எம.வி.வெங்கட்ராம்

- படிப்பும் மணமும்
கல்கத்தாவில் பவானிபுரம் என்ற இடத்திலுள்ள ‘லண்டன் மிஷனரி சொசைட்டி இன்ஸ்டிடியூஷன்’ என்ற பள்ளிக்கூடத்தில் சித்தரஞ்சன் 1878ஆம் ஆண்டு சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் படிப்பில் மிகவும் கவனம் செலுத்தினார்; ஆனால், அவர் வெறும் ‘புத்தக புழு’வாக இருக்க விரும்பியவர் அல்லர். எப்போதும் சிரித்த முகத்துடன் உற்சாகமாயிருப்பார். அந்தப் பள்ளியிலேயே அவர் என்டிரன்ஸ்’ (நம் எஸ்.எஸ்.எல்.ஸி-க்குச் சமம்) தேர்வில் 1885ஆம் ஆண்டு தேறினார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவர் ‘பிரஸிடென்ஸி காலேஜி’ல் சேர்ந்தார். கல்லூரியில் கால் வைத்ததுமே அவர் நிறுவனங்கள் ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். பத்திரிகை ஆசிரியராக இருந்த ஒரு நண்பருடன் சேர்ந்து ‘அண்டர் கிராஜுயேட் அஸ்ஸோஸியேஷன்’ என்னுமொரு கழகம் நிறுவினார். வங்காளி மொழியையும், ‘என்டிரன்ஸ்’ வகுப்பில் விருப்பப்பாடமாக ஏற்க வேண்டும் என்பதே இக்கழகத்தின் குறிக்கோள். கழக உறுப்பினர்கள் மிக மும்முரமாய் வேலை செய்தனர். ஆயினும், மிகவும் பெரிய கல்வியாளர்கள் சிலர் அந்தக் குறிக்கோளை ஆதரிக்காத தால், அவர்களுடைய முயற்சி அச்சமயம் நிறைவு பெறவில்லை.
பின்னர், வங்காளத்து மாணவர்கள் ‘ஸ்டூடன்ட்ஸ் அஸோஸி யேஷன்’ என்ற பெயரில் ஒரு மன்றம் அமைத்தனர். சித்தரஞ்சன் அதன் செயலாளரானார்; சுரேந்திர நாத் பானர்ஜி என்னும் பெரியார் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; சுரேந்திர நாதர் மாணவர்களுக்குத் தேசபக்தி ஊட்டினார்; அவரிடமிருந்துதான் சித்தரஞ்சன் நாட்டுப்பணி செய்வதற்கான வழிதுறைகளைக் கற்றுக்கொண்டார் என்று கூறவேண்டும்.
1890ஆம் ஆண்டு சித்தரஞ்சன் பி.ஏ.தேறினார். உடனே, ஐ.ஸி.எஸ்.தேர்வில் கலந்துகொள்வதற்காக அவர் இங்கிலாந்துக்குச் சென்றார்; ஆனால், அவர் தேறவில்லை. வெற்றி பெறாததற்குக் காரணம் அவருடைய அரசியல் கொள்கைகளே.
இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஜேம்ஸ் மாக்ளின் என்பார் உரையாற்றும்போது, ‘ஆங்கிலேயர்கள் பாரதத்தை வாள் முனையால் வென்றார்கள்; வாள் பலத்தாலேயே ஆளவேண்டும்’ என்று குறிப்பிட்டார்; இப்படிக் கூறிவிட்டுத் தாதாபாய் நவ்ரோஜி பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்தார். அப்போது இங்கிலாந்தில் நிற வேற்றுமை மிகவும் கடுமையாகப் பாராட்டப்பட்டு வந்தது. இங்கிலாந்து முதல் அமைச்சராக இருந்த ஸாலிஸ்பரி பிரபு, தாதாபாய் நவ்ரோஜியைக் ‘கறுப்பர்’ என்று குறிப்பிட்டார். உண்மையில், தாதாபாய் அவரை விடச் சிவப்பு; ஆகையால், ஸாலிஸ்பரி பிரபு இந்தியர்களை அவமதிக்கும் எண்ணத்துடன் அவ்வாறு பேசினார் என்பது வெளிப்படை. சித்தரஞ்சன் இந்த அவமதிப்புக்களால் ஆத்திரம் கொண்டார். பாராளுமன்றத் தேர்வில் தாதாபாய் நவ்ரோஜியை ஆதரித்தார்; அவருடைய முயற்சியாலும், மற்றும் பல காரணங்களாலும் தாதாபாய் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், சித்தரஞ்சன் ஐ.ஸி.எஸ். பரிட்சையில் தோல்வி கண்டார்.
அதே ஆண்டு அவர் பாரிஸ்டர் பரிட்சை தேறினார். 1893ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பிக் கல்கத்தா உயர்நீதி மன்றத்தில் பாரிஸ்டராகப் பணிபுரியத் தொடங்கினார். அவ்வமயம் சார்லஸ் பால், ஜான் உட்ரப், மன மோகன கோஷ் போன்ற சட்ட மேதைகள் வக்கீல்களாக இருந்தனர். அவர்களுக்கு முன்னால் வேறு வக்கீல்கள் சோபிக்க முடியவில்லை. ஆகவே, சித்தரஞ்சனுக்குத் தொழிலே சரியாக நடக்கவில்லை.
வழக்கு மன்றத்தில் வெற்றி காணாத அவர், கவிதைகள் இயற்றத் தொடங்கினார். 1895ஆம் ஆண்டு, அவருடைய முதல் கவிதைத் தொகுதி புத்தகமாக வெளிவந்தது. இப்புத்தகத்தினால் பிர்ம சமாஜம் முழுவதும் அவரிடம் பகை கொண்டது. அதனால் அவர் கவிதை புனைவதையே சிறிது காலம் நிறுத்த நேர்ந்தது.
1897ஆம் ஆண்டு, அஸ்ஸாமிலுள்ள விஜனீ சமஸ்தானத் திவான் வரதாநாத் ஹால்தார் என்பவரின் புத்திரி வசந்தி தேவிக்கும் சித்தரஞ்சன் தாஸுக்கும் பிர்ம சமாஜ விதிப்படித் திருமணம் நடைபெற்றது. ஆனால், பிர்ம சமாஜத்துப் பிரமுகர்கள் இக்கலியாணத்தில் கலந்துகொள்ளவில்லை; ஏனென்றால், அவர்கள் சித்தரஞ்சனை நாஸ்திகர் என்றும் ‘தான் தோன்றி’ என்றும் கருதினர்.
1906ஆம் ஆண்டுவரை இவ்வாறே நாள்கள் சென்றன. ஒரு துறையிலும் அவர் வெற்றி காணவில்லை. அத்தோடு குடும்பத்தில் ஒரு பெரிய நெருக்கடி உண்டாயிற்று. அவருடைய தந்தையார், நண்பர் ஒருவர் கடன் வாங்க ஜாமீன் கொடுத்தார்; கடன் தொகை நாற்பதாயிரம் ரூபாய்; நண்பரோ குறித்த காலத்தில் கடனைச் செலுத்தவில்லை; இவர்களிடமும் பணம் இல்லை; ஆகையால், புவன மோகனர் 1906ஆம் ஆண்டு ‘இன்ஸால்வென்ஸி’ மனு தாக்கல் செய்ய நேர்ந்தது. குடும்பத்துக்கு நேர்ந்த இந்த அவமானம் சித்தரஞ்சனுக்கு வேதனை அளித்தது; எனினும், அவர் தன்னம்பிக்கை இழக்கவில்லை.
(இப்புத்தகம் வெளியீட்டாளர் : பழனியப்பா பிரதர்ஸ் 14 பீட்டர்ஸ் சாலை, சென்னை 600 014)
இன்னும் வரும்

One Comment on “நாட்டுக்கு உழைத்த நல்லவர்- சித்தரஞ்சன் தாஸ்”
Comments are closed.