மனுஷ்ய புத்திரன் கவிதை


ஏனென்று தெரியாது
என் கண்களில்
நீர் தளும்பிய வண்ணமிருக்கிறது

ஏனென்று கேட்கிறார்கள்
ஒன்றுமில்லை என்கிறேன்
உண்மையில் சொல்வதற்கு
ஒன்றுமில்லைதான் போலும்

கண்ணீரை பிறர் காணவும்
பிறர் காணாமலும்
அடிக்கடி துடைத்துக்கொள்கிறேன்
என் கண்ணீர்
மலையுச்சியில் தோன்றும்
ஒரு ரகசிய ஊற்று
யாரும் கண்டிராத வன தேவதையின்
கரங்கள் மட்டுமே துடைக்கும் கண்ணீர்
அவளோ நதி ஒன்றின் ஆழத்தில்
நோய்மையுற்று உறங்கிக்கொண்டிருக்கிறாள்

வருத்தத்தின் கண்ணீரா இது?
வலியின் கண்ணீரா இது?
நிராகரிப்பின் கண்ணீரா இது?
நீதி வேண்டும் கண்ணீரா இது?
எதுவும் இல்லை
நம்புங்கள்
என் கண்கள் தாமே அழுகின்றன

அந்தியின் மஞ்சள் வெளிச்சம்
என் கண்ணீரில் மினுங்குகிறது
இரவின் முதல் சாம்பல் இருள்
என் கண்ணீரில் மிதக்கிறது

நாம் எப்போது அன்பற்றவர்களாக
மாறுகிறோமோ
அப்போது வீடற்றவர்களாக மாறுகிறோம்
மற்றபடி
நான் அழுவதற்கு காரணங்கள் ஏதுமில்லை

கண்களில் கண்ணீர்
தாமே தளும்புகிறது எனில்
என் கண்களில்
ஏதோ கோளாறு இருக்கவேண்டும்
அல்லது கண்ணில் தூசு விழுந்திருக்கவேண்டும்
அப்படித்தான்
நீங்கள் அதைப் புரிந்துகொள்ளவேண்டும்
ஏனெனில் எனக்குத் தர
உங்களிடம் கருணை ஏதுமில்லை

இன்று நான் சிந்தும் கண்ணீரை
ஒரு முறை
காயம்பட்ட குதிரையின் கண்களில் கண்டேன்
இன்னொறு முறை
கடற்கரையில் கைவிடப்பட்ட
ஒரு நாய்க்குட்டியின் கண்களில் கண்டேன்

அன்பே
இந்தக் கண்ணீர்
பாலை வனத்தில்
நல்ல வெய்யிலில் தோன்றும்
கானல் நீர்
நீ அதை பரிதவிப்புடன்
தேடி வருகையில்
நான் அங்கு இல்லாமலாவேன்

5.7.2024
மாலை 6.02