படி தனிமை பீடிக்கப்பட்ட
சாபம் பெற்றலைகிறான்
ஆயுளுக்கும்

ஆயிரமாயிரம் கவிதைகளில்
முகம் காட்டினாலும்
தேம்பி அழுவதென்னவோ
மேகத்தின் மடியில்
தலை சாய்த்து தான்

ஏகன் அனேகனாய்
துயரம் ததும்பும்
எத்தனை எத்தனை
விழிகளில் இன்று
மிதந்து வரப் போகிறானோ
யார் கண்டது ?