ராஜாஜி /வள்ளுவர் வாசகம்

முனிவர் எழுதிய பாட்டுகளை இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின் படித்து, அவற்றில் நான் கண்ட பொருளை எழுதுகிறேன். குற்றங்கள் பல இருக்கும். பெரியோர்கள் மன்னிப்பார்கள்
✿✿✿

ஒரு காலத்தில் எழுதியது அநேகமாக மற்றொரு காலத்துக்குப் பொருந்தாது. ஆயினும் சில விஷயங் கள் எக்காலத்துக்கும் உண்மை. அதிலும் சில மேதாவிகளின் கருத்துகள் பல்லாண்டுகள் கழித்தும் உண்மை நிறைந்த கருத்துகளாகவே இருக்கும்.
முனிவர் வள்ளுவரின் வாசகம் இத்தகையது. அவர் பாதங்களை மனத்தால் தொட்டு வணக்கம் செலுத்தி ஆரம்பிக்கிறேன்.
நாம் சம்பாதித்துச் சேர்த்து வைக்கும் எந்தச் செல்வமும், தர்மத்துக்கு ஈடாகாது; அறநெறியில் நடத்திய வாழ்க்கையினால் நாம் அடையும் நலனுக்கு ஈடாகாது. தருமமே செல்வத்தில் செல்வம். தருமத்தை ஒருவன் மறந்துவிட்டால் அதனால் அவனுக்கு உண்டாகும் தீமையைப்போல் வேறு எந்தத்துரதிர்ஷ்ட மும் இல்லை.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலினூஉங்கு இல்லை கேடு.

அறத்தினை ‘மறத்தல்’ என்றார். புறக்கணித்தல் என்று சொல்லவில்லை. மறந்துவிடுவதனால் அல்லவோ நாம் அநீதியெல்லாம் செய்கிறோம்.
கொஞ்சம் நினைப்பில் வைத்தோமானால் அநீதிக்குள் செல்லமாட்டோம் என்று முனிவர் எண்ணுகிறார்.

செல்வத்தை இழந்தால் அதனால் வரும் கேட்டை விட மிகப் பெருங்கேட்டை அடைவோம், அறத்தை மறந்து விட்டால்,

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

”செயல்’ என்பது வியங்கோள் வினைமுற்று. ‘செய்’ என்று இந்தக் காலத்தில் சொல்லுவோம்.

“அற வழியினின்று தப்பிச் செல்லாதே; உன்னு டைய பொருளுக்கும் சக்திக்கும் எவ்வளவு முடியுமோ அந்த அளவில் அந்தப் பாதையை பிடித்துச் செல்!” என்கிறார் முனிவர். இதற்கு மேல் அவர் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை.

தருமம் என்றால் பயப்பட்டுத்தூர நிற்க வேண்டிய தில்லை. நம்மால் அந்த மார்க்கத்தில் எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் சென்றால் முனிவருக்குத் திருப்தி.

வள்ளுவரின் சிறப்பு என்னவென்றால், குறிக் கோளை விட்டுவிடாமல், அதை விளக்கி, சாதாரண மக்களும் வாழ்க்கையில் கடைப்பிடித்துச் செல்லும் வகையில் உபதேசிப்பார். நம்மால் ஆகாத காரியம் அல்ல என்பதை உணரும்படி உபதேசிப்பார். ‘ஒல்லும் வகையான்’ செய், ‘செல்லும்வாய் எல்லாம்’ செய். ‘அதற்குமேல் நான் கேட்கவில்லை’ என்கிறார்.

(வள்ளுவர் வாசகம் – ராஜாஜி – வானதி பதிப்பகம் , தி.நகர், சென்னை 17 என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது)

One Comment on “ராஜாஜி /வள்ளுவர் வாசகம்”

Comments are closed.