
- அரசியல் களத்தில்
இதுவரை சித்தரஞ்சன் தாஸ் அரசியலில் நேராகப் பங்கெடுத்துக்கொள்ளவில்லை. சிறுகச் சிறுக அவர் அரசியலில் நேர்முகமாய்க் கலந்துகொள்ளலானார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மக்கள் தேசியவுணர்ச்சி மிக்கவர்களானார்கள், முதல் உலகப்போரின் (1914-1918) போது இந்த உணர்ச்சி வலுப்பெற்றது. லோகாயதவாதத்தில் சிக்கியிருந்த இந்நாடு மீண்டும் ஆன்மிகச் சுய அறிவு பெறத் தொடங்கியது. இவைகளை எல்லாம் தாஸ் ஊன்றிக் கவனித்து வந்தார்; ஆன்மிகத்துடன் அரசியலை அரவிந்த கோஷ் இணைத்த விதம் தாஸை மிகவும் கவர்ந்தது.
1917ஆம் வருடம் கல்கத்தாவில் ‘வங்காள மாகாண மாநாடு’ நடந்தது. சித்தரஞ்சனர் தலைமை பூண்டார். அவ்வமயம் அவர் நிகழ்த்திய தலைமையுரை ஓர் இலக்கிய உரையாகவே அமைந்தது; வெள்ளமாய்ப் பெருகிவரும் சடவாதத்தை அவர் தம் சொற் பொழிவில் வன்மையாய்க் கண்டித்தார்; உபநிடத காலத்திலிருந்தும், புத்தர் காலத்திலிருந்தும் உலகத்துக்கு அறிவுச்செல்வம் வழங்கி வரும் பாரதம் இப்போதும் அப்பணியைச் செய்யவேண்டும் என்று அவர் வற்புறுத்தினார்.
‘பண்டைய வங்காளம் போல் இன்றைய வங்காளம் இல்லை; மேனாட்டுக் கொள்கைகளும் கீழ்நாட்டுக் கொள்கைகளும் முட்டிக்கொண்டதால் எழுந்த புழுதியினால் நாம் நம் தெய்விகத் தன்மையையும் புனிதத்தையும் மறந்துவிட்டோம்; புதுப்புதுத் தெய்வங்களையும் கொண்டாடத் தொடங்கிவிட்டோம்…ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்த போது நாம் வீழ்ச்சி அடைந்துகொண்டிருந்தோம்; நம் உயிர்நிலை வலுவிழந்த நேரம் அது; பழமையின் கேலிச்சித்திரமாக நாம் ஆகியிருந்தோம். நம் பண்டை புலமையும் அறிவும் வெறும் நினைவுப்பொருள்கள் ஆகியிருந்தன. பலவீனர்களுக்கு ஏற்படுகிற கதிதான் நமக்கும் ஏற்பட்டது.
‘நாம் ஆங்கிலேயர்களைப் பின்பற்றத் தொடங்கினோம். அவர்களுடைய ஆட்சி, நடை, உடை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றலானோம். ஆனால், இந்த மாயா மோகினி நீங்க வேண்டிய வேளை வந்துவிட்டது. தாய் நாட்டைத் தாய்வடிவத்தில் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் பங்கிம்சந்திரர்; அவர் நம்மை அழைத்து, ‘இதோ பாருங்கள், இவள் நம் தாய்; இவள் நீர்வளம் நிறைந்தவள்; கனிவளம்மிக்கவள்; தண்மையான காற்றுடையவள்… தாய்’ என்று கூறுகிறார்…. 1903-ஆம் வருடமே சுதேசிச் சங்கு ஊதப்பட்டுவிட்டது. சுதேசிக் கிளர்ச்சி ஒரு புயலென வந்தது; வலுவுள்ள வெள்ளமெனப் பெருகியது; அதில் நம் கால்கள் வழுக்கிவிட்டன. அது நமக்குப் புத்துயிர் வழங்கியது; அதனால் நாம் நம் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் பொருளை மீண்டும் அறியலானோம்; நம் தேசிய வரலாற்றினை மீண்டும் நாம் உணரலானோம்; வங்களாத்தின் இந்த மறுமலர்ச்சிக்கு முழுமை அளிப்பது எப்படி என்பதே நமக்கு முன்னாலுள்ள பிரச்சனை….
‘நாட்டை உருவாக்குகிற இந்தக் கடுமையான நேரத்தில் ஐரோப்பியக் கொள்கையான போகத்தை நாம் துறக்க வேண்டும்; நம் பழைய கொள்கையான தியாகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கல்வி, பண்பாடு, விவசாயம், தொழில் முதலிய அனைத்தும் இவ்வழியிலேயே வளர்ச்சி காண வேண்டும்…’
அரசியல் மாநாட்டில் சித்தரஞ்சன் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதியைத்தான் நாம் மேலே படித்தோம். அவருடைய நாட்டுப்பற்றை அறிவதோடு, இன்றைக்கும் அச்சொற்பொழிவு பயனுள்ளதாக இருப்பதை அறியலாம். அரசியலில் நேர்முகமாய்க் கலந்துகொண்டு அவர் செய்த முதல் பிரசங்கம் இது என்றே கூறலாம்.
இந்திய மக்களிடையே ஏற்பட்டிருந்த புதிய விழிப்பைக் கண்ணுற்ற பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவர்களை ஒருவிதத்தி லாவது திருப்தி செய்ய முனைந்தது; புதிய இந்திய அரசியல் திட்டத்தை அறிவித்தது. இந்த அறிவிப்பை இந்தியாவிலிருந்த மிதவாதிகள் உவகையோடு வரவேற்றனர். ஆனால் பால கங்காதர திலகர், சித்தரஞ்சன் தாஸ் முதலிய தீவிரவாதிகள் அதைப் பொருட்படுத்தவே இல்லை.
இந்நிலையில், இந்தியா மந்திரியாக இருந்த மாண்டேகு இந் நாட்டுக்கு விஜயம் செய்தார்; மிதவாதிகளில் பெரும் தலைவர்களாகவும் தீர்க்கதரிசிகளாகவும் விளங்கிய பெரோஸ்ஷா மேத்தாவும், கோபாலகிருஷ்ண கோகலேயும் முன்பே காலமாகி விட்டனர்; ஆகையால், சுரேந்திரநாத் பானர்ஜியே மிதவாதிகளுக்குத் தலைமை வகித்தார். அவர் ஈடு இணையற்ற சொல்லாற்றல் படைத்தவர் என்பது உண்மை; ஆனால், அவர் மிகவும் பிற்போக்கான கருத்துகள் உடையவர். அவரும், அவரைப் பின்பற்றிய மிதவாதிகளும் இந்திய மந்திரி மாண்டேகுவின் வலையில் சிக்கிவிட்டனர்; அவர்கள் தீர்க்கதரிசனத்துடன் நடந்திருந்தால் 1919ஆம் ஆண்டின் ‘இந்திய ஆட்சிச் சட்டம்’ (கவர்மெண்ட் ஆஃப் இண்டியா ஆக்ட்) கட்டாயம் வேறுவிதமாக இருந்திருக்கும். சுரேந்திர நாதருக்கு அரசியல் துணிவு குறைவு; ஆகையால், மக்கள் அவருடைய தலைமையைப் புறக்கணித்து திலகர், தாஸ் போன்ற தீவிரவாதிகளைப் பின்பற்றலானார்கள்.
சித்தரஞ்சன் தாஸ் மாண்டேகு கோஷ்டியிடம் சாட்சியம் அளித்தார்; அவருடைய கோரிக்கைகளைக் கேட்டு மாண்டேகு அயர்ந்துவிட்டார். முழுப் பொருளாதார உரிமை வேண்டும் என்றும் அரசாங்கம் உத்தியோகங்கள் யாவும் இந்தியருக்கே அளிக்கப்படவேண்டும் என்றும் தாஸ் கோரினார்.
மிதவாதிகளுக்குத் திருப்தி அளித்த இந்திய ஆட்சிச் சட்டம்தான் அறிவிக்கப்பட்டது; சித்தரஞ்சன் வங்காளம் முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்து மக்களுக்குப் புதிய தேசிய தர்மத்தைப் பற்றி விளக்கினார். மிதவாதிகளை மிகவும் கடுமையாகத் தாக்கினார். அவருடைய அரசியல் ஆசிரியர் என்று சொல்லத் தக்கச் சுரேந்திரநாதரை ‘வேடதாரி’ என்று குற்றம் சாட்டினார்.
அப்போதிருந்து அவர் ஒவ்வொரு காங்கிரஸிலும் கலந்து கொண்டார்; முக்கியமான ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப் படும் போதெல்லாம் அவர் அவைகளில் உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். நாட்டில் பெருக்கெடுத்த புத்துணர்ச்சிக்கு அவர் தலைமை ஏற்றார்.
அப்போது, இந்திய அரசியலில் இருவிதக் கருத்துகள் நிலவின. பாரதம் தன் விதியைத் தானே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு கருத்து; ஆசியாவில் பரவி வந்த சுதந்தர வேட்கையின் விளைவே இது. ஆட்சி நிர்வாகத்திலுள்ள குறை பாடுகளைக் களையவேண்டும் என்பது மற்றொரு கருத்து. இரண்டு கருத்தினரும் எப்படி ஒத்துப்போக முடியும்? அவர்கள் இரு கட்சிகளாய்ப் பிரிந்து தத்தம் கருத்துக்கு ஆதரவு தேடிக் கொண்டிருந்தனர். இவ்விதம் கொள்கைப் போராட்டம் நிகழும் போதுதான் சித்தரஞ்சன் தாஸ் தன்னம்பிக்கையோடும், புதிய தத்துவத்தோடும் அரசியலில் புகுந்தார்.
சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
