
2
பக்தியும் பூஜையும் எவ்வளவு நீடித்தாலும், அதற்கெல்லாம் வேண்டியது, தீய கருத்துகளுக்கு டங் கொடுக்காமல் உள்ளத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வது. அது செய்துவிட்டால் எல்லாம் நிறைவேறி விடும். உள்ளத்தைப் பரிசுத்தமாக வைப்பதில் தருமம் முழுதும் அடங்கும். இந்தச் சுத்த நிலை ஏற்பட்டு விட்டால், பக்தியும் பூஜையும் வெறும் ஆரவாரமும், சத்தமும் பகட்டும் தடபுடலுமே என்கிறார் முனிவர்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்;
ஆகுல நீர பிற.
செயல்களுக்கு வித்து, மனத்தில் தோன்றும் எண்ணங்கள். மனம் சுத்தமாக இருந்தால், செயல் தானாக அறவழியில் செல்லும். பக்தியும் பூஜையும் உள்ளத்தை அழுக்கின்றிக் காப்பாற்றிக் கொள்வதற் காகத்தான். மாசற்ற உள்ளத்தைப் பெறுவதற்காகவே பக்தியும் பூஜையும். உள்ளத்தைத் துப்புரவாக வைப்பதற்குப் படாடோபம் ஏதும் வேண்டியதில்லை. ‘ஆகுலம்’ என்றால் ஆரவாரம், படாடோபம்.
தர்ம வாழ்க்கை என்பது நான்கு குற்றங்களை, விலக்குவதாகும். பொறாமை, துராசை, கோபம் கடுஞ்சொல் பேசுதல்- இவற்றை விலக்க வேண்டும். பிறர் சுகத்தைக் கண்டால் தனக்குள்ளும் மகிழ்ச்சி உண்டாக வேண்டும். உடல்வழி உண்டாகும் சரீர சுகங்களை எண்ணி ஆசைப்படலாகாது. யாரேனும். தீமை செய்தால் கோபித்துக் கொள்ளலாகாது பொறுத்துக் கொள்ள வேண்டும். மனம் நோகும் சொற்கள் பேசலாகாது.
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்நான்கும்
இழுக்கா வியன்றது அறம்.
எது தருமம், எது அதருமம் என்று புஸ்தகங்களைப் புரட்ட வேண்டியதில்லை. இந்த நான்கையும் ஒழிக்க முயல்வதே அறநெறி வாழ்க்கை.
ராஜாஜி /வள்ளுவர் வாசகம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
