ரமண விருந்து/சிவ.தீனநாதன்

  1. இலையை வழித்து உண்பது சரியா?

(‘சுவாமி! இலையை இப்படிச் சுத்தமாகத் துடைத்து சாப்பிடுவது நமது தேச ஆசாரமல்லவே:)

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளைப் பற்றி எழுதப் பட்டுள்ள அத்தனைப் புத்தகங்களிலும் பகவான் சாப்பிடும் அழகை வர்ணித்திருக்கிறார்கள்.
பகவான் எப்படிச் சாப்பிடுவார்? ஒரு பருக்கை யைக் கூட வீணாக்கமாட்டார். விட்டு வைக்க மாட்டார்! சாப்பிட்டு முடிக்கும் போது இலையை வழித்து, வழித்து அதைச் சுத்தமாக, சாப்பிடாத ஒரு புது இலையைப் போல ஆக்கிவிட்டுத்தான் எழுந் திருப்பார். இதை பகவானது அடியார்கள் அனை வரும் அறிவார்கள். இலையை இப்படி வழித்துச் சாப்பிடுவது சரிதானா? இந்த சந்தேகத்தை அடியார் கள் எவரும் பகவானைக் கேட்டதில்லை.
ஒரு நாள் சாப்பாட்டு அறையில் கிருஷ்ண பிக்ஷ© என்ற துறவி, பகவான் இலையைக் கண்ணாடி போல் துடைத்து உண்பதைக் கண்டார். அவர்துணிச்சலுடன் பகவானிடம், ‘சுவாமி, இலையை இப்படிச் சுத்தமாகத் துடைத்துச் சாப்பிடுவது நமது தேச ஆச்சாரமல்லவே; இலையில் சிறிதாவது மிச்சம் வைப்பது பிற ஜீவராசிகளுக்கு உணவாகுமே’ என்றார்.
பகவான் இதற்கு ஆணித்தரமாகப் பதில் அளித்தார். ‘சரி அப்படி ஜீவராசிகளிடம் இரக்கம் காட்டுவதென்றால் நாம சாப்பிடுவதற்கு முந்தி அதுகளுக்கு ஏன் சோறு போடக்கூடாது? நாம் சாப்பிட்டு மிச்சப்பட்ட எச்சிலைத்தான் அவைகள் சாப்பிடவேண்டுமென்பது உங்கள் எண்ணமா?’ கிருஷ்ண பிக்ஷு வாயடைத்து நின்றுவிட்டார்.
ஆம். இன்றைக்கும் ரமணாஸ்ரமத்தில், பசு, நாய், குரங்கு, அணில், காக்கை – அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு படைத்தபின்பே இரண்டுகால் பிராணிகளான மனிதர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது.
பகவானுக்கு சகல ஜீவராசிகளும் ஒன்றுதான்; உயர்வு-தாழ்வு இல்லை; அவர் சமபாவம் உள்ளவர்.

ரமண விருந்து/சிவ.தீனநாதன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “ரமண விருந்து/சிவ.தீனநாதன்”

Comments are closed.