ரமண விருந்து/ சிவ.தீனநாதன்

  1. தசமன் கதை

(கதை கூறுவதில் பகவானுக்குச் சமமாக யாரையும் கூறமுடியாது.)


பகவான் கூறுவார், ‘ஆத்மா பிரத்யட்சமாக இருக்கிறது. அதை அடைகிறேன் என்று செய்யும் முயற்சி யானது ‘தசமன் கதை’யைப் போல முட்டாள்தனமாகும்.
ஓர் அடியார் கேட்டார், ‘பகவானே! அந்த தசமன் கதை என்ன?’
கதை கூறுவதில் பகவானுக்குச் சமமாக யாரையும் கூற முடியாது.
பகவான் உடனே புன்முறுவலுடன் கதை சொல்ல ஆரம்பித்தார்.
பத்து புத்திசாலிகள் ஓர் ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். தாங்கள் பத்து பேரும் சரியாகயிருக்கிறோமா, என்பதைத் தெரிந்து
கொள்ள ஒவ்வொருவனும் எண்ணி கணக்குப் பார்த்தான்; ஒவ்வொருவனும் எண்ணி ஒன்பது பேர் மட்டும் இருப்பதாகக் கூறினான்; தன்னைச் சேர்த்துக் கொள்ள மறந்து விட்டான்!
எனவே, அவர்கள் அனைவரும் தங்களுள் ஒருவனைக் காணவில்லை என்று துக்கப்பட்டு அழ ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது அங்கு வந்த ஒரு வழிப்போக்கன் இவர்களின் அழுகைக்குக் காரணம் என்ன என்பதைக் கேட்டு விஷயத்தைப் புரிந்து கொண்டான்.
அவன் கூறினான், ‘நீங்கள் பத்துபேர் இருக்கின் றீர்கள். காணாமல் போன பத்தாவது ஆளை நான் காண்பிக்கிறேன்’
அந்தப் பத்துபேரும் ஒருவாறுதேறி அந்த வழிப் போக்கனைப் பத்தாவது ஆள் (தசமன்) எங்கே என்று கேட்டார்கள்.
அவ்வழிப்போக்கன் அவர்களை வரிசையாக நிற்கச் சொல்லி ஒவ்வொருவராக ஒன்று, இரண்டு, மூன்று, என்று எண்ணிக்கொண்டு வரச்சொன்னான். பத்து பேரையும் எண்ணச் செய்தான்.
இவ்வாறு, ‘பார்த்தீர்களா! நீங்கள் பத்துபேர் இருக்கின்றீர்கள், ’ என்று நிரூபித்துவிட்டுச் சென்றான்.
காணாமல் போன தசமன் கிடைத்துவிட்டதை அறிந்த பத்து பேரும் சந்தோஷப்பட்டனர்.
இந்தப் பத்துபேரும் தங்களுள் ஒருவன் காணவில்லை என்று அழுதபொழுதும், பிறகு அவன் திடைத்துவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்ட போதும் அங்கு பத்துப்பேர் இருந்துகொண்டுதான் இருந்தார்கள்.
ஆகையால் இந்த தசமன் கதையைப் போல பிரத்யட்சமாக இருக்கிற ஆத்மாவைத் தேடுகிறேன் என்று செய்கிற முயற்சி முட்டாள்தனமாகும்.
இந்த தசமன் கதைக்குத் தத்துவ ரீதியான விளக்கம், ‘கைவல்ய நவநீதம்’ என்ற நூலில்
கொடுக்கப்பட்டுள்ளது.

  1. பத்துப் பேரை எண்ணும்போது தன்னைச் சேர்த்துக்கொள்ள மறந்த மயக்கமே
    ‘அஞ்ஞானமாகும்’.
  2. பத்தாவது மனிதனைக் காணவில்லை; அவன் இல்லை என்பதே அறியாமை நீங்காத ‘ஆவரணமாகும்’
  3. தசமனைக் காணவில்லை என்று துக்கப்பட்டு அழுதது ‘விட்சேபமாகும்’.
  4. வழிப்போக்கன் ஒருவன் இவர்கள் புலம்பலுக்குக் காரணம் அறிந்து பத்தாவது மனிதன் இங்கேயே இருக்கிறான் என்று கூறியதைக் குறிப்பாக நினைத்து நம்பிக்கை கொண்டது ‘பரோட்ச ஞானமாகும்.’
  5. அவ்வழிப்போக்கன் ஒன்பது பேர்களை எண்ணிய நீயே பத்தாமவன் ஆவாய் என்று கூறவே, தன்னைத் தசமனாகக் கண்டது ‘அபரோட்ச ஞானமாகும்.
  6. அழுகை நீங்கியதே ‘துக்க நிவர்த்தியாகும்.
  7. உண்மை விளங்கி, உள்ளத்தில் சந்தேகம் தீர்ந்ததே ‘தடையற்ற ஆனந்தமாகும்’.
  8. ரமண விருந்து/சிவ.தீனநாதன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)