எம்.டி.முத்துக்குமாரசாமி/கிளிக் கவிதைகள்


—-

1
தானியங்களை இறைத்து
உன் வீட்டு மாடிக்
கிளிக்கூட்டத்தைத் தன்னிடத்தே
அழைத்துக்கொள்கிறாள் சிறுமி
கிளிகள் மாயப் பச்சைக் கம்பளமாய்
மேலெழும்பிப் பறப்பதன் அற்புதத்தைப்
பார்க்கத்தானே வந்தாய்
அவை
உன் மாடியில் பறந்தாலென்ன
அவள் மாடியில் பறந்தாலென்ன
என சும்மா இருக்க முடியவில்லை உன்னால்
என் கிளிகள் என் கிளிகள் என
மனம் பதைபதைக்கிறாய்
——-
2
‘வயசாச்சுல்லா’ என
கூண்டைத் திறந்து கிளிகளை
கம்மமங்கதிர் அசையும் வயல்பரப்பில்
விடுவிக்கிறான் கிளிஜோசியக்காரன்
இதற்காக உடைமரக்காட்டினூடே
நான்கு மைல் வெடித்த பாதங்களுடன்
நடந்து வந்திருக்கிறான்
கூண்டை விட்டு
வெளியே வருவதாயில்லை கிளிகள்
‘பிரம்ம ரிஷி வியாசன் சிசுவே
சுகர் நாடி ஜோதிட ஞானப்பழமே
மதுரை மீனாட்சி அம்மன் கை வீற்ற
பெருங்கிளியே பெண்ணே பேரழகே
கிரகச்சார பெட்டகமே, பொக்கிஷமே’
பாடிக்கொண்டே கடவுளர்
கிளிச்சீட்டுகளை வரப்பில்
பொய்யாய் கடைபரத்துகிறான்
மெதுவே மெதுவே
வெளிவருகின்றன கிளிகள்
அவற்றை வரப்பில் விட்டுவிட்டு
சீட்டுக்களை கூண்டில் வைத்துப்
பூட்டி மூடுகிறான்
முற்றிய கம்மங்கதிர்களைச் சுட்டி
கிளிகளுக்குத் தாக்காட்டுகிறான்
மேலும் சில மிளகாய்ப் பழங்களை ஊட்டி
செல்லம் கொடுக்கிறான்
அவை அசந்த சமயம்
நொடியில் விலகி
உடைமரத்தின் பின் ஒளிந்து
அவற்றைப் பார்க்கிறான்
கிளிகள் திகைத்து வரப்பில்
அங்குமிங்கும் அலைகின்றன
ஆரூடம் அறியாமல்
திரும்பிப் பார்க்காமல் விடுவிடுவென்று
நடக்கிறான் “பறக்கலாம்லா செறகுதான்
வளந்தாச்சே” என முனகுகிறான்
வெக்கையும் புழுக்கமும் அதிகமாக
முண்டாசை அவிழ்த்து கழுத்தைத்
துடைக்கிறான்
சிறு கருங்கல் பாறை அளவில்
ஒரு பெருச்சாளி ஓடுவதை கவனிக்கிறான்
கிளிகளுக்குக் கனவுகள்
வருமாவென யோசிக்கிறான்
எந்த வீட்டில் எந்த கிரகமோ
சொந்தவீடு இன்னும்
வெகு தொலைவிலிருக்கிறது
வழியில் காணும் இலந்தைச் செடியில்
பழங்கள் பறிக்க கை நீள்கிறது
யதேச்சையாகக் கிளிகளுக்காக.
——
3
ஆருயிரே
சூஸன் ஸோண்டாக்
என்ன காரியம் செய்திருக்கிறாய் நீ?
என் கன்னிமை கழித்த
உன் பக்கங்களை முதன் முதலாக
முத்தமிட்டு எச்சில் தொட்டு திருப்பியபோது
நோய்மை ஒரு உருவகம் என
என் காதுகளில் அந்தரங்கமாய் கிசுகிசுத்தாய்
அது கொள்ளாம் அது கொள்ளாம் என
நான் உன்னைக் குப்புறக்கவிழ்த்து வைத்துவிட்டு
ஆழமான சிந்தனையில் ஆழ்ந்தேன்
ஞாபகமிருக்கிறதா?
அன்றிலிருந்து இன்றுவரை
ஒளிர்வதும் ஒளிந்துவிடுவதுமான
நிலவுக்குத்தான் இரவின் நோய்மையில்
எத்தனை உருவகங்கள் என
தவிக்க விட்டிருக்கிறாய்
இதோ ஆடை அவிழ்க்கும்
இவ்விரவின் கீற்றுப் பிறையைக் கூட
உன் கண்ணாடியால் பார்க்கிறேன் சூஸன்
அதோ அங்கே ஒரு கிளி அவள் பெயர் சொல்லி
என்னுள் பைத்தியமாய்
தத்தித் தத்தி அலைகிறது
—-
(On reading Susan Sontag’s book “Illness as metaphor)
——
4
அதைக் கூண்டிலடைத்ததிலிருந்து
அவள் கணவனின் குரலில்
இறைஞ்சுகிறது
மிளகாய்ப்பழம் தர மறுத்தபோது
அவளுடைய காதலனின் குரலில்
அவ்வபோது
கூப்பிடுகிறது
சிறிய சிணுக்குரி ஒன்றினால்
பட்டென்று அதன் தலையில் போட்டபோது
அவள் அம்மாவெனவே முனகியது
எல்லோரும் கிளியாகிவிட்டனர்
என்றவளுக்கு
கூண்டைத் திறந்துவிட்டால்
தன் சுய குரலில் அது பேசுமென
தெரிந்துதானிருந்தது
———
5
குப்த கங்கை
குளக்கரையில் போய் அமர்ந்திருந்தேன்
பச்சையான குளம்
மீன்கள் குளக்கரை படிக்கட்டில்
கூட்டம் கூட்டமாய் குழுமுகின்றன
சுந்தரர் திருவாஞ்சிய பதிகத்தில்
சள்ளை மீன்கள் துள்ளும் பொய்கைகள்
நிறைந்த திருவாஞ்சியம்
என்று பாடியிருப்பது ஞாபகம் வந்தது
கிளிக்கூட்டத்தின் கீச்சு சப்தங்கள் தவிர
வேறு எந்த சப்தங்களும் இல்லை
இவ்வளவு கிளிகளை நான்
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள
சிற்பங்கள் நிறைந்த
கிருஷ்ணாபுரம் கோவில் பிரகாரத்தில்தான்
கூட்டமாக இதற்கு முன்னால் பார்த்திருக்கிறேன்
கிளிக்கூட்டத்தின் மழலை சொக்கவைப்பதாய் இருந்தது
கூடவே சந்தனத்தின் சுகந்தமும்
சந்தன மரக் காடொன்றில்
கிளிக்கூட்டம்
வான் ஏகி கலகலத்து
காற்றில் எனக்கான எதிர்கால ஏடுகளை
எடுத்துத் திரும்புவதான கற்பிதம்
மனதில் வியாபித்தது
இன்னுமா பல ஏடுகள்?
இன்னுமா பல சாத்தியங்கள்?

6
நான் சிறுவனாக இருந்தபோது
சோழவந்தான் தென்கரை அருகே
உள்ள ஆற்றங்கரையிலுள்ள
அணைப்பட்டி அனுமார் கோவிலுக்குப் போனோம்
கையால் பறிக்கலாம் என்ற அளவில்
குட்டையான மாமரங்கள்
காய்த்துக் குலுங்க
அவற்றில் குன்னிமுத்து கொடிகளும் படர்ந்திருந்தன
ஆற்றங்கரை மணலில் மாமர நிழலில்
கிடந்த குன்னிமுத்துக்களை
நான் பெரும் ஆர்வத்துடன் சேகரித்தேன்.
அப்படி சேகரித்த குன்னிமுத்துகள்
என்னிடத்தில் ஒரு கைப்பிடியளவு
சேர்ந்திருந்தன
அவற்றை மற்றவர் கண்களில் படாமல்
பத்திரமாக வைத்திருந்தேன்
அவை என் கூடவே நேற்று வரை
வந்துகொண்டே இருந்தன
லோபி காத்த செல்வம் போல
அவற்றை என்றாவது எடுத்து
கைவிரல்கள் வழி நழுவவிட்டு
வேடிக்கை பார்ப்பேன்
கறுப்பு சிவப்பு நிறங்கள் தவிர
பச்சை, வெண்மை நிறத்தாலான
குன்னிமுத்துக்களும் என்னிடம் இருந்தன
நேற்று அந்தியின் பொன்னொளியில்
என் குன்னிமுத்துக்கள் அனைத்தையும்
வீட்டு மொட்டை மாடியில் தூக்கிக்கடாசினேன்
அவற்றை தண்ணீர்விட்டு மழைநீர் போகும்
தண்ணீர் குழாய்கள் வழி பெருக்கித் தள்ளிவிட்டேன்
ஒரு பெரும் பாரம் இறங்கியது போல இருந்தது
குன்னிமுத்துக்களைத் துறந்தபின்
புத்தம்புதியவனாய்
நானும்
என் கிளியும்

7
நான் வாய் உலர்ந்து கவிச்சொல்
கூட்டாத தருணங்களில்
என்னவாக இருக்கிறேன்
என்பதைப் பற்றி எப்படி எழுதுவது
உயிர்ப்பின் விசை அப்போதெல்லாம்
என்னிடம் திரளவில்லை
என்று சொல்லிக்கொள்கிறேன்
ஆனாலும் Even when Lear is mad,
he is every inch a king
என்பதும் உண்மைதானே
ஆசீர்வாதத்தின் அட்சதைகளை
கிளிகளுக்கு இரையாய் ஈந்துவிட்டு
அபூர்வ சிறகசைப்புகளின்
ஓசைக்கும் வருகைக்கும்
காத்திருப்பவனாய்
மனம் தளும்புவதாய்
ஒரு சித்திரம் எழுந்து
கலைவதான பாவனை
——
8
எனது தேன் துளி
கரைந்து
ஆவியாகையில்
என்ன எஞ்சுமோ
அதை வெற்று உள்ளங்கையில்
பார்ப்பதான
உணர்வுத் தெளிவினை
கிளியெனவும்
அழைக்கலாம்
சாதனை
எனவும் அழைக்கலாம்
—-
9
போதிசத்துவனே
புனித போதனையின் முதல் கொள்கையாகக்
கிளி சொல்வது என்ன?
எதுவும் புனிதமில்லை,
பிரும்மாண்ட வெறுமையே இருக்கிறது
அப்படியானால் நீயும் நானும் யார்
தெரியாது
தெரியாதென்பதே அணுக்கமானது

10
கிளி சொன்னது:
உன்னால் தரையில்
சம்மணம் கூட்டி
உட்காரமுடியாது என்று
எனக்குத் தெரியும்
உன் சுண்டு விரலை
மடக்கி நீட்டு
அதுவே
அவ்வளவே
உன் யோகம்
—-