சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

  1. அலிப்பூர் வெடிண்டு வழக்கு

வைசிராய் மிண்டோ பிரபுவின் சமாதான முயற்சிகள் பயன்தரவில்லை என்று மேலே கூறப்பட்டது. தீவிர தேசிய வாதிகள் பத்திரிகைகளில் அரசாங்கத்தை மிகவும் கடுமையாக எதிர்த்து எழுதினார்கள். அரசாங்கம் அப்பத்திரிகைகளை நசுக்க விரும்பியது; முதலில், ஆங்கில நாளிதழான ‘வந்தேமாதரத்’தின் மீது அதன் பார்வை விழுந்தது. இந்த இதழைச் சித்தரஞ்சனும் மற்றும் இரண்டு நண்பர்களும் சேர்ந்து தொடங்கினார்கள். அரவிந்தரைத் தலைவராய்க் கொண்ட ஓர் ஆசிரியக் குழு இதழை நடத்தி வந்தது. ‘எளிய வாழ்க்கை உயர்ந்த எண்ணங்கள்’தாம் அரவிந்தரின் கொள்கை. ‘வந்தேமாதரம்’ தாளில் தேசிய வேதாந்தம் பற்றி அவர் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதி வந்தார். அரசாங்கம் பத்திரிகைமீதும் அரவிந்தர்மீதும் வழக்குத் தொடர்ந்தது; ஆனால், அது தோல்வி கண்டது. வழக்கினால் அரவிந்தர் பெயரும், அவருடைய வக்கீல் சித்தரஞ்சன் தாஸின் பெயரும் மேலும் பிரபலமாயின.


சந்தியா, யுகாந்தர் என்னும் இரு பத்திரிகைகள் தேசியத்தைப் பிரச்சாரம் செய்ததாய் மேலே குறிப்பிட்டுள்ளோம்; பிர்மபாந்தவ் என்பாரும், பூபேந்திர நாத் தத்தரும்
அவைகளின் ஆசிரியர்களாய்ப் பணியாற்றினார்கள்; பூபேந்திரர் விவேகானந்த சுவாமிகளின் சகோதரர். முற்போக்கு இளைஞர்களை அவர் எழுத்துக்கள் உற்சாகமூட்டின; இவ்விரு ஆசிரியர்கள் மீதும் சர்க்கார் வழக்குத் தொடுத்தனர்; அவர்கள் சார்பில் சித்தரஞ்சன்
வாதாடினார். பிர்மபாந்தவ் வழக்கு முடியும் முன்னரே காலமானார். பூபேந்திரரின் சார்பில் தாஸ் வாதாடியதைக் கேட்டு நீதிபதியே மலைத்துவிட்டார். ஆசிரியருக்கு ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டாலும், தாஸின் வாதத்திறமையும் அறிவுக் கூர்மையும் மிகப் பிரசித்தி பெற்றன.
இதே சமயம் 1908, ஏப்ரல் 30ஆம் நாள் குதிராம் போஸ், பிரபுல்லசாக்கி என்ற இரு இளைஞர்கள் முஸப்பர்பூர் மாவட்ட நீதிபதிமீது வெடிகுண்டு எறிந்தார்கள்; நீதிபதி பல பத்திரிகை ஆசிரியர்களுக்குத் தண்டனை விதித்தவர்; ஒரு சிறுவனுக்குக் கசையடித் தண்டனை வழங்கியவர்; அதற்குப் பழிவாங்கவே வெடிகுண்டு எறிந்தனர். ஆனால், அது தவறுதலாக இரண்டு வெள்ளைக்காரிகளின் உயிரைப் பலி கொண்டது. இதனால் அரசாங்கம் பீதி கொண்டது. காவல் துறையினர் விரைவில் அந்த இளைஞர்களைப் பிடித்துவிட்டனர்; கல்கத்தாவில் ஒரு வெடி குண்டுப் பட்டறையையும் அவர்கள் கண்டுபிடித்தனர்; இது சம்பந்த மாக அரவிந்தரின் சகோதரரான வாரீந்திர குமார் கோஷ் கைது செய்யப்பட்டார். புரட்சிக் கூட்டத்துக்கு அவர் தலைவர் என்று கூறப்பட்டது; மற்றும் சில வாலிபர்களும் சிறையிடப்பட்டனர்; சில நாள்களுக்குப் பிறகு அரவிந்தரும் மற்றும் பலரும் கைதாயினர். முஸப்பர்பூர் வெடிகுண்டு சம்பந்தமாக மொத்தம் 36 யுவர்களைப் போலீசார் பிடித்தனர். வாலிபர்கள் போலீஸ் விசாரணையில் பல விஷயங்களை ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அலிப்பூர் நீதி மன்றத் தில், 1908, மே மாதம் வழக்கு ஆரம்பமாயிற்று; அதே ஆண்டு அக்டோபரில் செஷன்ஸ் ஜட்ஜ் விசாரணைக்குச் சென்றது. ‘அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு’ என்று இது மிக முக்கியத்துவம் அடைந்தது. அரவிந்தர் தரப்பில் சித்தரஞ்சன் தாஸ் வக்கீலாக ஆஜரானார்.
வழக்கு மிகச் சிக்கலானது; 206 சாட்சிகள்; 4000 பொருள்கள்’ ‘பைல்’ செய்யப்பட்டன; வெடிகுண்டு, கைத்துப்பாக்கி முதலிய காட்சிப்பொருள்கள் (EXHIBITS) ஐந்நூறு! அரவிந்தருக்கு விரோதமாக அவருடைய பல சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்,
கடிதங்களும் அரசாங்கத்தால் சாட்சியங்களாய்க் காட்டப்பெற்றன; அவர் சக்கரவர்த்திக்கு விரோதமாய்ப் பிரச்சாரமும் சூழ்ச்சியும் செய்ததாய் அரசு குற்றம் சாட்டியது. அரசின் சார்பில் பிரசித்திபெற்ற நார்டன் துரை ஆஜரானர்.
அவரை மறுத்து தாஸ் மிக அழகாய்ப் பேசினார்: ‘அரவிந்தரின் எழுத்துகளைச் சர்க்கார் தவறாகப் புரிந்துகொண் டுள்ளனர். அவர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். வேதாந் தத்துக்குப் புத்துயிர் தர முயலுகிறவர். அவர் தம் எழுத்துகளின் வாயிலாகச் சுதந்தரத்தைப் போதிக்கிறார்… அவர் தம் பிரசங் கத்திலோ, கட்டுரையிலோ ஹிம்சையைப் போதிக்கவே இல்லை. ‘சர்க்காரின் சட்டங்கள் உங்களுக்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் இடையூறாகும் என்று நீங்கள் கருதினால் அதை மீறுங்கள். அதற்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள், இன்னல்களைப் பொறுத்து கொள்ளுங்கள்’ என்றுதான் அரவிந்தர் உரைக்கிறார். அரவிந்தருடைய உபதேசத்தின் சாரம் இதுவே. இந்த உபதேசம் எந்த நாட்டில் செய்யப்படவில்லை? இது, நார்டன் துரை கடுமையாகக் குறிப்பிட்டது போல், இந்தக் கிளர்ச்சிகளுக்கும் கலகங்களுக்கும் பொருத்தமானதா?… ‘நீங்கள் கோழைகள் அல்ல; நீங்கள் தகுதியற்றவர்கள் அல்ல; நீங்கள் வலிமையற்றவர்கள் அல்ல; உங்களுக்குள் தெய்வசக்தி உறைகிறது; உங்களை நம்புங்கள்; லட்சியத்தை அடைவீர்கள்!’ என்பதே அரவிந்தர் உபதேசம்.
சாட்சியங்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் தாஸ் பின்வருமாறு கடிதங்களின் கூறினார் : ‘அரவிந்தர் குற்றவாளி என்ற முடிவுடன் அவருடைய அதற்கேற்பக் படித்தால், கடிதங்களைப் வாசகங்களுக்கும் பொருள் தோன்றும்; இந்த முடிவு செய்து கொள்ளாமல் படித்தால் உண்மைப் பொருள் விளங்கும்.’
அரவிந்தருக்கு விரோதமாய்ப் பலமான சாட்சியமாக அவர் தம் சகோதரருக்கு எழுதியதாய் ஒரு கடிதத்தைச் சர்க்கார் காட்டினர். அந்த ஆங்கிலக்கடிதம் பின்வருமாறு :

‘Dear Brother,

Now is the time, please try and make them meet for our conference. We must have sweets all over India ready made for imergencies. I wait here for your answer.

Yours affectionate,
Barindra Kumar Ghose.

அன்புள்ள சகோதர,

இதுதான் சமயம்; அவர்கள் அனைவரையும் நம் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி தயவுசெய்து செய்யுங்கள். தேவைப்படும் போது இந்தியா முழுவதும் இனிப்புகள் தயாராக இருக்க வேண்டும். தங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

தங்கள் அன்புள்ள,
பாரீந்திர குமார் கோஷ்

இக்கடிதத்தில் இனிப்புகள் என்று குறிப்பிட்டுள்ளது வெடிகுண்டுகளைத்தாம்; மற்ற சாட்சியங்களால் அது உறுதி யாகிறது’ என்று சர்க்கார் வக்கீல் வாதாடினார்.

‘இக்கடிதமே பொய்யானது. வங்காளத்தில் தம்பி தமையனாருக்குக் கடிதம் எழுதும்போது முழுப்பெயரையும் கையெழுத்திடும் வழக்கமில்லை; தவிர, மரியாதையுடன் எழுதுவதேயன்றி, மேனாட்டு முறையில் ‘அன்புள்ள சகோதர; என்று நாம் எழுத மாட்டோம். மேலும், வாரீந்திரர் சிறந்த ஆங்கிலக்கல்வி பெற்றவர். (Emergencies) என்ற சாதாரண வார்த்தையை (Imergencies) என்று தவறாக எவ்வாறு எழுத முடியும்? ஆகவே, இக்கடிதத்தில் அடங்கிய செய்திகளே இது பொய்க்கடிதம் என்பதை நிரூபிக் கின்றது,’ என்று சித்தரஞ்சன் தாஸ் வாதாடினார். உரையின் முடிவில் அவர் போலீசார் இவ்வாறு கடிதங்களை ஜோடிப்பதில் வல்லவர்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கினார். நீதிபதியையும் அஸ்ஸெஸ்ஸர்களையும் நோக்கி அவர் ஆற்றிய சொற்பொழிவை இப்பொழுது படித்தாலும் உடல் சிலிர்க்கும். ஆற்றல் மிக்க சொற்களில் தீர்க்கதரிசிபோல் பேசினார் அவர்.
அதனால் மிகவும் கவர்ச்சியுற்ற நீதிபதி அரவிந்தர் குற்றவாளி அல்ல என்று விடுதலை செய்ததுடன் தாஸையும் வெகுவாய்ப் பாராட்டினார். விடுதலையான அரவிந்தர் ஞானத்தேட்டத்தில் நாட்டம் கொண்டவராய்ப் பாண்டிச்சேரிக்குச் சென்று ஆசிரமம் அமைத்துக்கொண்டார். இந்த வழக்கின் வாயிலாக, இந்தியாவின் மிகச்சிறந்த வக்கீல்களில் ஒருவராய் தாஸ் கருதப்படலானார். கணக்கு வழக்கு இல்லாமல் அவரிடம் வழக்குகள் குவிந்தன; பலவற்றை அவர் நிராகரிக்க நேர்ந்தது. வக்கீல் தொழிலில் வெற்றி பெற்றதற்கு, அவர் வழக்கு விவரங்களை அல்லும் பகலும் அயராமல் ஆய்ந்ததும் ஒரு காரணம். இரவு முழுவதும் யோசனையிலேயே கழித்து விடுவார். கவனிக்க முடிந்த அளவுக்குதான் வழக்குகளை ஏற்பார்; பெரும்பாலும் அவர் கிரிமினல் வழக்குகளையே ஏற்பார்; குறுக்கு விசாரணையில் மிக வல்லவர். சிவில் வழக்குகளிலும் அவர் சோடைபோனதில்லை.
1913ஆம் ஆண்டு தம் குடும்பத்தினர் கொடுத்த இன்ஸால் வென்ஸியை ரத்துசெய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துகொண்டார். தகப்பனார் பட்ட கடன் முழுவதையும் கொடுத்துத் தீர்த்தார். சட்டப்படி அவர் யாருக்கும் பணம் தர வேண்டியதில்லை; ஆயினும் அவர் மனச்சான்று நேர்மையை நாடியது. நீதிபதிகள்கூட அவருடைய நேர்மையைப் புகழ்ந்தனர்.
1920ஆம் ஆண்டில் அவருடைய மாத வருமானம் ரூ.50,000ஐயும் தாண்டிவிட்டது. அவருடைய வாதத்திறமை, நீதிபதிகளுக்குத் தணியாமல் அவர்களோடு நட்பு முறையில் பேசும் திறமை, சொல்லாற்றல் ஆகியவையே அவருடைய வெற்றியின் ரகசியங்கள்.

நாட்டுக்கு உழைத்த நல்லவர்- சித்தரஞ்சன் தாஸ் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்”

Comments are closed.