செ.புனிதஜோதிகவிதை

எனக்கான
கவிதை நோட்டை
அடுப்பங்கரை
மூலையில்
ஒளித்து வைத்திருப்பேன்

உனக்கான
நோட்டுகளை
பலரும் பார்க்கும்
வண்ணம்
மேசையில்
பரத்தி வைத்திருப்பாய்

எனக்கான
விருப்ப பாடலை
கெட்போனில்
கேட்டுக்கொண்டிருப்பேன்

உனக்கான
விருப்ப பாடலை
Speaker மூலம்
சத்தமாய் கேட்டுகொண்டிருப்பாய்

உனக்கான
உணவை சமைத்து,சமைத்து
எனக்கான
உணவு எது என்பதை
மறந்திருப்பேன்

உனக்கான
விருப்பத்தை
என் மீது
திணித்து,திணித்து
எனக்கான
விருப்பம்
தடயமின்றி
காணாமல் போயிருக்கும்

இங்கே
எல்லாம் அப்படித்தான்
உன் அதிகாரத்தின்
கீழ்தான் நான்
இருந்தாலும்
நீ சொல்வாய்
என் இல்லத்தலைவியென்று