
ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்பு
தங்கேஸ்
முதல் அத்தியாயம் ( 1. அமைதியான துயரம் )
என் நண்பர்களே ! நீங்கள் உங்கள் இளமையின் விடியலை அத்தனை இனிமையாக நினைவு கூர்கிறீர்கள் இப்போது. .அது அத்தனை சீக்கிரம் கடந்து சென்றதை நினைத்து வருத்தம் கொள்கிறீர்கள்.
ஆனால் ஒரு கைதி சிறைக்கம்பிகளையும் சிறையின் இருண்ட அறைகளையும் நினைவு கூர்வது போல நான் அதை நினைவு கூர்கிறேன்.
எல்லையற்ற சுதந்திரத்தில் எந்தக் கவலையும் அற்றுத்திரிந்த உங்கள் குழந்தைப் பருவத்திற்கும் இளமைப்பருவத்திற்கும் இடைப்பட்ட அந்தக்காலத்தை உங்கள் பொற்காலம் என்று நீங்கள் புகழ்கிறீர்கள்.
நானோ அதை ஊமைத்துயரம் என்று அழைக்கிறேன்.
அந்த ஊமைத்த்துயரம் தான் என் இதயத்தில் ஒரு விதை போல விழுந்து பின்னாளில் விருட்சம் போல வளர்ந்தது. அது தான் அறிவார்ந்த உலகத்தையும் என்னையும் இரு துருவங்களாகப் பிரித்தே வைத்திருந்தது சற்றும் இதயமற்று
ஆனால் காதல் ? காதல் என்னும் ஒளி வெள்ளம் என் இதயத்தில் உள்ளே நுழைந்த அந்தக் கணமே அப்பப்பா சிலிர்க்கிறது.
என் இதயத்தின் உள்ளறைகளுக்குள் எல்லாம் பாய்ந்து பாய்ந்து அல்லவா அது வெளிச்சம் பாய்ச்சியது.
காதலே எனக்கே எனக்கென்று ஒரு பிரேத்யேக மொழியையும் அதனோடு சேர்த்து கண்ணீரையும் கொடுத்துச் சென்றது.
நண்பர்களே ! நீங்கள் உங்கள் இளமைக்காலத்தில் ஓடித்திரிந்த தோட்டங்களையும் சோலைகளையும் நெருங்கி சந்தித்த இடங்களையும் ,விளையாடிக் களித்த தெருக்களையும் பால்யம் வந்து உங்கள் காதுகளில் குழந்தை போல கிசு கிசுக்க எத்தனை இன்பமாய் வசந்தத்தில் திளைக்கிறீர்கள்.
நானோ என் கண்களை மூடிக்கொள்கிறேன். மனதில் வடக்கு லெபனான் வந்து போகிறது. மனதை கொள்ளை கொள்ளும் மாயக்கரம் அதுதான். விண்ணைத் தொடும் மலைகள் பரிசுத்தத்தை பச்சையாய் விரித்து வைத்திருக்கும் பள்ளத்தாக்குகள் அப்பப்பா..
இதோ இந்தக் கணம் இந்த நகரத்தின் பேரிரைச்சைலுக்குப் பயந்து என் காதுகளை சாத்திவிடுகிறேன் இப்போது கேட்கிறது அந்த சிற்றோடையின் முனுமுனுப்புகள் , கிளைகள் உரசும் சலசலப்புகள்
ஒரு குழந்தை தன் தாயின் மார்பை உறிஞ்ச ஏங்குவது போல நான் அந்த இயற்கையின் அழகைப்பருக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.நண்பர்களே … ஆனாலும் என்ன அதே அழகுதான் என் இளமையையும் ஆன்மாவையும் ஒரு சேர இருள் சிறையில் அடைத்தவை.அவைகள் தான்.
வானெங்கும் பறவைகள் கொத்து கொத்தாய் பறந்து செல்லும் போது பறவைகளை வேட்டையாடும் ராஜாளியை சிறையில் அடைத்து வைத்திருந்தது போல என்னை சிறையிலிட்டிருந்தது அப்போது.
அந்தப் பள்ளத்தாக்குகளும் மலைக்குன்றுகளும் தான் அன்று என் கற்பனையில் சுடரேற்றியவைகள் ஆனால் அந்தோ அவைகளே தான் கசந்த நினைவுகளாகவும் அவநம்பிக்கைகளாகவும் என் இதயத்தை சுற்றி வலையெனப் பின்னியிருப்பவைகள்.
ஒவ்வொரு முறையும் அந்த நிலத்திற்குள் நிம்மதியற்றே அலைந்து திரும்பினேன் . என் ஏமாற்றத்திற்கான காரணம் எனக்குத் தெரியவேயில்லை.
ஒவ்வொரு முறையும் சாம்பல் நிற மேகங்களைப் பார்க்கும் போதும் என் இதயம் ஏனோ சுருங்கிப்போனது.
ஒவ்வொரு முறையும் பறவைகளின் பாடலைக் கேட்கும் போதும் வசந்தத்தின் குழறலை கேட்கும் போதும் காரணமற்று நான் துயருற்றேன்.
.உலகத்தோடு ஒட்டாத ஒருவனை துன்பங்களும் ஒட்டாது என்பது என்னைப்பொறுத்தவரை இறந்து போன மனிதனுக்கும் உறைந்து போன மனிதனுக்கும் தான் பொருந்தும்.
ஆனால் குறைவாக அறியும் தன்மையும் அதிகமாக உணரும் தன்மையும் கொண்ட கொந்தளிக்கும் உணர்வுகளால் சூழப்பட்ட ஒரு சிறுவனுக்குத்தான் அது எத்தகைய நரகம் தெரியுமா?
இரண்டு உச்சகட்ட சக்திகளால் அவன் நார் நாராக கிழித்தெறிப்பட்டுக்கொண்டிருந்தான் அப்போது.
ஒன்று மேகங்கள் அளவு அவனுக்கு கனவுகளை தாரை வார்த்து அவனை உள்ளங்கையில் வைத்து உயர்த்தி அழகின் இருப்பிடத்திற்கே அழைத்துச் சென்றது.
இரண்டாவது சக்தியோ அவனை தரையிலாழ்த்தி அவன் கண்கள் நிறைய புழுதியைத் திணித்து அவனை இருளிலும் பயத்திலும் வைத்திருந்தது.
தனிமை என்பது பட்டுப்போன்ற மென்மையான கரங்கள் கொண்டது தான் ஆனால் அதன் விரல்களோ அசாத்திய வலிமை கொண்டவை. எந்த ஒரு இதயத்தையும் கசக்கிப் பிழிந்து துடிப்பை நிறுத்தி விடுகிற அளவிற்கு . அசாத்திய வலிமை கொண்டவை அவைகள்
ஆம் துயரமென்னும் வலியை சொட்டு சொட்டாய் இதயத்தில் இறக்கும் அளவிற்கு. அசாத்திய வலிமை கொண்டவை அவைகள்
தனிமை என்பது துன்பத்தின் தோழன். அது போலவே தான் உயிர்ப்பின்மையின் உற்ற தோழனும். அது தான்.
அந்த தனிமையினிடம் முரட்டுக்கரங்களிலிருந்து விழும் ஒவ்வொரு அடியும் அந்த சிறுவனின் இதயத்தில் தான் இறங்கின.
அந்த சிறுவனின் இதயமோ விரிந்த அல்லி போல் இருக்கும். குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்த உடன் குலை நடுங்க ஆரம்பித்து விடும். வெளிச்சத்தை கண்டதும் இதயம் நடுங்கி இரவின் நிழல் தென்பட ஆரம்பித்த கணம் மறுபடியும் தன் இதழ்களை பூட்டிக்கொள்ளும் சூன்யத்தில்.
நண்பர்களற்ற , பொழுது போக்குகளற்ற , மனம் விட்டுப் பேச ஒரு ஜீவன் அற்ற ஒரு சிறுவனுக்கு வாழ்க்கை என்பது ஒரு குறுகிய சிறை என்பதைத் தவிர வேறு யாது? அவன் சிலந்திக்கூடுகளை பார்ப்பதை தவிரவும் ஊறும் பூச்சிகளின் சப்தத்தை கேட்பதை தவிரவும் வேறு மார்க்கம் ஏதாவது உண்டா ?
எதனால் இது விளைந்தது என் இளமையை கரைத்துவிடும் சோகம் எதனால் விளைந்தது ? நண்பர்களற்றுப்போனதனாலா? அப்படியென்றால் நண்பர்களை தேடி கொண்டிருப்பேனே ,, பொழுது போக்குகள் அற்றதனாலா? அப்படியென்றால் அதையும் தேடிக்கொண்டிருப்பேனே
ஆனால் ஆனால் என் இதயத்தின் ஆழத்தில் குடி கொண்டிருந்த ஒரு நோய் அல்லவா எதனோடும் என்னை ஒட்டவிடாமல் தனிமையை மட்டுமே என்னை நேசிக்க வைத்தது.
அது தானே என்னில் தோன்றும் எந்த விளையாட்டு ஆசையையும் விரட்டி அடித்தது. .அது தானே என் தோளிலிருந்து என் இளமையை பறித்துக்கொண்டு சென்றது.
அது தானே உயர்ந்த மலைகளின் நடுவே என்னை ஒரு குளமாக்கி சபித்தது.. உச்சியிலிருந்து உருண்டோடி கடலடையும் சாத்தியமற்றுப் போவதற்கோ என்றென்றைக்கும் ?
.நான் பிரதிபலித்ததெல்லாம் மேகங்களையும் மரங்களையும் நீராவிகளையும் மட்டும் தானே.
வயது பதினெட்டை அடையும் வரை என் வாழ்க்கை இப்படியே சுவாராசியமில்லாமல் போய்க்கொண்டிருந்தது.
ஆனால் நண்பர்களே அந்த வருடம் தான் என் வாழ்க்கையின் சிகரமாக வாய்த்தது எனக்கு. எனக்குள் உறங்கி கிடந்த என் ஆன்மா விழித்துக்கொண்டதும் அப்போது தான்.
நான் மனிதனாக மறுமலர்ச்சி அடைந்ததும் அப்போது தான். நான் புதிதாக மறுபடியும் அப்போது தான் பிறந்தேன்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மறுபடியும் ஒரு முறை பிறக்கவில்லை என்றால் அவன் வாழ்க்கை முழுவதும் எழுதப்படாத வெறும் வெள்ளைக்காகிதமாகவே வீணாக முடிந்து விடும் என்பேன்.
அந்த வருடத்தில் தான் சொர்க்கத்தில் வசிக்கும் தேவதைகள் எல்லாம் என்னை நோக்க ஆசை கொண்டு அழகிய பெண் ஒருத்தியின் கண்கள் வழியாக என்னை நோக்கினார்கள். அந்த வருடம் தான் அதே வருடம் தான் நரகத்தில் இருக்கும் சாத்தான்கள் எல்லாம் என்னை அழித்து விட மனதில் கோபத்தை வளர்த்தார்கள்.
அழகில் தேவதைகளையும் கோபத்தில் சாத்தான்களையும் கண்டுணராத மனிதனுக்கு நேர்வது என்ன சொல்லுங்கள் ?. வாழ்க்கையிலிருந்து நெடுந்தொலைவுக்கு அப்பால் எடுத்துச் செல்லப்பட்டிருப்பான் பிறகு அவனது ஆன்மாவில் அன்பே இருக்காது அவ்வளவு தான்
(இரண்டாவது அத்தியாயம் ‘’ விதியின் கரங்கள் ‘’ அடுத்த வாரம்)
