எம்.டி.முத்துக்குமாரசாமி/முதியவர்கள்

முதியவர்கள் கைவிடப்படுவதை, அடையாளம் மறந்து அவதிப்படுவதை, தொலைந்து போவதைப்பற்றி நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். என்னுடைய நண்பரொருவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் திருமணமானபின் அவருடைய தந்தையை சுத்தமாக மறந்துவிட்டார். நான் அந்த முதியவரை வேளச்சேரி யோக நரசிம்மர் ஆலயத்தில் அடிக்கடி சந்திப்பேன். என் நண்பரிடமிருந்து ஏதாவது செய்தி வந்தததா என்று அடிக்கடி கேட்பார். சில வருடங்களுக்கு முன்பு என் நண்பருக்கு விவாகரத்தாகிவிட்டது. அவர் அமெரிக்க தனிமையைத் தாங்க முடியாமல் தந்தையைத் தேடி வந்தார். தந்தை அவருக்காக வரன் தேடி மீண்டும் மணமுடித்து வைத்தார். இப்போது தந்தை மனைவியை இழந்தவர். கோவிலை விட்டால் அவருக்கு வேறு கதியில்லை. புது மனைவி வந்தபின் நண்பர் தந்தையை பழையபடி மறந்துவிட்டார். தந்தை அவர் வீட்டில் தனியாக இருக்கிறார். இன்று அவருக்கு கோவிலிலிருந்து வீட்டுக்குச் செல்லும் வழி மறந்துவிட்டது. தட்டுத்தடுமாறி என் தெருவில் அலைந்துகொண்டிருந்தவரைத் தற்செயலாகப் பார்த்த நான் அவரை அவர் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தேன். என்னை அவர் என் நண்பரின் பெயரால் நினைவுத் தடுமாற்றத்தில் ஓரிருமுறை அழைத்தார். இன்றிரவுக்கு அவருடன் கூட இருக்க ஒருவரை ஏற்பாடு செய்தேன். என் நண்பருக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பினேன். இன்னும் பதிலேதுமில்லை.1

  1. ↩︎

One Comment on “எம்.டி.முத்துக்குமாரசாமி/முதியவர்கள்”

  1. மிகவும் வருத்தப பட வேண்டிய விஷயம்.
    முதியவர்கள் முதியவர்களாக பிறக்கவும் இல்லை.,,இன்றைய வம்சம் இப்படியே இருக்கவும் போவதில்லை என்பதை உணர வேண்டும். உணர்த்த வேண்டும்.

Comments are closed.