சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. ஆதனூர் கண்டது

சிதம்பரத்திலே நந்தனார் தீப்பாய்ந்த ஓமகுளத்தைப் பார்த்தபோதே அவர் பிறந்த ஆதனூரையும், திருப்பணி செய்த திருப்புன்கூரையும் பார்த்துவிடவேண்டுமென்று தீர்மானித்தோம். ஆதனூரைப்பற்றிப் பலருக்குத் தெரியாது. கொள்ளிடத்துக்கு வடக்கே காட்டுமன்னார் கோயில் பக்கமாயுள்ள ஆதமங்கலம்தான் ஆதனூர் என்று சிலர் எங்களுக்கு வழிகாட்டினார்கள். கொள்ளிடம் தாண்டாமல் திருப்புன்கூருக்கு மேற்கிலுள்ளது இந்தக் கிராமம் என்று வேறு சிலர் சொன்னார்கள். எப்படியாயிருந்தாலும் முதலில் திருப்புன்கூருக்குப் போனால் ஆதனூரையும் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டோம்.
மணி பன்னிரண்டிருக்கும் நாங்கள் சீர்காழியிலிருந்து நான்கு மைல் தூரத்திலிருக்கும் வைத்தீஸ்வரன் கோயிலைப் போய்ச் சேர்ந்த போது. இந்தத் தலத்தில் நிர்வாகஸ்தராயிருந்தவர் எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் சொந்தக்காரர். முன்பே எனக்கு அறிமுகமான தம்பு என்று அழைக்கப்படும் சீனிவாச ஐயங்கார். வைஷ்ணவரா யிருந்தபோதிலும் தருமபுர ஆதீனத்திலே மிகுந்த செல்வாக்குள்ள, திறமைசாலியான உத்தியோகஸ்தர். எங்களைக் கண்டவுடன் இனித்த முகத்துடன் வரவேற்று, “மணி பன்னிரண்டாகப் போகிறது. முதலில் தரிசனம் பண்ணிவிட்டு வாருங்கள்” என்று சொன்னவர், பக்கத்தில் நின்ற ஒரு பணியாளனுக்குத் தலையசைத்து மாத்திரம் ஏதோ உத்தரவு கொடுத்தார். அவ்வளவுதான். அந்தப் பணியாளன் எங்களுக்கு வழி காட்டினார். ஒவ்வொரு சந்நிதியாகத் தரிசனம், அர்ச்சனை, தீபாராதனை எல்லாம் நடந்தது. அங்கங்கு நாங்கள் மடியிலே கை வைக்கும் போதெல்லாம், “வேண்டாம். அதெல்லாம் மேலிடத்து உத்தரவு” என்று பதில் சொல்லிவிட்டார் பணியாளன்! கடைசியாக தேவஸ்தானக் காரியாலயத்துக்கு வந்தபோது தம்பு விசாரித்தார். “தரிசனம் முடித்துக் கொண்டீர்களா? சரி, கெஸ்ட் ஹவுஸுக்குப் போங்கள், சாப்பாடு அங்கே வந்து சேரும். சாப்பிட்ட பின் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, திருப்புன்கூரையும் ஆதனூரையும் போய்ப் பார்த்து வரலாம். ஆதனூர் என்ற பெயர் இப்போதில்லை. அதற்கு மேலாநல்லூர் என்று சொல்வார்கள். திருப்புன்கூருக்குப் பக்கத்திலேதானிருக்கிறது அந்த கிராமம்” என்று சொன்னவர், பக்கத்திலே நின்ற பணியாளனைப் பார்த்தார். எல்லாம் புரிந்துகொண்டவரைப் போல் அந்தப் பணியாளன் எங்களையழைத்துக் கொண்டு சென்றார்.
திறமை என்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும்! திடீரென வந்த எங்களைச் சாப்பிட்டீர்களா என்று ஒரு வார்த்தை கேட்காமல், மானசீகமாக நிலைமையை மதிப்பிட்டு, சுவாமி தரிசனம் செய்வித்து, அந்த இடை நேரத்திலேயே தங்குவதற்கு இடவசதியும் பகல் உணவும் ஏற்பாடு செய்து எங்களுக்கு அன்புக் கட்டளை பிறப்பித்த அந்த நண்பரை மறக்க முடியுமா?
பகல் உணவருந்திச் சிறிது நேரம் அங்கேயே இளைப்பாறி விட்டுத் திருப்புன்கூருக்குப் போய்ச் சேர்ந்தோம். வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து தென்மேற்கே இரண்டு மைல் தூரம்தான். கோயில் திறந்திருந்தது. முதல் மண்டபத்துப் படிக்கட்டில் ஓதுவார் ஒருவர் உட்கார்ந்து அபிராமி அந்தாதி பாடிக்கொண்டிருந்தார். திருநாளைப் போவார் என்ற நந்தனார் வரலாறு சம்பந்தமாகச் சில தகவல் சேகரிக்க வந்தோம் என்றவுடன் ஓதுவாரே முன்வந்து நந்தன் சரித்திரத்தைக் கதை கதையாகச் சொல்ல ஆரம்பித்தார்.
நந்தனார் சரித்திரத்தைத் தெரியாத தமிழர்களில்லை. ஆனந்த தாண்டவபுரம் கோபாலகிருஷ்ண பாரதியார், சென்ற நூற்றாண்டில் பாடி வைத்த நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, இசைக் கச்சேரிகளிலும், நாடக மேடைகளிலும், திரைப்படங்களிலும் பிரபல்யமாகிவிட்ட தல்லவா? இருந்தாலும் ஓதுவார் நமக்குக் கதை சொன்னார். கேட்டோம். பெரும்பாலும் சேக்கிழார் சொன்ன பெரியபுராணத்தை யொட்டியே சொன்னார். சிறிது கோபால கிருஷ்ணபாரதியாரையும் சேர்த்துக்கொண்டார். அவருடைய உதவியைக் கொண்டு திருப்புன்கூர் கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். பழைமையான கோயில். சோழர்கள் திருப்பணியுடன் பிற்காலத் திருத்தங்களும் சேர்ந்துள்ளன.
ஆதனூர் என்ற கிராமத்தில் பிறந்து, அங்கே பயிர்த்தொழில் செய்துகொண்டு, தமது குலத்தொழிலாகிய தோற்கருவிகள் செய்து கொடுத்து வந்த நந்தன் என்ற ஹரிஜனப் பெரியார் எந்நேரமும் சிவபெருமானையே நினைந்து இறையருள் பெற்று வாழ்ந்தார். ஆதனூருக்குச் சமீபத்திலுள்ளது திருப்புன்கூர் சிவஸ்தலம். நந்தன் அடிக்கடி அங்கு சென்று கோயிலின் வெளிப்புறத்திலேயே நின்றபடி, உள்ளே எழுந்தருளியிருக்கும் சிவலோகநாதனை மனக்கண்ணால் கண்டு தரிசித்து மகிழ்வார். கோபுர வாயிலில் நின்று பிரார்த்திக்கும் நந்தனுக்கு மூலவர் தரிசனம் கிடைக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் எதிரேயிருந்த பெரிய நந்தி விக்கிரகம் அதற்குத் தடையா யிருந்தது. ஒருநாள் நந்தன் மனமுருகி வேண்டிக்கொண்டபோது நந்தி விலகி வழிவிட்டுக் கொடுக்கும்படி இறைவன் அருள் செய்ய, நந்தன் உளமகிழ்ந்து சிவலோகநாதனைத் தம் கண்களால் ஆசை தீரக் கண்டு வணங்கினார். இந்த அற்புதத்தை ஞாபகமூட்ட, திருப்புன்கூர் சிவலோகநாதன் கோயில் நந்தி மூலஸ்தானத்துக்கு நேர் எதிரில் இல்லாமல், ஒரு பக்கமாய்த் தள்ளி இருப்பதைப் பார்க்கலாம். மிகப் பெரிய நந்தி.
திருப்புன்கூர் சிவலோகநாதனுக்குப் பணி செய்த நந்தனார் அந்தக் கோயிலின் மேற்புறத்திலே ஒரு திருக்குளம் வெட்டி வைத்தார். அது இப்போது நந்தன் குளம் என்று வழங்கப்படுகிறது. இதைப் பற்றிய ஒரு கர்ணபரம்பரைக் கதை என்னவென்றால், நந்தனார் தன்னந்தனியே இந்தக் குளத்தை வெட்டி வரும்போது ஆண்டவன் மனமிரங்கி, ஒரு நாள் இரவில் விநாயகரை அழைத்து, பூத கணங்களையும் ஏவிவிட்டு, அந்தக் குளத்தை வெட்டிக் கொடுக்குமாறு பணித்தார். மறுநாட்காலை நந்தனார் விழித்துப் பார்க்கும்போது திருக்குளம் பூர்த்தியானது கண்டு வியந்து பகவானைத் தோத்திரம் செய்தார். இந்தக் குளத்தின் பக்கத்திலே, கோயில் மதிலின் மேற்புறத்தில் குளம் வெட்டிய விநாயகர் என்ற பெயருடன் பிள்ளையார் உட்கார்ந்திருக்கிறார். திருப்புன்கூர் கோயிலின் சந்நிதியில் கோபுர வாயிலையடுத்து ஒரு சிறு கட்டடத்தில் நந்தனார் சிலையிருக்கிறது. உட்கார்ந்திருக்கும் நிலை. சந்நிதிக்கு எதிரே வெளிப்பிராகாரத்தில் தேர் நிலைக்குப் பக்கத்தில் இப்பொழுது ஒரு சிறு கோயில் கட்டி அதில் ஒரு நந்தனார் சிலை வைத்திருக்கிறார்கள். தலைமேல் அஞ்சலிக் கையினராக இந்தச் சிலை அமைந்திருக்கிறது. நந்தி விலகி, மூலவர் தரிசனம் கிடைத்த சம்பவத்தை நினைவூட்டும் பாவனையாக இந்தச் சிலையை நிறுத்தி யிருக்கிறார்கள். இங்கிருந்து சந்நிதியைப் பார்த்தால் நேரே மூலவர் சிவலோகநாதன் தரிசனம் கிடைக்கிறது.
இந்தக் கோயிலிலுள்ள நடராஜ விக்கிரகம் மற்றெங்கும் நாம் காணமுடியாத பெரிய அளவிலுள்ளது. அத்துடன் சிறந்த எழிலோடு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. பழைமையான பத்துப் பதினோராமாண்டுச் சோழ விக்கிரகம் என்று சொல்லலாம்.
ஓதுவாரோடு பேசிக்கொண்டிருந்தபோது ஆதனூரைப் பற்றிக் கேட்டோம். “இங்கே பக்கத்தில் மேற்கே இரண்டு மைல் தூரத்திலே தானிருக்கிறது. மேலாநல்லூர் என்று இப்போது வழங்குகிறது” என்றார் அவர். நாங்கள் கேட்டுக்கொண்டபடி ஆதனூரைப் போய்ப் பார்க்கவும் வழிகாட்டவும் இணங்கி ஓதுவாரும் எங்களுடன் காரில் ஏறிக்கொண்டார். எங்கள் பிரயாணத்தில் கலந்து கொண்ட நண்பர் சிட்டியைப் பற்றியும், கார் சாரதி ராதாகிருஷ்ணனைப் பற்றியும் முன்பே குறிப்பிட்டிருந்தேன். மூன்றாமவர் ஒருவரைப் பற்றியும் இந்தச் சமயத்தில் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது; அவர்தான் எங்கள் கணக்கப் பிள்ளை, காரியதரிசி, குறிப்புகள் எடுக்கும் எழுத்தாளர் என்ற பலவித பணிகள் புரிந்து வந்த வேணு என்று செல்லமாயழைக்கப்படும் வேணுகோபாலன். அங்கங்கே முக்கியமான செய்திகளை ஞாபகப்படுத்தி எனது கவனத்தை ஈர்ப்பதும் அவர் கைங்கரியம். இந்த வேணுவுக்குத் திருப்புன்கூர் ஒதுவார் மீது ஏதோ ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிட்டது! ஆரம்பத்தில் ஓதுவார் வாயில் அபிராமி அந்தாதிப் பாடல்கள் தோன்றிய நேரத்திலிருந்து வேணு வுக்கு ஓர் ஆசை, ஓதுவாரின் கச்சேரி கேட்க வேண்டுமென்று. இப்போது திருப்புன்கூரிலிருந்து ஆதனூர் என்ற மேலாநல்லூர் போகும் வழியில் ஓதுவாரைத் தூண்டிவிட்டார் வேணு. ஓதுவார் வாயிலிருந்து அற்புதமான தேவாரப் பாடல்களும் திருவாசகமும் கந்தரலங்காரமும் மடை திறந்து பொழிய ஆரம்பித்தன. காரின் பின் ஆசனத்திலிருந்த வேணு, எவருக்கும் தெரியாமல் காசெட் டேப் ரிகார்டரைத் தூண்டி வைத்திருந்தார். ஆதனூர் போய்த் திரும்பும் வழியிலே ரிகார்ட் செய்த பாடல்களை ஓதுவாரே கேட்டு ஆச்சரியப்பட வைத்துவிட்டார்! அதன் பலன், தாமும் ரேடியோவில் பாடவேண்டுமென்ற ஆசை பிறந்தது ஓதுவாருக்கு!
மேலாநல்லூர் கிராமத்தின் மத்தியில் ஒரு பழைய சிறிய சிவன் கோயில். கிராமத்தில் நுழைந்த எங்களை முதலில் வரவேற்றது கோயில் வெளிப்புறச் சுவரில் தீட்டப்பட்டிருந்த இன்றைய நவ நாகரிகக் குடும்பக் கட்டுப்பாட்டு முக்கோணச் சின்னம். எதை எந்த இடத்தில் செய்யலாகாதென்ற நுண்ணறிவை ஆர்வமிகுதியுள்ள சில அதிகாரிகள் பெற்றிருக்கவில்லை. திருவாவடுதுறை மடத்துச் சுவரிலேயே இந்த முக்கோணச் சின்னத்தைச் சில அறிவாளிகள் தீட்டியிருக்கிறார்களென்றால் சொல்லவும் வேண்டுமா? எங்கள் திருத்தல யாத்திரையில்தான் இதையுங் கண்டோம்.
ஆதனூரைப் பற்றிச் சேக்கிழார் வருணிக்கும்போது மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த இடமென்றுதான் வருணிக்கிறார். அதாவது செல்வம் செழித்த வேதியர்கள் உறையும் இடம் என்றும், அதனையடுத்தே பயிர்த்தொழிலில் ஈடுபட்ட ஹரிஜனங்கள் வாழ்ந்த புலைப்பாடி இருந்ததென்றும் சொல்கிறார். ஆதனூர் நகரத்தை வருணிக்கும் கற்பனையைக் காட்டிலும் சேக்கிழாரின் புலைப்பாடி தத்ரூபமாயிருக்கிறது.
“அந்த ஊர் வெளிப்புறத்திலே மருதநிலத்தினைச் சார்ந்த வயல்களின் பக்கத்திலுள்ள வரப்புக்களின் ஓரத்திலே, உழவர்களின் சுற்றத்தவர்கள் நெருக்கமாக வசிக்கிறார்கள். புல்லால் வேயப்பட்ட குடிசைகளின் கூரையில் சுரைக்கொடி படர்ந்திருக்கிறது. முற்றத்திலே கோழிக்குஞ்சுகள் நடமாடும். அங்கே துள்ளித் திரியும் நாய்க்குட்டி களைப் புலைச் சிறுவர்கள் தூக்கிக் கொண்டு ஓடும்போது குட்டிகள் குரைக்கும். சிறுவர்களின் இடையிற் கட்டிய மணிகள் அந்த நாய்க் குட்டிகளின் குரைப்பை மறைக்கும்.”
சேக்கிழார் இப்படிப் பன்னிரண்டாம் நூற்றாண்டிலே தாம் நேரே கண்ட காட்சியை வருணிக்கிறார். சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு கோபாலகிருஷ்ண பாரதியார் இன்னும் கொஞ்சம் மேலே போகிறார்:

பழன மருங்கணையும்- புலைப்- பாடியது கூரை வீடு தனில்
சுரையோ படர்ந்திருக்கும்- அதைச்- சுற்றிலும் நாய்கள் குலைத்திருக்கும்
பருந்தோடி வட்டமிடும்- இளம்- பச்சைப் பிசிதமே லிச்சை கொண்டு
கோழியும் கூவும் கூக்குரலும்- பாழும்- கொல்லை யருகினில்
வெள்ளெலும்பும்

தெருவில் விளையாடிக் கொண்டு- அவர்- தெந்தினம் பாடுவர் சுந்தரமாய்
இலுப்பை மணி யரையில்- கட்டி- இண்டந் தலைகளில் பூண்டிருக்கும்
சங்கு தோடு காதணியும்- அருந்- தாவடமே யவர் தூ விடமாம்
மணியோ தரித்திருப்பார்- தெரு- வாசற் புறந்தனி லேசிக் கொண்டு
கொண்டாட்ட மாயிருப்பார்……

இந்தக் காட்சியை இன்று நாங்கள் காணவில்லை. அது ஒரு காலம். இன்று ஆதனூரில் தனியாகப் புலைப்பாடியில்லை. அங்கிருந்த சில குடிகள் வெவ்வேறு ஊர்களுக்கு வேலை தேடிப்போய்விட்டன. இருந்தும் மேலாநல்லூர் வட்டத்தில் ஒரு ஹரிஜனக் குடியேற்றத்தை வைக்க ஹரிஜன முன்னேற்றவாதிகள் தீவிரமாக ஈடுபடுகிறார்கள் என்று ஓதுவார் சொன்னார். அதில் நந்தனார் இல்லம், பள்ளிக்கூடம், மாணவர் விடுதி முதலிய அமைப்புகளுக்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. கோபாலகிருஷ்ண பாரதியார் கர்ண பரம்பரையாக வந்த கதைகளை வைத்துக் கொண்டு, நாற்பது வேலி நிலத்தைப் பண்ணையாராகிய வேதியர் வைத்திருந்தார் என்றும், நந்தன் அந்த நிலத்தையுழுது விதை விதைத்து, ஒரே இரவில் நாற்று நடச் செய்தார் என்றும் சொல்கிறார். நாற்பது வேலி என்ற கணக்கு இன்றும் நினைவிலிருப்பதற்கு, மேலாநல்லூர் வட்டத்தின் பரப்பே நாற்பது வேலி அளவாயிருக்கிறது என்று ஓதுவார் எங்களுக்கு விளக்கினார்.
மேலாநல்லூர் என்ற ஆதனூர் சிவன் கோயில் மிகச் சிறியது. இதற்கு வருவாயுமில்லை. கோயிலின் பக்கத்தில் அக்கிரகாரமும் சுருங்கிப்போய்விட்டது. நந்தனார் தொடர்பு காரணமாகச் சில வருடங்களுக்கு முன்புதான் ஒரு சிலாவிக்கிரகம் அமைத்து சந்நிதியில், திருப்புன்கூரில் போல, கோபுர வாயிலின் பக்கத்தில் பிரதிட்டை செய்து வைத்திருக்கிறார்கள். முதலில் இதற்குப் பெரும் எதிர்ப்பு இருந்ததாம். பிராமணர்கள் ஹரிஜன அடியாரை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னால் சில அதிகாரிகள் தலையிட்டதன் பேரில் ஒப்புதல் கொடுத்து அந்த இடத்தில் இருக்க இடமளிக்கப் பட்டது. ஆனால், இதற்கான பூசை எதுவும் கிடையாது.
ஆதனூரிலிருந்து திருப்புன்கூருக்குத் திரும்பிவந்தோம். ஓதுவார் தொடர்ந்து இங்கு நடைபெறும் உற்சவத்தைப் பற்றிச் சொன்னார். வைகாசி விசாகத்தில் ஆரம்பிக்கும் பிரம்மோற்சவத்தில் மூன்றாம் நாள், நந்தனார் உற்சவம் நடைபெறும். இதிலேதான் நந்தி விலகி சிவலோகநாதன் காட்சி கொடுத்ததாக ஐதிகம். முதலில் சந்நிதிக் கெதிரே சிறிது தூரத்தில் நந்தனார் விக்கிரகத்தை அலங்கரித்து, ‘தாரை தப்பட்டை முதலியவற்றுடன் கொம்பு ஊதி, நந்தனார் புறப்பட்டு வந்து சந்நிதியின் வெளி வாயிலில் நிற்க, உள்ளே கோயிலின் சகல கதவுகளும் மூடப்பட்டுவிடும். இந்தக் கோயிலுக்கு மூன்று பிராகாரங்களிலும் மூன்று கோபுர வாயில்கள். இந்த மூன்று வாயில்களிலும் வரிசையாக ஐந்தடுக்கு விளக்குகள் கொளுத்தி வைத்திருப்பார்கள். மூலஸ்தானத்தில் பூசை முடித்து கற்பூர தீபாராதனை நடைபெறும்போது எல்லாக் கதவுகளையும் ஏக சமயத்தில் திறந்துவிடுவார்கள். நந்தனார் சேவிப்பதாகப் பாவனை. இதற்கு மறுநாள் பஞ்சமர்கள் தனியாகப் பூசை போடுவார்கள்.
திருப்புன்கூரில் சிவலோகநாதனைக் கண்டு சேவித்த நந்தனார் தில்லையில் நடராஜப் பெருமானைச் சேவிக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால், தில்லைவாழந்தணர் பாதுகாப்பிலிருக்கும் நடராஜரைத் தீண்டாச் சாதியிலுள்ள தாம் ஒருபோதும் காண முடியாதே என்று ஏங்கினார். ஆயினும், மானசீகமாக அங்கு போகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், யாராவது கேட்டால் “நாளைப் போவேன், நாளைப் போவேன்” என்று சொல்லிக் கொண்டு வந்தார். இதனால் அவருக்கு “நாளைப் போவார்” என்ற பட்டப் பெயர் நிலைத்துவிட்டது. வைஷ்ணவ பக்தரான குலசேகராழ்வாரும் ஸ்ரீரங்கநாதரைக் காண “நாளைப் போவேன்” என்றுதான் சொல்லிக் கொள்வாராம். வேளை வந்தபோது நந்தனார் தில்லைக்குப் போகத்தான் செய்தார். அங்கு போய் வெளிப்புறத்தில் நின்று கோபுரத்தை மாத்திரம் கண்டு சேவித்தார். நடராஜப் பெருமான் இவர் திறத்தையறிந்து, தில்லைவாழந்தணர்களின் கனவிலே தோன்றி, “அடியார் ஒருவர் வெளியே காத்து நிற்கிறார். அவர் ஜாதியில் பஞ்சமர், ஆனால் ஒழுக்கத்தில் அந்தணர். இருந்தும், உலகத்துக்கு அவர் பெருமையைக் காண்பிக்க, தீயை வளர்த்து, அதில் அவர் குளித்து எமது சந்நிதானத்தில் வரச்செய்யுங்கள்” என்று ஆக்ஞாபித்தார். அதேவாறு திருநாளைப் போவாரின் கனவிலும் தோன்றி, “உம்மை என் அடியானாக ஏற்றுக்கொண்டு விட்டேன். தில்லைவாழந்தணர்கள் வளர்க்கும் தீயில் மூழ்கி உமது பக்திப் பெருமையை உலகிலுள்ளோர் அறியக் காட்டி எம்மிடம் வரக்கடவீர்” என்று கூறினார். மறுநாள் தில்லைவாழந்தணர்கள் சிதம்பரத்திலே, இப்போது ஓமகுளம் என்று சொல்லப்படும் இடத்தில் தீ மூட்டி, நந்தனாரைச் சகலவித மரியாதைகளுடன் அழைத்துச் சென்று தீயின் பக்கத்தில் நிறுத்தினார்கள். நந்தனார் நடராஜப் பெருமானைத் தியானித்தவாறு தீயை வலம் வந்து அதிலே மூழ்கி வெளிவந்த போது சடாமுடி முதலிய அணிகலத்துடன், ஒரு முனிவரைப் போல் காட்சியளித்தார். பின் அங்கிருந்து நேரே கனகசபையை நோக்கிச் சென்றவர் திடீரென மறைந்தார். தீண்டத்தாகதவர் என்ற ஒருவர் யாவரும் வணங்கத்தக்க தெய்வமானார்.
திருப்புன்கூரை விட்டுப் பிரியுமுன் இங்கு வாழ்ந்த மற்றொரு நாயனாரைப் பற்றியும் விசாரித்துக்கொண்டு போகலாமென ஓதுவார் நண்பரிடம் சொன்னோம். ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்பவரும் அறுபத்து மூவரில் ஒருவர். திருப்புன்கூர் சிவலோக நாதனிடம் அளவற்ற பற்றுக் கொண்டவர். நல்ல செல்வந்தராயிருந்து பல திருப்பணிகள் செய்தவர். திருப்புன்கூருக்குப் பக்கத்திலுள்ள பெருமங்கலம் என்ற கிராமந்தான் அவர் வசித்த ஊர். இறைவனிடத்தில் அளவற்ற பக்திகொண்ட இவர் பெரும் பிடிவாதக்காரர். இவர் கதையைப் பின்னர் திருவாரூரில் சுந்தரமூர்த்தியைச் சந்திக்கும்போது சொன்னால்தான் பொருத்தமாயிருக்கும்.
இந்தக் கலிக்காம நாயனார் திருப்புன்கூரிலே ஒருகால் மழையில்லாமல் போனபோது, மழை வந்தால் சுவாமிக்கு பன்னிரண்டு வேலி தானமாகக் கொடுக்க வேண்டுதல் செய்திருந்தாராம். உடனே மழை பொழிந்தது. ஆனால் தேவைக்கதிகமாக வெள்ளம் பெருகி விட்டது! அந்த வெள்ளத்தை நிறுத்தினால் மேலும் பன்னிரண்டு வேலி கொடுக்க முன்வந்தார் கலிக்காமர். இறைவனுக்கு லாபம் இருபத்து நான்கு வேலி! இது ஏயர்கோன் வரலாற்றில் சேக்கிழார் சொல்லாத கதை. ஆனால், சுந்தரமூர்த்தி நாயனாரே தமது தேவாரத்தில் தம் நண்பர் கலிக்காம நாயனாரைப் பற்றித் திருப்புன்கூரில் பாடும்போது,

வையகமுற்றும் மாமழை மறந்து வயலில்
நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒளிகொள்
வெண்முகி லாய்ப் பரந்தெங்கும்
பெய்யுமாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும்
பன்னிரு வேலிகொண்டருளும்
செய்கை கண்டு நின் திருவடி யடைந்தேன்
செழும்பொழிற் றிருப் புன்கூருளானே

என்று அந்தப் பழைய சரித்திரத்தைச் சொல்கிறார். திருப்புன்கூரின் வடக்கே அரை மைல் தூரத்திலிருக்கிறது கலிக்காம நாயனார் பிறந்த பெருமங்கலம். இங்கே சுந்தரர் ஞாபகார்த்தமாக வன்றொண்டர் கோயில் ஒன்றுள்ளது. இதில் சுவாமியின் பின்புறம் சுந்தரர் நின்று வணங்குவதாகக் காட்டப்படுகிறது. புதிதாகக் கட்டப்பெற்ற இக்கோயிலில் ஏயர்கோன் கலிக்காமருக்கு உற்சவ மூர்த்தம் ஒன்றிருக்கிறது.
எங்கள் திருப்புன்கூர் யாத்திரை ஓதுவார் நண்பர் உதவியால் நல்ல பலனையளித்தது. முக்கியமாக ஆதனூர் என்ற நந்தனார் பிறந்த இடம் எங்கேயென்று தேடிக் கண்டுபிடித்தது அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இதைப்பற்றி ஆராய்ச்சி செய்த சிலர் ஆதனூர் என்பது ஆதமங்கலம் என்றும், இது கொள்ளிடத்துக்கு வடக்கே ஓமாப்புலி யூருக்குப் பக்கத்திலுள்ளது என்றும் சொல்லியிருந்தார்கள். அப்படி யானால் நந்தனார் திருப்புன்கூரில் செய்த திருப்பணிக்கு அடிக்கடி கொள்ளிடத்தைக் கடக்க வேண்டியிருக்குமல்லவா? கோபால கிருஷ்ண பாரதியார் தமது நந்தன் சரித்திரக் கீர்த்தனையில், ஆதனூரையும் திருப்புன்கூரையும் விட்டுத் தில்லைக்கு வரும் வழியிலேதான் கொள்ளிடத்தைக் கடக்கிறார் என்று சொல்கிறார்.

“நந்தன் சிதம்பரம் வருகின்றார்
ஆதனூ ரைவிட்டுக் கொள்ளிடம் தாண்டி
அப்பால் வருகையிலே……”

என்று தெளிவாகக் கொள்ளிடத்தின் தெற்கே திருப்புன்கூரின் பக்கத்திலேதான் ஆதனூர் இருக்கிறதென்பதைக் காண்பிக்கிறார். நாங்களும் நேரில் சென்றோம். ஆதனூரைக் கண்டோம். கண்டு மகிழ்ந்தோம்.

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்”

Comments are closed.