சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. இயற்பகையின் தியாகம்

திருப்புன்கூர் ஆதனூர் யாத்திரையை முடித்துக்கொண்டு வரும் வழியிலே சிறிது காப்பி பலகாரம் சாப்பிட்டுவிட்டு வைத்தீஸ்வரன் கோயில் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே இரு பணியாளர்கள் காப்பி பலகாரங்களுடன் எங்களுக்காகவே காத்திருப்பதைப் பார்த்து வியந்து போனோம்! இவ்வளவு ஏற்பாடுகளையும் நண்பர் தம்பு செய்து வைத்திருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்காக இருந்த பலகாரங்களை எடுத்துக் காரில் வைத்துக் கொண்டு, கோயில் வாயிலில் காத்து நின்ற அந்த நண்பர் சீனிவாச ஐயங்காரிடம் நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டு நேரே மாயவரத்தை நோக்கிச் சென்றோம்.
மாயவரத்தை மையமாக வைத்துக்கொண்டு பக்கங்களிலுள்ள பல தலங்களுக்குச் சென்று வருவது எனத் திட்டம் போட்டிருந்தோம். அறுபத்து மூவரில் ஆறேழு நாயன்மார் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட தலங்களை மாயவரத்தி லிருந்தே போய்த் தரிசித்துத் திரும்பலாம் என்ற நோக்கத்துடன் அங்கு போய்ப் பிரயாணிகள் விடுதியில் இடம் கேட்டபோது சிறிது ஏமாற்றம் ஏற்பட்டது. மாயவரத்தில் அன்றைய தினம் திருமுறை மகாநாடு நடக்கிறதென்றும், அந்த மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க புதுச்சேரி கவர்னர் ஸ்ரீமான் ஜாட்டி வருகிறார் என்றும் அவருக்காகப் பிரயாணிகள் விடுதியிலுள்ள இரண்டு அறைகளும் ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டன என்றும் கேள்விப்பட்டோம். திருமுறை மகாநாட்டுத் திறப்பு விழா வைபவம் அன்று காலையிலேயே நடந்து முடிந்திருக்கவேண்டும். அப்படியானால் கவர்னர் எங்கே தங்கியுள்ளார் என்று பல இடத்திலும் டெலிபோன் மூலம் விசாரித்ததில், அவர் தமது கடமையை முடித்துவிட்டு, உடனேயே புதுச்சேரிக்குத் திரும்பிவிட்டார் என்ற தகவல் கிடைத்தது.

இம்மாதிரியான யாத்திரைகளில் நமக்கு எதிர்பாராத விதமாகச் சில நண்பர்கள் வாய்க்கப் பெறுவார்கள். மாயவரத்தில் எங்கள் துணைக்கு வந்தவர் செய்யது என்ற இஸ்லாமிய நண்பர். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள இவர் ஒரு காலத்தில் அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக இருந்தவர் என்று தெரிந்தது. இப்போது பிரபலமான வக்கீல் தொழில். நண்பர் செய்யதின் உதவி கொண்டு பிரயாணிகள் விடுதியில் எங்களுக்கு இட வசதி கிடைத்தது. இந்த விடுதி ஒரு பழைய ஆங்கிலேயர் காலக் கட்டடம். விசாலமான அறைகளும் குளிக்க வசதியான அறைகளும் கொண்ட இடம். நாலைந்து நாட்கள் ஓய்வில்லாமல் பிரயாணம் செய்ததால் சேர்ந்து விட்ட அழுக்குத் துணிகளையெல்லாம் தோய்த்து உலர்த்த ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தது!
மறுநாட் காலை வெயிலுக்கு முன்னரே கிளம்பி யாத்திரையைத் தொடங்கத் திட்டம் போட்டிருந்த எங்களுக்கு எதிர்பாரா ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. அன்று அதிகாலையில் காப்பி வாங்கி வருவதற்காக வண்டியை எடுத்துக்கொண்டு சென்ற ராதா கிருஷ்ணனும் வேணுவும் வெகு நேரமாகியும் திரும்பி வரக் காணோம். என்னவோ ஏதோ என்று திகிலடைந்திருக்கும் வேளையில் வேணு மாத்திரம் திரும்பிவந்து சொன்ன செய்தி மேலும் எங்களைக் கலங்க வைத்தது. எங்கள் கார் ஒரு திருப்பத்திலே வந்து கொண்டிருக்கும்போது ஒரு பஸ் வந்து தாக்கி, காரின் முன்பாகத்தில் ஒரு விளக்கும் அதன் இணைப்பும் சேதமாகிவிட்டதாகவும், அது சம்பந்தமாக ராதாகிருஷ்ணன் ஸ்தலத்திலேயே விஷயத்தைப் பேசித் தீர்த்துவிட்டு வரக் காத்திருப்பதாகவும் வேணு சொன்னார். சற்று நேரத்தில் ராதாகிருஷ்ணன் வண்டியுடன் வந்தார். பெரிய சேதமில்லாவிட்டாலும், ஒற்றைக் கண்ணுடன் வண்டியை ஓட்ட வேண்டாமென்று, மாயவரத்திலேயே ஒரு தொழிற்சாலையில் செப்பனிட நண்பர் செய்யது மூலமாக ஏற்பாடு செய்துவிட்டு, வேறு வாடகை வண்டியொன்று பிடித்துக்கொண்டு அன்றைய யாத்திரையை முடிக்கத் தீர்மானித்தோம். நெடுந்தூரப் பிரயாணங் களில் இப்படியான சில தடைகளையும் எதிர்பார்க்க வேண்டியது தான்.
மாயவரத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினத்துக்குப் போகும் வழியில் நாங்கள் முதலில் சந்தித்தது நனிபள்ளி என்ற தலம். சீர்காழியில் ஞானப்பால் அருந்தி இசை முழக்கம் செய்த ஞானசம்பந்தர், திருக்கோலக்காவில் தாளம் பெற்றவுடன், தரிசித்த
தலம் இந்த நனிபள்ளி என்று முன்னரே சொல்லியிருந்தோம். சம்பந்தரின் தாயார் பகவதியார் பிறந்த பதி இது. இப்போது இந்த ஊர் புஞ்சை என்ற பெயரால் வழங்குகிறது. நன்செய் புன்செய் என்று விவசாயத்துறையில் சொல்வார்கள். நன்செய் என்றால் நல்ல நீர் வளமுள்ள நெல்சாகுபடி செய்யக் கூடிய நிலம். புன்செய் என்றால் நீர் வளமில்லாது, நெல்லைத் தவிர வேறு பயிர்கள் செய்ய மாத்திரம் ஏற்ற வறண்ட நிலம். அது உலக வழக்கில் புஞ்சை என்றாகி விட்டது. ஞானசம்பந்தர் தமது தந்தையார் தோளில் உட்கார்ந்து கொண்டு இங்கு வந்தபோது, தந்தையாரிடத்து இது எந்த ஊர் என்று கேட்டாராம். அவர், இதுதான் நனிபள்ளி என்று சொன்னதும் சம்பந்தர் பாடிய பதிகத்தின் முதல் பாட்டு:

காரைகள் கூகை முல்லை களவாகை யீகை
படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடமர்ந்த
சிவன்மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதிகொள்ள
வாளை குதிகொள்ள வள்ளை துவள
நாரைகளாரல் வாரி வயன்மேதி வைகு
நனிபள்ளி போலு நமர்காள்

இந்தப் பாட்டை வைத்துக்கொண்டு பின்வந்த இலக்கியப் புலவர்கள் அழகான வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். வறண்ட பாலைப் பிரதேசமாயிருந்த நனிபள்ளியைச் சம்பந்தர் தமது பாட்டால் நெய்தலாக்கி, அதை மீண்டும் வயல் சூழ்ந்த மருதமாக்கினார் என்பது இவர்களது வியாக்கியானம். இந்தத் தேவாரத்தில் பாலை நெய்தலுக்குரிய கருப்பொருள்கள் வந்து, பின்னர் மருதத்துக் குரிய அடையாளங்கள் வருவதால் இலக்கிய வித்தகர்கள் இப்படி வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் புஞ்சை என்ற நனிபள்ளி இன்றும் அந்தப் பாலையாகவே காட்சியளிப்பதை நாங்கள் நேரில் பார்த்துக் கொண்டோம். ஞானசம்பந்தர் இந்த நனிபள்ளியில் அதிகம் தங்கவில்லை. தாயாரின் பந்துக்களைக் கண்டு மகிழ்ந்தவுடன் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
நனிபள்ளி என்ற பெயர் எப்படி வந்ததோ தெரியவில்லை. ஆனால், பள்ளி என்பது சமணர் இருக்கையாகையால் ஒருகால் சமணர் இங்கு அதிகமாக வாழ்ந்திருக்கலாமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. பல்லவர்கள் இந்தப் பிரதேசத்தை ஆண்டார்கள் என்று சரித்திரத்தில் காண்கிறோம். அந்தக் காலத்தில் சமணர்கள் செல்வாக்கும் அதிகமாயிருந்ததாகையால் இந்தப் பிரதேசத்திலும் அவர்கள் பள்ளிகள் அமைத்திருக்கலாம். அதன் காரணமாக நனிபள்ளி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் சொல்வார்கள்.
நனிபள்ளியில் மிகவும் அழகான வேலைப்பாட்டுடன் ஒரு சிறு கோயில் இருக்கிறது. இதன் கர்ப்பக்கிருகத்தின் மேலுள்ள விமானம் மற்றைய கோயில்களைப் போலல்லாது ஒரு தனிச் சிற்ப அமைப்பாயிருப்பதால், கட்டடக் கலையில் ஆவுடையார் கோயில் கொடுங்கையும், நனிபள்ளி விமானமும், திருவீழிமிழலை வௌவால் நந்தி மண்டபமும் அசாதாரண வேலைப்பாடு என்பர். அதனால் கட்டடக்கலைஞர் அந்தக் காலத்தில் ஒப்பந்தம் எழுதும்போது, “இவை நீங்கலாக” என்று தவிர்த்து விடுவது வழக்கம் என்று சொல்வார்கள்.
இங்கு கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் சுவாமியின் பெயர் நற்றுணையப்பர். எங்கள் யாத்திரையில் இந்த நற்றுணையப்பர் துணை நிற்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டு நேரே சரித்திரப் புகழ்வாய்ந்த காவிரிப்பூம்பட்டினத்தை நோக்கிச் சென்றோம். சம்பந்தரும் நனிபள்ளியிலிருந்து புறப்பட்டு, “பட்டினத்துறை பல்லவனீச்சரம்”தான் போகிறார்.


பூம்புகார் என்று போற்றப்படும் காவிரிப்பூம்பட்டினத்தின் செழிப்பும் செல்வாக்கும் ஒரு காலத்திலே அகில உலகப் புகழ் பெற்றிருந்தது என்பது தமிழ் மக்களின் பெருமை. கிரேக்கரும் உரோமரும் மரக்கலங்களில் வந்து வாணிபம் செய்த பெரு நகரம். தமிழ்நாட்டுக் கலங்கள் இங்கிருந்து தூரகிழக்கு நாடுகளுக்குச் சென்று பண்டங்கள் ஏற்றி வந்து குவித்த துறைமுகம். “பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்” என்று இளங்கோவடிகள் வாழ்த்திய பழம்பதி. கற்புக்கடம்பூண்ட தெய்வமாகிய கண்ணகி பிறந்த பட்டினம். ஊர்வசியின் வழி வந்த மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் கண்ட அணிநகர். பலநூறு ஆண்டுகளாகத் தமிழகத்தின் கலங்கரை விளக்கமாகப் பிரகாசித்த காவிரிப்பூம்பட்டினத்தை, காவிரி கடலொடு கலக்கும் சங்கமத்தில், இன்று நாம் கற்பனையில்தான் காண முடிகிறது. பட்டினப்பாலையிலும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கண்ட காவிரிப்பூம்பட்டினத்தைக் காண முடியாது. இரண்டு பழைய கோயில்கள், அவற்றையடுத்துச் சில குடிகள், கடலருகே சில மீனவர் குப்பங்கள். இவைதான் இன்றைய காவிரிப்பூம்பட்டினம்.
முன்னொரு காலத்தில் இங்கு இந்திரன், சூரியன், சிவன், விஷ்ணு முதலிய தெய்வங்களுக்கெல்லாம் தனித் தனிக் கோயில்களிருந்தன. அவந்தியிலும் மகதத்திலுமிருந்து கலைஞர்கள் வந்து சிற்ப வேலை செய்தனர். யவனத் தச்சரும் தமிழ்நாட்டுக் கலைஞருடன் கலந்துறவாடினர். பௌத்தர்கள் பல மடங்களில் வசித்தனர். சமணப் பள்ளிகளிருந்தன. ஆனால் தேவாரம் பாடிய நாயனார் மூவர் காலத்துக்கு முன்பே காவிரிப்பூம்பட்டினம் தனது செல்வாக்கை இழந்துவிட்டது என்று சொல்லவேண்டும். சம்பந்தர் தரிசித்தபோது இருந்த கோயில் பல்லவனீச்சரம். அவர் பிரமாதமாக ஒன்றும் சொல்லவில்லை. பக்கத்திலுள்ள சாய்க்காட்டைத் தரிசித்த நாவுக்கரசரும் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிச் சொல்லவில்லை. சேக்கிழார் காலத்தில் அவர் சிதம்பரத்தையும் திருவாரூரையும் வருணித்தது போலக் காவிரிப்பூம்பட்டினத்தை வருணிக்காமல், “நன்னெடும் பெருந்தீர்த்த முன்னுடைய, நலம் சிறந்தது வளம் புகார் நகரம்” என்று வெறுமனே காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்தின் தீர்த்த விசேஷத்தை மாத்திரம் குறிப்பிட்டிருக்கிறார். ஆகையால், எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு அழிந்து போயிருக்கவேண்டும்.
பல்லவனீச்சரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த நாயனார் “இல்லையே என்னாத இயற்பகை” என்று சுந்தரரால் திருத்தொண்டத் தொகையில் பாடப்பெற்ற அறுபத்து மூவரில் ஒருவராகிய இயற்பகை நாயனார்.
காவிரிப்பூம்பட்டினத்தில் சிறந்த வணிகராயிருந்த இயற்பகை பெருங்கொடை வள்ளலாகவுமிருந்தார். சிவனடியார்களுக்கு வேண்டியதை மனங்கோணாமல் கொடுத்து வந்த திறனைச் சோதிக்க இறைவனே ஒரு சூழ்ச்சி செய்தாராம். ஒரு நாள் இயற்பகையார் இல்லத்தில் முழுநீறு பூசிய முனிவராய் ஒருவர் வந்து சேரவும், இயற்பகை உடனே அவரை வணங்கி, “சுவாமி, நான் செய்த தவமே தங்களை இங்கு எழுந்தருளச் செய்தது” என்று உபசரித்து, “அடி.யேன் என்ன செய்தல் வேண்டும்?” என்று கேட்டார். “எதைக் கேட்டாலும் இல்லையே என்னாது கொடுக்கும் நல்ல பண்பைக் கொண்டிருக்கிறீர் என்று உலகம் உம்மைப் போற்றுகிறது. அப்படியானால் நான் உம்மிடம் விரும்புவது ஒன்றுண்டு. அதைக் கொடுக்க இசைந்தால் நான் சொல்லுகிறேன்” என்றார் முனிவர். இயற்பகை சிறிதும் ஆலோசிக்காமல், “என்னிடம் இருக்கின்ற பொருள் எதுவாயினும் அது அடியாருடைமை” என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான். வந்த அடியார் கொஞ்சமும் கூச்சமில்லாமல், “அப்பா இயற்பகை! சாதாரணமாய் எவரும் கொடுக்க முடியாத, உனக்கே சொந்தமான, உன் மனைவியை நான் விரும்பி வந்தேன்” என்றார்!
எதைக் கேட்டாலும் தயக்கமில்லாமல் கொடுப்பதையே விரதமாகக் கொண்ட இயற்பகையார், தமது மனைவியையே ஒருவர் தானமாகக் கேட்டதும், அதைவிடச் சிறந்த தானம் அல்லது தியாகம் வேறில்லை என்று மகிழ்ச்சி கொண்டார். உடனே உட்சென்று தன் மனைவியை அழைத்து, “எனது பிரிய நாயகியே! அடியார் ஒருவர் வந்திருக்கிறார். அவர் என்னிடமுள்ள சிறந்த பொருளொன்றை விரும்பிக் கேட்கிறார். தருகிறேன் என்று சொல்லிவிட்டேன். உனக்கும் சம்மதம் தானே?” என்று கேட்டார். கணவன் சொல்லுக்கு எதிர் நின்று வழக்கமில்லாத மனைவியும், “தாங்கள் கொடுப்பதை எப்போதாவது நான் மறுத்ததுண்டா? இன்று மாத்திரம் எதற்காக இப்படிக் கேட்கிறீர்கள்?” என்று கேட்டார். இயற்பகையார், “உன்னை நான் கேட்பதற்குக் காரணமுண்டு. ஏனென்றால், உன்னையே நான் அந்த அடியாருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டேன்!” என்றார். கட்டிய மனைவி கலங்கினாள், ஒரு கணம் திகைத்தாள். பின்னர் தம் கணவனின் கொடைத்திறனை நினைத்துப் பார்த்து வேறு வழியில்லாமல், “எனது கணவன் கட்டளையை நிறைவேற்றுவதே எனது கடமை” என்று சொல்லி, வெளியே வந்து சிவனடியாரை வணங்கி நின்றாள். தன் கோரிக்கை நிறைவேறியதைக் கண்ட அடியார் மற்றொரு நிபந்தனையையும் விதித்தார். “அப்பா, நீ எனக்கு உன் மனைவியை முழு மனதுடன் தந்து விட்டாய் என்று உன் சுற்றத்தவர்கள் அறியமாட்டார்கள். ஆகையால் நாங்கள் செல்லும் வழியிலே அவர்கள் தடை செய்யாமலிருக்க, நீயே எங்களை அழைத்துக்கொண்டு போய்க் காப்பாற்றவேண்டும்” என்றார். உடனே இயற்பகையும், பாதுகாவலுக்காக வாளும் கையுமாகப் புறப்பட்டு, அடியாரும் மனைவியும் முன் செல்லத் தாம் பின்னால் சென்றார். எதிர் பார்த்தது நடந்துவிட்டது! இயற்பகையின் சுற்றத்தவர்கள் மாத்திரமல்ல, காவிரிப்பூம்பட்டினமே திரண்டு வந்துவிட்டது. எவனோ பைத்தியக்காரனோடு தம் மனைவி போகவிட்டு முட்டாள் இயற்பகை பார்த்துக்கொண்டிருக்கிறானே என்று எல்லோரும் சூழ்ந்துகொண்டனர்! அவர்களையெல்லாம் இயற்பகை வாள் கொண்டு தாக்கவும் பலர் மாண்டனர். மற்றவர்கள் ஓடினர். இயற்பகையார் அடியவரை நோக்கி, “அண்ணலே, தாங்கள் அஞ்சாது போங்கள். அதோ அந்தக் காடுவரை நான் அழைத்து வந்து விடுகிறேன்” என்று சொல்லிச் சாய்க்காடு என்ற சாயாவனம் வரை அடியாரையும் மனைவியையும் அழைத்துச் சென்று அங்கே அவர்களை விட்டுத் திரும்பினார்.
சற்று நேரத்துக்கெல்லாம் காட்டிலிருந்து அடியார், “இயற்பகையே, ஓடி வா! ஆபத்து, ஆபத்து!” என்று கூவியழைத்தார். மறுபடியும் ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டதாக்கும் என்று பதைபதைத்து இயற்பகையார் ஓடிச்சென்று பார்த்தார். என்ன அதிசயம்! அங்கு அவர் மனைவி மாத்திரம் நின்றார். அடியாரைக் காணவில்லை. அசரீரி ஒன்று கேட்டது. “வரையாது கொடுக்கும் வள்ளலே! உலகத்துக்கு உன் கொடைத் திறனையும் பக்திப் பெருமையையும் காண்பிக்கவே இந்தச் சோதனை செய்தேன். நீ உன் மனைவியை அன்போடு அழைத்துச்சென்று சிறப்போடு வாழ்வாயாக. மாண்ட உன் சுற்றத்தவரும் மற்றவர்களும் பிழைத்து உன்னைப் பெருமைப்படுத்துவார்களாக.” பழையபடி எல்லாம் மகிழ்ச்சியாக முடிந்தது.
அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையில் இந்த மாதிரியான பல அசாதாரணச் செய்கைகளை நாம் காணப் போகிறோம். இயற்கைக்கு மாறான காரியங்களென்றும், உலக வழக்குக்கும் சமூக ஒழுக்கத்துக்கும் விரோதமான செய்கை களென்றும் ஒதுக்கிவிடலாம். ஆனால், அடிப்படையில் பக்தி, வைராக்கியம், சிவத்தொண்டு என்று பெருமைப்படுத்துவதற்கு எழுந்த கதைகள் இவை. ஆகையால், எத்தனை வெறுக்கத்தக்க காரியமாயிருந்தாலும் அது இறைவனுக்காக அர்ப்பணிக்கும் செயல் என்றுதான் சிவனடியார்கள் கருதினார்களென்று நாம் சமாதானம் செய்துகொள்ள வேண்டியது.

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)