
07.07.2024 – ஞாயிற்றுக்கிழமை
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : வணக்கம்
அழகியசிங்கர் : நேற்று காலை மனுஷ்ய புத்திரனிடமிருந்து போன் வந்தது.
மோகினி : எதற்கு?
அழகிய சிங்கர் : ஆத்மாநாமின் நினைவு நாளை நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எல்எல்ஏ பில்டிங்கில் புதுமைப்பித்தன் அறையில் கூட்டம் ஏற்பாடு செய்யலாமென்று கூறினார்.
மோகினி : நல்ல விஷயம்.
அழகியசிங்கர் : அவர் ஏற்பாடு செய்தது மாதிரி கூட்டம் நடந்தது.
ஜெகன் : மனுஷ்ய புத்திரன், கல்யாணராமன், அழகியசிங்கர், நேசமித்ரன் என்று நால்வர்கள் பேசினீர்கள்.
அழகியசிங்கர் : நாங்கள் நால்வரும் சிறப்பாகப் பேசினோம். ஆத்மாநாம் பற்றி யாரிடம் பேசினோம். கல்லூரி மாணவ மாணவிகளிடம்.
ஜெகன் : ஆத்மாநாமை அவர்களுக்குப் புரியுமா?
அழகியசிங்கர் : அவரைப் புரிந்துகொள்ள உதவியது. இப்போது உள்ள இளைஞர்களுக்கு ஆத்மாநாமை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். அதை மனுஷ் சிறப்பாகச் செய்தார்.
மோகினி : கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாபகப்படுத்துகிறோம்.
அழகிய சிங்கர் : இன்றைய கவிதை எழுதுபவருக்கு ஒரு திருப்புமுனையாக ஆத்மாநாம் கவிதைகள் இருக்கின்றன. நான் திரும்பவும் எடுத்து ஒவ்வொன்றாய் அவர் கவிதைகளை உன்னிப்பாகப் படிக்கலாமென்று நினைக்கிறேன்.
மோகினி : இங்கு ஆத்மாநாம் கவிதைகளை ஞாபகப்படுத்தும்படி எதாவது ஒரு கவிதையைக் கூற முடியுமா?
அழகியசிங்கர் : முடியும். ஒரு சின்ன கவிதையைப் பகிர்ந்து கொள்கிறேன்.
உலக மகா யுத்தம்
ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது
காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது
காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை
ஜெகன் : இந்தக் கவிதை சிறப்பாக உள்ளது.
அழகியசிங்கர் : ஆத்மாநாம் நினைவு நாள்
விழாவும் சிறப்பாக நடந்து முடிந்தது.
ஜெகன்: இரவு பத்தாகி விட்டது. நாளை பேசலாம்.
மோகினி : இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம்.
(பதிவான நேரம் : இரவு 10.03)
