பிஸ்ரீ/நான் அறிந்த தமிழ் மணிகள்

தமிழ்த் தாத்தா

காளமேகம் மின்னாமல் பெய்யத் தொடங்குகிறது. கடல்மடை திறந்தாற்போலக் கவிவெள்ளம் பாயத் தலைப் படுகிறது. மாணவர்கள் தம்மைத்தாமே மறந்து நிற்கின்றனர், அவர்களுக்கெல்லாம் ஆசி வழங்க நம் கவியைக் கேட்டுக் கொள்கிறார் தலைமையாசிரியர். இவருக்குக் கவி எங்கிருந்துதான் உதித்ததோ, எப்படி ஓடுகிறது பாருங்கள்! அந்தக் கவித்திறன், கற்பனை வளம் இவற்றின் சிறப்பியல்களை விவரித்து வியக்கிறார்.
இது என் வாக்கு அன்று; என் நண்பருள் ஒருவரும், காலஞ் சென்ற பன்மொழிப் பண்டிதருமான பந்தல்குடித் திருமலை ஐயங்கார் உதவிய மேற்கோளிலிருந்து தொகுத்து எழுதிய வருணனை தான். அப்படியானால் இவ்வருணனையின் ஆசிரியர் யார்? 1928 ஆம் ஆண்டில் சிதம்பரம் “மீனாட்சி தமிழ்க் கல்லூரி”யில் மாணவராக இருந்தவர்; இப்போது பேர்பெற்ற ஒரு கலாசாலைத் தமிழாசிரியர்.
இனி, இந்த வருணனையில் குறிக்கப்படும் காளமேகம் யார்? தலைமையாசிரியர் யார்? என் சிறிய தந்தையான அளந்த கிருஷ்ணகவிக்கு “அபிநவ காளமேகம்” என்ற ஒரு பட்டப்பெயரும் உண்டு. அந்த மேகத்தைக் கட்டளையிட்டுக் சுவிமாரி பொழியச் செய்தவர் வேறு யாருமில்லை. அவரது பெருமதிப்பிற்கு உரியவரும் தமிழ்த்தாத்தாவுமாகிய டாக்டர் . உ.வே. சாமிநாதையரே.
”கலசமுனி (அகத்தியர்) என்று ஏத்தும் சாமிநாதையர்” என்று ஒரு பாட்டில் குறிப்பிடுகிறார் அனந்தகிருஷ்ண கவி. தமிழ் முனிவருக்குக் குறைந்தவர் அல்லர் தமிழ்த்தாத்தா என்று கருதும் அளவிற்குப் பக்தி கொண்டவர். தம்முடைய அகத்தியருக்கு என்னை அறிமுகப்படுத்தி ஆசி பெறச் செய்தவர். அந்த அறிமுகத்திற்கு முன்பே, “கடலும் தீயும் கொண்டது போக எஞ்சியிருந்த” பண்டைத் தமிழிலக்கியங் களைத் தேடிப் பதிப்பித்த தாத்தாவை இவரது சில பதிப் புக்கள் வாயிலாக நான் நன்கு தெரிந்து கொண்டிருந்தேன்.

மறுமலர்ச்சியில் தாத்தா

தமிழின் புது மலர்ச்சிக் காலத்தைப் பாரதி யுகம் என்று பிரசித்தமாகச் சொல்லுகிறார்கள் அல்லவா? “இது சாமிநாத சகாப்தமும் கூட” என்று தெரிந்து கொண்டிருந்தேன்.

இப்புது மலர்ச்சி நம் தமிழிலக்கிய வரலாற்றிலே நிகழ்ந்த மறுமலர்ச்சிகள் பலவற்றுள் ஒன்றுதான். சங்ககாலமே ஒரு வகை மறுமலர்ச்சிக் காலம்தானோ என்று நான் எண்ண மிடுவதுண்டு. அதற்கும் முற்பட்ட இலக்கிய நிலை குறித்தோ, தாய் மொழியின் நிலை குறித்தோ நமக்கு இன்று ஒன்றும் திட்டவட்டமாகப் புலப்படவில்லை. ஆனால், சங்க நூல்களை ஊடுருவிப் பார்க்கும் போது, அக்காலத்திற்கும் முன்பே தமிழும் தமிழிலக்கியமும் படிப்படியாக வனர்ந்து வந்திருக்க வேண்டும் என்பது ஊகிக்கப்படும்.

பாரதியார் தோற்றுவித்த மறுமலர்ச்சி யுகத்திற்கு ஆழ்ந் தகன்றதோர் அடிப்படை அமைத்தவர் சாமிநாதையர் என்பது என் தேர்ந்த கொள்கை. புதுமைகளான வழிகளில் தமிழை வளர்க்கத் தொடங்கிய பாரதியார், ஐயரின் நிகரற்ற தொண்டினை உள்ளபடி உணர்ந்துதான்,

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெல்லாம், புலவோர் வாயில்
துதியறிவாய்; அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்;
இறப்பின்றித் துலங்குவாயே!

என்று பாடியுள்ளார்.

நாளடைவில் சாமிநாதையரும் பாரதியாரின் புதுப் பணிகள் காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவை என்பதை நன்றாக உணர்ந்து கொண்டார். தமிழ்த்தாத்தாவும் புரட்சிக் கவிஞரும் ஒருங்கே தமிழிலக்கிய உலகில் சத்திய சோதனைகள் செய்தவர்கள் ஆவர்.
காந்தியடிகள் அரசியலில் சத்திய சோதனை செய்தவர் என்பது உலகம் அறிந்ததே. இம்மூவருக்கும் வெகுகாலத்திற்கு முன்பே ஒரு மகத்தான சத்திய சோதனை நடந்தது. வேதநெறியாக இந்து சமயத்தை வேரூன்றித் தளிரோடி இலை வீசச் செய்த வேதவியாசரின் சோதனை அது. இந்த உண்மையை இன்றைய இந்திய நுண்ணறிவாளர்களின் கெரமாய்த் திகழும் ராஜாஜி நன்குணர்ந்து தான், சாமிநாதையரைத் தமிழ் வியாசர் என்று குறிப்பிட்டார்.
மகாமகோபாத்தியாயர், திராவிட வித்யா பூஷணம், மகாவித்துவான் டாக்டர் என்றெல்லாம் குறிப்பிடுவதை விட ராஜாஜி சூட்டிய “தமிழ் வியாசர்” பட்டம் பொருத்தமானது. ஆனால் தமிழ்த் தாத்தா என்று மக்கள் சூட்டியிருக்கும் பட்டப் பெயருக்கு அடுத்தபடியாகத்தான்.
சாமிநாதையர் சோதித்து வெளியிட்ட பதிப்புகளைப் படித்த பின்புதான் “தமிழ் மொழியின் லாவகமும் நயமும் எளிய நடையில் ஆழ்ந்த பொருள்களை அடக்கும் அதன் அழகும் ஆற்றலும் நமக்குத் தெரிய வந்தன” என்கிறார் ராஜாஜி. பாரதியாரின் புதுமைக் கவிதைகளிலும், வழி வழி வந்த தமிழின் எழிலும் எளிமையும் சக்தியும் அற்புதமாய்ப் புலனாகின்றன. புரட்சிக் கவிஞரிடம் சிறப்பாகக் காணப் பட்ட சில பண்புகள், பழைய பண்பாட்டின் வடிவமான சாமிநாதையரிடத்திலும் அடக்கமாகக் காணப்பட்டன. இக்கருத்தை அரண் செய்கிறது ராஜாஜியின் அனுபவமும். ‘குலத்தில் உயர்வு-தாழ்வு, ஆரியர் திராவிடர், வடமொழி தென்மொழி என்னும் பேத உணர்ச்சிகள் எள்ளளவும் காணா மலிருப்பதும் இப்பெரியாருடைய தனிச் சிறப்பு ” என்று ராஜாஜி கூறுவது கூர்ந்து நோக்கத்தக்கது.
சாமிநாதையரின் கடல் அனைய தமிழ்ப்புலமை பாரதிக்குக் கிடையாது. ஐயரின் முயற்சியுடன் “எறும்பும் தேனீயுமே போட்டி போடலாம்” என்ற ராஜாஜி கூற்றும், பாரதிக்குப் பொருந்துவதன்று. ஆனால் கவிஞனுக்கே உரிய உள்ளளியுடன், பரந்த புதிய உலகியல் அறிவும் விஞ்ஞான நோக்கும் தேசீய பாரத சக்தியின் வடிவமான பாரதியாரின் சிறப்பியல்புகள். உழைப்பின் அவதாரமான தமிழ்த் தாத்தாவும், புதுமைத் தமிழின் கவிமுரசாக முழங்கிய பாரதி மாமாவும் சேர்ந்து இன்றைய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பது தமிழன்னையின் திறவுள்ளம். (பாரதியை “மாமா” று அழைப்பார் கப்பலோட்டிய தமிழரான வ.உ.சி.)

தியாகராஜ விலாசத்திலே

தமிழ்த்தாத்தாவின் இல்லத்திலேதான் என் சிறிய தந்தை என்னைத் தம் “பிள்ளையாண்டான்” என்று அருமையாக அறிமுகப்படுத்தினார். அந்த இல்லத்தின் பெயரிலேயே ஐயரின் நன்றி கலந்த சமரச உணர்வுக்கு ஒரு சான்று கண்டேன், தியாகராஜ செட்டியாரின் நினைவாக அமைந்த பெயரல்லவா? அவர் இவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தவர் என்பது பலரும் அறிந்ததே.
தியாகராஜ செட்டியாரின் நினைவுடன் இவருக்கு ஆசிரியப்பிரானாக வாய்க்கப்பெற்ற மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நினைவும் என்னுள்ளத்தில் தோன்றியது. ஐயருடைய குருபக்தியிலும் குறுகிய பேத உணர்ச்சிக்கு
இடம் இல்லை.
“பல காலமாகமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வதரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப்போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம்போல் அவர் (மீனாட்சி சுந்தரம் பிள்ளை) வந்தார்” என்று டாக்டர் ஐயர் “என் சரித்திரம்” என்ற நூலில் 27வது அத்தியாயத்தில் கூறியுள்ளார் என்ன குருபக்தி! தமிழ் மீதுதான் எவ்வளவு பக்திக் காதல்!
மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் நினைவு வந்ததும், டாக்டர் ஐயரின் சொந்தப் பெயர் “சாமிநாதன்” என்பது அல்ல என்ற நினைவும் வந்தது. பெற்றோர் இட்ட பெயர் “வேங்கட ராமன்’. ஒருநாள் குருமூர்த்தி இவரை நோக்கி, ‘•உமக்கு வீட்டில் வேறு பெயர் உண்டோ?” என்றுகேட்டார். அதற்கு இவர், “வேங்கடராமன் என்பது மூதாதையின் பெயராதலின் என் பெற்றோர் சாமா என்ற செல்லப் பெயரால் அழைப்பார்கள்” என்று பதில் சொன்னார். சாமா என்பது சாமிநாதன் என்பதன் சுருக்கம் ஆதலின், குரு “இனி நான் உன்னைச் சாமி நாதன் என்றே அழைக்கப் போகிறேன்” என்றார்; நாளடைவில் பெற்றோர் இட்ட பெயர் மறைந்தது; குருமூர்த்தி இட்ட சாமிநாதப்பெயர் நிலைத்துவிட்டது.
பிறகு என் நினைவுகள் சங்க காலத்திற்கே பாய்ந்து சென்றன. தியாகராஜ விலாசத்திலே தியாகராஜ செட்டியாரும் மீனாட்சிசுந்தரனாரும் மறைந்து நக்கீரர், கபிலர், பரணர் முதலான சங்கப்புலவர்கள் வந்து சேர்ந்தனர். இடையே உலா, பிள்ளைத் தமிழ் மாலை போன்ற சிறு பிரபந்தங்களின் ஆசிரியர்களும் வந்து போனார்கள். புலவர்களோடு புரவலர்களும், வீரர்களுடன் வள்ளல்களும் தோன்றினார்கள். இவர்களெல்லாம் நிசமானவர்கள் என்றும், டாக்டர் ஐயரைப் பார்க்க வந்திருந்த பெரிய மனிதர்களும் பிறரும் நிழல்களே என்றும் எண்ணமிட்டேன்.
நான் சங்க காலத்து ஒளவையைப் பேட்டி கண்டு உரையாடிக் கொண்டிருந்தபோது, என் சிறிய தந்தையாரின் நூல் என்னை விழிக்கச் செய்தது. “என்ன உட்கார்ந்து கொண்டே உறங்குகிறாயா?” என்றார் சிற்றப்பா. நான் ஐயரவர்களின் இலக்கியப் பணிகளை அங்கும் இங்குமாக தினைவூட்டிக் கொண்டு பகற்கனவுகளில் ஆழ்ந்திருந்த போது, என் சிறிய தந்தையார் எண்ணிறந்த சிலேடைப் பாடல்களை ஐயரிடத்திலும் அவரைப் பார்க்க வந்திருந்த சில அன்பர் களிடத்திலும் பொழிந்து கொண்டிருந்தார்,
ஒருநாள் அதிகாலையில் சென்னைக் கடற்கரையில் சாமிநா தையரின் நினைவுச் சிலைக்குமுன் நின்றுகொண்டே, “தமிழை வாழ்விக்க வந்த செம்மலின் பணியும் ஒரு கடல்!” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். நாட்டுப் புறத்துப் புலவர்களின் வீடுகளிலும், பரண்களிலும், மூலைமுடுக்குகளிலும் ஒளிந்து கிடந்த தமிழ்ச் செல்வத்தை வெளிக் கொணர்ந்து நமக்கெல்லாம் வாரி வழங்கிய தொண்டு, எத் தனையோ புலவர்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்து முடிக்க வேண்டியதன்றோ! அத்தகைய தனிப்பெரும் பணி யைத் தனி மனிதராக நின்று செய்து முடித்த கலைவள்ளலுக்கு முருகப்பெருமானின் பொருள் பொதிந்த சாமிநாதப் பெயர் எவ்வளவு பொருத்தமாக அமைந்துவிட்டது!
தனித்திருந்தும், விழித்திருந்தும், பசித்திருந்தும் இவர் ஆற்றிய தொண்டுக்கு இத்தகைய நினைவுச் சின்னம் போதுமா? தமிழன்பர்களின் உள்ளமெல்லாம் இவரது நினைவுக் கோயில்களாகத் திகழ வேண்டாமா? இக் கடற்கரைச் சின்னம், தமிழக எல்லை தாண்டிக் கடல் கடந்து விளங்கும் புகழுக்கும் ஒரு நினைவுக் குறிதான்.
திருமாலின் உலகம் அளந்த கால்களை நோக்கிப் பக்தர்கள் “இவை எவ்வளவு தொலைதூரம் நடந்து நொந்தனவோ என்று உருகி நிற்பதுண்டு. நானும் ஏறத்தாழ அத்தகைய பக்தியுடன் “நடந்து, நடந்து நொந்தனவோ!” என்று ஏடு தேடி என்றைக்கும் அழியாத பெருமை தேடிக் கொண்ட கால்களை நோக்கி, வணக்கம் செலுத்தினேன்.