
அரிசி ஆணும் உளுந்துப் பெண்ணும்
காதல் ஒருமித்துக்
கல்வெளியில் நடத்தும் நல்ல
கல்யாண வைபோகம்
புரிதலெனும் எண்ணைய் வார்க்க
தரமாகும் தாம்பத்யம்
முறுகலெனும் மகிழ்வு கூட்டி
சுவைதரும் பேரின்பம்
சொய்யெனும் சத்தம் கூட்டும்
உண்டிடும் ஆவல் தாமே.
நெய்யெனும் அமுதம் சேர்க்க
கண்டிடும் சொர்க்கம் தானே!
வட்டோலை இலக்கிய ‘மெல்லடை’
என்பதும் நீ தானா?
செட்தோசை சிறுதுளை சல்லடை
ஜோடியும் நீ தானா?
அம்மா வார்ப்பாள் மனைவி சுடுவாள்
சுவை ஒன்று தானே?
அழகு நிலா வட்டம் அமீபியா வடிவம்
தின்பது பிய்த்துத் தானே!
முதலில் வார்த்த தோசை
வழிக்கு வரா மாப்பிள்ளை!
அடுத்தடுத்துப் பிரட்டி எடுக்க
பழகி வருமந்த மாத்தோசை
அரைத்தவுடன் சுடும் தோசை
அனைவருக்கும் இட்டமில்லை.
கரைத்துவிட்ட ரவை தோசை
ஆறிவிட்டால் இலாபமில்லை.
அடை முரடனும் ஆப்ப மந்தனும்
தோசை யென்றால் சிரியாரோ?
புடை ஊத்தாப்ப மூத்தக் கிழவியோ
இசை கூட்டுமிளம் தோசை ஆவாளோ?
காய்வகை தானியம் எனச் சேர்த்து
நாளும் விதவிதமாய்ச் சுடுகின்றார்.
வாய்வகை ருசியின் இனம் பார்த்து
மீளும் தோசையாவல் கூட்டுகின்றார்.
தூவா மிளகாய்ப் பொடி தோசைக்கே
பக்கத்துணை ஆகுமா?
தேவா படத்துக்கு மோகன் பாட்டும்
இல்லாதே வேகுமா?
சித்திரம்: அன்பு நண்பன் தேவா

தோசை உண்டது போல சுவையான அனுபவம்
ஆசை என்றுகூட பெயரிட்டு இருக்கலாம், திருப்பி போட்டதில் தோசை ஆச்சு, கவிதை து(வி)ள்ளல்!