சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. தோடுடைய செவியன்

அழுகின்ற குழந்தையைக் கரையில் நிறுத்திவிட்டுத் தந்தை குளத்திலிறங்கி நீராடுகிறார். சற்று நேரத்தில் அழுகையும் நின்றது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தை பார்க்கிறார். குழந்தையின் வாயில் யாரோ கொடுத்த பாலின் எச்சம் வடிந்திருக்கிறது. “யாருடைய எச்சில் பாலை அருந்தினாய்?” என்று கோபத்துடன் தந்தை ஒரு கோல் கொண்டு குழந்தையை அடிக்கிறார். பிள்ளை சிறிதும் தயங்காமல் மலை மீது அமர்ந்திருக்கும் தோணியப்பராகிய சிவனது உருவத்தைச் சுட்டிக் காண்பிக்கிறான். காண்பித்தது மாத்திரமல்ல, அந்த மூன்று வயதுப் பச்சிளம் பாலகன் ஒரு பாட்டே பாடுகிறான்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந் தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

தேவாரம் பாடிய நாயனார் மூவரில் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டதாகச் சொல்லப்படும் காட்சி இது. சீர்காழியிலே கவுண்டின்னியப் பிராமணர் குலத்திலே சிவபாத விருதயர் என்பவரின் குழந்தையாகப் பிறந்த இந்த அபூர்வப் பிறவி மூன்று வயதிலேயே செந்தமிழ்ப்பாக்கள் பாடித் தமிழ் உலகத்தையும் சைவ உலகத்தையும் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. மூன்று வயதிலாரம்பித்து, பதினாறு வயது வரை தமிழ் நாட்டிலுள்ள சிவத்தலங்களுக்கெல்லாம் சென்று இசைத்தமிழ்ப் பாடல்கள் இயற்றிப் பதினாறாம் ஆண்டில் மறைந்த இந்த ஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் கொஞ்சமல்ல. தமிழ் நாட்டிலே அப்போது கவ்விப் பிடித்திருந்த சமண மதத்தின் செல்வாக்கைத் தகர்த்தெறிந்த பெருமையும் இந்த இளம் சிங்கத்துக்குக் கிடைத்தது. அப்பரும் சுந்தரரும் இந்த ஞானக்குழந்தைக்குக் காட்டிய மரியாதை சொல்லுந்தரமல்ல. எத்தனையோ ஆண்டுகள் மூத்தவரான அப்பர் சுவாமிகள் இந்தக் குழந்தையைக் காண எங்கிருந்தோ தேடி வந்தார். தில்லையிலிருந்து திருவாரூர் நோக்கிச் சென்ற சுந்தரமூர்த்தி நாயனார் சீர்காழிக்கு வந்ததும், சம்பந்தர் பிறந்த புண்ணிய பூமியில் தமது கால் படுதலாகாது என்ற மரியாதையுடன் நகரின் புறத்தே நின்று வணங்கிவிட்டுச் செல்கிறார். அத்தகைய பெரும்புகழைக் கொண்டவர் ஞானசம்பந்தர்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள பல கோயில்களில் ஒரு சில தருமபுர ஆதீனத்தின் மேற்பார்வையிலும் ஆட்சியிலுமிருக்கின்றன. இவற்றிற்கு ஏராளமான சொத்து வசதியுமுண்டு. சீர்காழிச் சட்டைநாதர் தேவஸ்தானமும் அப்படியான ஒன்று. தருமபுர ஆதீனத்துக்குள்ள கோயில்களெல்லாம் நிர்வாகத் திறமைக்குப் பேர் போனவை. கோயில் வீதியிலோ பிராகாரங்களிலோ மண்டபங்களிலோ ஒரு தூசி துரும்பைப் பார்க்க முடியாது. வெகு சுத்தமாயிருக்கும். பூசைக் கிரமங்கள் மிக ஒழுங்காக நடைபெறும். இதை அவர்கள் பரிபாலனத்திலுள்ள எல்லாக் கோயில்களிலும் பார்க்கலாம்.
சீர்காழி கோயில் மற்றைய கோயில்களைப் போலல்லாது சிறிது வேறுபட்டது. மூலஸ்தானத்து மூலவர் லிங்க வடிவான பிரம்ம புரீஸ்வரர். கர்ப்பக்கிருகத்தின் விமானம் இரண்டு கட்டுக்களைக் கொண்டது. இரண்டாவது கட்டை ‘மலை’ என்று சொல்வார்கள். இங்கு பிரதிட்டை செய்யப்பட்டிருப்பவர் தோணியப்பர். உலக மெல்லாம் ஒரு காலத்தில் பெருவெள்ளத்தில் மாள, நோவா என்பவனது தோணி மாத்திரம் மிதந்த கதை விவிலிய நூலில் கூறப் பட்டிருக்கிறது. அதுபோல் நம்முடைய ஐதிகத்திலும், சகல லோகங்களும் அழிந்துபோகும் பிரளய காலம் ஒன்றுண்டு. அப்போது உலகம் முழுவதும் ஒரே வெள்ளப் பெருக்கில் அழிந்து போக இறைவன் ஒருவனே ருத்ர மூர்த்தியாக நின்று சுடுகாட்டில் நர்த்தனம் புரிவான்.

பெருங்கடல் மூடிப் பிரளயங்கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே

பிரமனும் விஷ்ணுவும் இறந்து போவார்கள். படைத்தலும் காத்தலும் உலகத்தில் அற்றுப்போக, ருத்ர மூர்த்தியே மீண்டும் உலகம் தோன்றுதல் வேண்டி நின்று சிருஷ்டி நடனம் புரிவான்.
அப்படிப்பட்ட பிரளய வெள்ளத்திலே நோவாவின் கலம் போல இந்தச் சீர்காழி என்ற தலம் தோணியாக மிதந்ததென்று சொல்வர். அதனாலேயே தோணிபுரம் என்ற பெயர் பெற்றது. நாவுக்கரசு நாயனார் ஒரு தேவாரத்தில் “அலையும் பெரு வெள்ளத்தன்று மிதந்ததித் தோணிபுரம்” என்று பாடிவைத்திருக்கிறார்.
தோணியப்பர் சந்நிதிக்கு மேலே இருப்பவர் சட்டைநாதர். மாவலியைத் தமது காலால் ஊன்றிச் செருக்கடக்கிய மகாவிஷ்ணுவுக்கு அகங்காரம் ஏற்பட்டதாம். உடனே சிவன் பைரவ வேடம் பூண்டு விஷ்ணுவை அடக்கி அவர் தோலை உரித்துச் சட்டையாகப் போர்த்திக்கொண்டார் என்று ஒரு புராணக் கதையுண்டு. இதனால் அவர் சட்டைநாதர் என்ற பெயரில் சீர்காழிக் கோயில் மலைமீது ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். வெள்ளிக்கிழமை நடு இரவில் இந்தச் சட்டைநாதருக்குப் பூசை நடைபெறும். புனுகு சாத்துவார்கள். இவரைத் தரிசிக்கப் பெண்கள் பொழுது சாய்ந்தபின் போகலாகாதென்று சொல்வார்கள்.
சித்திரை மாதத்தில் நடக்கும் உற்சவத்தில் ஞானப்பால் உற்சவம் விசேஷமாயிருக்கும். ஞானசம்பந்தருக்கு அன்று விசேஷ அபிஷேகம். திருக்குளத்தின் பக்கத்தில் ஒரு வளைவு கட்டப்பெற்றிருக்கிறது. அந்த இடத்தில் காலையிலே சம்பந்தர் திருவுருவைக் கொண்டுவந்து நிறுத்தி உமாமகேசுவரரையும் அம்பாளையும் எழுந்தருளச் செய்து, தங்கக் குடத்திலே பாலைக் கொண்டுவந்து, ஞானப்பால் ஊட்டுவதாகப் பாவனை செய்து, பொற்கிண்ணத்தில் எடுத்துப் புகட்டுவார்கள். உடனே அம்மனைத் திருப்பி உள்ளே கொண்டுவந்து விட்டு, ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்மனும் வந்து ஞானசம்பந்தருக்குக் காட்சி கொடுப்பதாகக் காண்பிப்பார்கள். அச்சமயத்தில் ஓதுவாருக்குப் பரிவட்டம் கட்டி, “தோடுடைய செவியன்” என்ற திருப்பதிகம் பாடி, வீதி வலம் வந்து, வாகனத்திலிருந்து இறக்கி விக்கிரகங்களை மலைக்குக் கொண்டு போவார்கள். ஞானசம்பந்தரின் இந்த நிகழ்ச்சி, அதாவது ஞானப்பால் உண்ட நிகழ்ச்சி, புராணக் கதை என்றாலும் சம்பந்தரின் தேவாரத்திலேயே ஒரு சான்றிருப்பதாகத் தெரிகிறது.

போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தான் எனை ஆண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையார் அவளொடும் பெருந்தகை யிருந்ததே

சீர்காழி ஒரு கோயில் நகரம் என்பதைத் தவிர வேறு முக்கியத்துவம் எதுவும் பெறவில்லை. அங்கிருந்து பக்கத்திலுள்ள திருக்கோலக்கா என்ற தலத்தைத் தரிசித்தோம். ஞானசம்பந்தர் உமாதேவியின் வரப்பிரசாதம் பெற்று இன்னிசைப் பாடல் பாடத் தொடங்கியதும், தம் தந்தையின் தோள்மீது அமர்ந்து வந்து இங்குதான் முதன்முதல் கைகொட்டித் தாளத்துடன் பாடினார் என்று சொல்லப்படுகிறது. சீர்காழிக்கு அரை மைல் மேற்கிலுள்ளது திருக்கோலக்கா. இங்குள்ள சுவாமியின் பெயர் திருத்தாளமுடையார். அம்பாள் பெயர் ஓசை கொடுத்த நாயகி. ஞானசம்பந்தருடைய தேவாரப் பதிகங்கள் யாவும் சந்தப் பாடல்கள். அதனால் அவர் கையிலே தாளம் போட்டுப் பாடுவார். இங்கே கோலக்காவில் வந்து, “மடையில் வாளை பாய” என்ற தக்கராகப் பாசுரத்தைக் கைகொட்டிப் பாடியதைக் கண்ட இறைவன், இந்தப் பிஞ்சுக்கை தாங்கமாட்டாதென்று பஞ்சாட்சாரம் பதித்த பொற்தாளம் கொடுத்துதவினார். அம்பாள் உடனே அந்தத் தாளத்துக்கு ஓசை கொடுத்தார். அதனாலேயே இங்குள்ள சுவாமிக்கும் அம்மனுக்கும் திருத்தாளமுடையார், ஓசைகொடுத்த நாயகி என்ற பெயர்கள் ஏற்பட்டன.
சம்பந்தருக்கு சுமார் நூறு ஆண்டுகள் பின்வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இந்தப் பொற்றாளம் கோலக்காவில் கொடுத்த செய்தி தெரிந்திருக்கிறது. அவர் இந்த மார்க்கமாக வந்தபோது, திருக்கோலக்கா இறைவனைக் கண்டு தரிசித்து, “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்து அவன் பாடலுக்கிரங்கும் தன்மையாளன்” என்று தெளிவாகப் பாடி வைத்தார். சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவத்தன்று ஞானசம்பந்தரை திருக்கோலக்காவுக்கு எழுந்தருளச் செய்து தாளம் வாங்கிச்செல்வதாக உற்சவம் நடந்து வருகிறது.
ஞானசம்பந்தர் காலத்தில் சீர்காழியில் வசித்த மற்றொரு நாயனார் கணநாதநாயனாரைப் பற்றியும் சேக்கிழார் ஒரு வரலாறு தருகிறார். தோணியப்பருக்குத் தினந்தோறும் திருப்பணி செய்து வந்த கணநாதர் ஞானசம்பந்தரையே குருவாகக் கொண்டு பூசை செய்து வந்தவர். இவர் சைவ சமயப் பிரச்சாரகராயிருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. சம்பந்தரின் தேவாரப் பதிகங்களை எழுவதிலும், அவற்றை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதிலும், சரியை மார்க்கத்தில் நந்தவனம் வைத்தல், மாலை தொடுத்தல் முதலிய
கைங்கரியங்களை மற்றவர்களுக்குப் பழக்குவதிலும் கணநாதர் ஈடுபட்டிருந்தார். இந்த வகையில் தொண்டு செய்து இறைவனடி சேர்ந்த காரணத்தால், கணநாதரும் ஒரு நாயனார் பதவியைப் பெற்றார்.
சம்பந்தர் வாழ்க்கையைப் படிக்குங்கால் மற்றைய நாயன்மார்களைக் காட்டிலும் இவர் ஒருவரே சமண எதிர்ப்பில் ஈடுபடுட்டுச் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் தொண்டை நாட்டிலும் அவர்கள் மதத்தின் குறைபாடுகளை எடுத்துச் சொல்லி, அவர்களைப் போல் அற்புதங்கள் நிகழ்த்திக்காட்டி, மக்களை முன்போல் சைவத்துக்குத் திருப்பியவர் என்ற உண்மையைப் பார்க்கலாம். ஆகையால், இவருடன் கூட, இவருக்குக் கருவியாகப் பல போதகர்கள் சென்றிருக்க வேண்டும். அவர்களைச் சம்பந்த சரணாலயர் என்று சொல்வார்கள். அவர்களில் மூத்தவர்தான் கணநாதநாயனார் என்று நாம் கொள்ளலாம்.
திருக்கோலக்காவிலிருந்து திரும்பிய சம்பந்தர் சீர்காழிக்கு வந்ததும் அவரது இசைப் பெருமை பல இடங்களுக்கும் பரவியது. திருவதிகையிலிருந்து தில்லைக்கு வந்த நாவுக்கரசருக்கும் எட்டியது. தொண்டை நாட்டில் எருக்கத்தம்புலியூரைச் சொந்தமாகக் கொண்ட யாழ் மன்னன் திருநீலகண்ட யாழ்ப்பாணர் காதிலும் எட்டியது. பக்கத்திலுள்ள நனிபள்ளி கிராமத்தின் மக்களுக்கும் எட்டியது. இந்தக் கிராமம் சம்பந்தரின் தாயார் பகவதியார் ஊர். ஆகையால் தாயாரின் உறவினரும் மற்றவர்களும் சீர்காழிக்கு வந்து தமது கிராமத்தையும் புனிதப்படுத்த வேண்டுமென்று சம்பந்தரை வேண்டிக்கொண்டார். அப்படியே ஞானசம்பந்தரும் வழக்கம் போல் தமது தந்தையார் தோளில் ஏறிக்கொண்டு நனிபள்ளிக்குப் போய்த் தரிசனம் கொடுத்துத் திரும்பினார்.
சீர்காழியிலிருந்து நாங்கள் உடனே இந்த நனிபள்ளிக்குப் போகவில்லை. பின்னால் சாய்க்காடு, பல்லவனீச்சரம் போகும்போது நனிபள்ளியைத் தரிசித்தோம். அந்தக் கதை அப்புறம். இங்கே சீர்காழிக்கு வந்த மற்றும் இரு நாயன்மார்களையும் பார்த்துவிட்டுச் செல்வோம்.
சீர்காழியிலே பிறந்த பச்சிளங்கன்று ஒன்று இசைத்துறையில் மேதையாகிச் செந்தமிழ்ப் பண்களை வாரியிறைத்துக் கொண்டிருந்ததை மற்றைய ஊர்களில் வசித்த சில இசைக் கலைஞர்கள் கேள்விப்பட்டனர். பழந்தமிழ் இசையாகிய பண்முறையில் பாடல் இயற்றும் கலைஞர்கள் அருகிய காலத்தில் ஞானசம்பந்தரின் தேவாரப் பதிகங்கள் ஒரு புதுமையைத் தந்தன. சம்பந்தருக்குப் பல ஆண்டுகள் மூத்தவராகிய திருநாவுக்கரசர் பாடிய நூற்றிருபத்தாறு பதிகங்களில் ஐந்தே ஐந்து இடங்களில் மாத்திரம் காந்தாரம், குறிஞ்சி, சீகாமரம், பழந்தக்கராகம், இந்தளம் ஆகிய பண்களை உபயோகித்திருக்கிறார். மற்றும் அவர் பாடிய பதிகங்கள் யாவும் விருத்தம், நேரிசை, குறுந்தொகை, தாண்டகம் என்ற பாவினங்களாகவே இருந்தன. ஞானசம்பந்தர் பதிகங்களில் அவர் மொத்தம் இருபத்திரண்டு பண்களை உபயோகித்திருக்கிறார். இவற்றுள் சில பண்கள் அபூர்வமான அமைப்புக் கொண்டவை. யாழ்மூரி என்பது அவரே இட்டுக் கட்டிக்கொண்ட பண். இவற்றைத் தவிர, சக்கரமாற்று, கோமூத்திரி, எழுகூற்றிருக்கை, மொழி மாற்று முதலிய பலவகை யாப்பமைதிகளையும் ஞானசம்பந்தர் தமது தேவாரப் பதிகங்களில் உபயோகித்திருக்கிறார். ஆகையால், இவரது இசைப்புலமை தமிழ்நாடெங்கும் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தி விட்டதில் வியப்பில்லை.
எருக்கத்தம்புலியூரில் பிறந்து, தமது குலத்தொழிலுக்குரிய யாழ் வாசித்துப் பிழைத்துவந்த பாணர் ஒருவர், மதுரைச் சொக்கநாதர் சந்நிதியில் ஒரு நாள் யாழ் வாசித்தபின் அந்தத் தெய்வத்தின் அருள் கிடைத்தது. அன்றிலிருந்து திருநீலகண்ட யாழ்ப்பாணர் தமது யாழ் வாசிப்பை இறைவனுக்கே அர்ப்பணம் செய்து வந்தார். அவர் மனைவி மதங்கசூளாமணி அந்த யாழுக்குப் பொருந்தப் பாட வல்லவர். இருவரும் பல தலங்களைத் தரிசித்து வரும் நாளில், ஞானசம்பந்தருடைய அபூர்வ இசைஞானத்தைக் கேள்வியுற்று சீர்காழிக்கு வந்தார்கள். ஏற்கெனவே பாணருடைய கீர்த்தியைப் பற்றி ஞானசம்பந்தரும் கேள்விப்பட்டிருந்தாராகையால் அவரை எதிர்கொள்ள பாணர் உடனே சம்பந்தரின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து நின்றார். பின்னர் இருவரும் சுவாமி தரிசனம் செய்து முடித்ததும், வழக்கம்போல மதங்கசூளாமணியார் பாட, பாணர் யாழ் வாசிக்கக்கேட்டு ஞானசம்பந்தர் பாணரின் வாசிப்பை மெச்சினார். உடனே பாணர், “சுவாமி! தங்கள் இசைப்பாட்டுக்கு அடியேன் யாழ் வாசிக்கும் பணியை வேண்டுகிறேன்,” என்று இறைஞ்சி நின்றார். ஞானசம்பந்தரும் அந்த வேண்டுகோளுக் கிணங்கி, அப்படியே ஆகட்டும் என்று அங்கீகாரம் கொடுத்தார். அன்றிலிருந்து அவர்கள் சென்றவிடமெல்லாம் சம்பந்தர் பாடல் களுக்கு யாழ்ப்பாணரே யாழ் வாசிக்கும் வழக்கமாகிவிட்டது.
திருஞானசம்பந்தர் சில நாட்கள் பல தலங்களையும் தரிசித்து விட்டுச் சீர்காழிக்குத் திரும்பியதும் ஒரு நாள் திருநாவுக்கரசு நாயனார் அங்கு வந்தார். உடல் முழுவதும் திருநீற்றுப் பொலிவும், மேலே ஒரு கந்தைத் துண்டும், கையில் உழவாரமும், கண்ணீர் மழையும், நடுங்கும் உடம்புமாக வரும் வாக்கின் மன்னனைக் “கவுணியக் கன்று” ஓடிச்சென்று வணங்கி, “அப்பரே!” என்றார். நாவுக்கரசரும் உடனே எதிர் வணங்கி, “அடியேன்!” என்றார். அன்றிலிருந்து ஆரம்பித்த நட்பு வெகு நாள் நீடித்தது. நாவுக்கரசருக்கும் அப்பர் என்ற திருநாமம் நிலைத்து விட்டது.
ஞானசம்பந்தர் ஏற்றி வைத்த இசைவிளக்கு அணையாத் தீபமாகச் சீர்காழியில் நிலைபெற்றது போலும். தில்லை யம்பலத்தானைப் பாடிய இசைப் புலவர் முத்துத்தாண்டவர் சீர்காழியிலே வாழ்ந்தார். இராமநாடகம் தந்த அருணாசலக் கவிராயரும் சீர்காழியில்தான் வாழ்ந்தார். இவரைத் தில்லையாடி அருணாசலக் கவிராயர் என்பர். தில்லையாடியில் பிறந்து கவி பாடுவதில் நிகரற்றவராயிருந்த இவர் சீர்காழியில் குடியேறியது ஒரு விசித்திரமான கதை. சீர்காழியில் தருமபுர ஆதீன நிர்வாகியாயிருந்த சிதம்பரநாத முனிவர் பூர்வாசிரமத்தில் அருணாசலக்கவிராயருடன் கல்வி கற்றவர். கவிராயர் ஒரு நாள் வியாபார நிமித்தமாகத் தில்லை யாடியிலிருந்து வரும் வழியில், சீர்காழியில் சிதம்பரநாத முனிவர் கட்டளை சுவாமியாக இருப்பதை அறிந்து போய்ப் பார்த்து மகிழ்ந்தார். சிதம்பரநாத முனிவர் தாம் சீர்காழிமேல் ஒரு பள்ளுப் பிரபந்தம் பாடத் தொடங்கியிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து பாடி முடிக்கச் சமயமில்லையென்றும், கவிராயர் அங்கே தங்கியிருந்து முடித்துச் செல்ல வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மறுத்துச் சொல்ல முடியாத கவிராயர், சரி என்று சொல்லி ஒரே மூச்சில் பிரபந்தத்தை எழுதி முடித்தார். மறுநாள் இரவு புறப்பட வேண்டியவர் தாம் எழுதிய பிரபந்த ஏட்டை மடத்துப் பணியாளர் ஒருவர் கையிற் கொடுத்து, முனிவர் கையில் ஒப்படைக்குமாறு சொல்லிவிட்டு, புதுவைக்குப் பிரயாணமாகி விட்டார்.
மறுநாட்காலை சிதம்பரநாத முனிவர் தமது நண்பர் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று அறிந்ததும், அவரை எப்படியாவது சீர்காழிக்கு வரவழைத்துவிட வேண்டுமென்று திட்டம் போட்டார். கவிராயரே அழைப்பதுபோன்று ஒரு கடிதம் எழுதி, தில்லையாடி
யிலிருந்த கவிராயரின் குடும்பத்தை வரவழைத்து, சீர்காழியில் வீடொன்று வாங்கி அதில் அவர்களை இருக்கச் செய்தார். புதுவை சென்ற கவிராயர் திரும்பிச் சீர்காழி மார்க்கமாக வரும்போது முனிவரைச் சந்தித்தார். இருவரும் பேசிக்கொண்டே வீதியில் நடந்து வரும்போது, வடக்கு வீதியில் ஒரு வீட்டில் கவிராயர் தமது குடும்பம் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்! “உம்மை எப்படி யாவது இங்கே என் பக்கத்தில் வைத்திருக்க வேண்டியே உமது குடும்பத்தை. இங்கே வரவழைத்து விட்டேன்” என்றார் சிதம்பரநாத முனிவர். அருணாசலக் கவிராயர் மிக மகிழ்ந்து அன்று முதல் சீர்காழியில் தமது குடும்பத்தோடு வசித்து வந்தார். சீர்காழி வாசிகள் அவரைத் தில்லையாடி அருணாசலக் கவிராயர் என்றே அழைத்து வந்தனர்.

சோ.சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்”

Comments are closed.