
மாதா கோவில் மணி ஓசை
மசூதியின் தொழுகை ஒலி
ஆலய மணியின் ஓசை
கூடவே குண்டு வெடிக்கும் பேரிடி
மக்களின் அழுகுரல், ஓலம்
எல்லாமே காற்றில் கலந்து வருகிறது
செய்தித் தாளில்
அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கையும்
ஊடகங்களில்
ஆவேசமான காரசார அலசல்களும்
சடங்காக முடிகிறது
தோளில் பாடச் சுமைகளுடன்
ஒட்டகங்களாய்
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்
ஒன்றுமே நடக்காதது போல
படித்தவனும், பாமரனும்
காலையிலேயே
வரிசையாக நிற்கின்றனர் .
மதுக்கடைகளின் வாசலில்.
வெயிலும் மழையும் மாறி மாறி
வருவது போல
நாளொன்று போனது அவ்வளவே.
