
சித்தரஞ்சன் தாஸ்
- பெற்றோரும் சூழ்நிலையும் மத்திய கல்கத்தாவில், படலடாங்கா தெருவிலே புவன மோகன் தாஸ் என்ற வக்கீலும், அவருடைய மனைவி நிஸ்தாரிணி தேவியும் வசித்துவந்தார்கள். இருவருமே, இராஜா ராம்மோகன் ராய் நிறுவிய ‘பிர்ம சமாஜ’த்தைச் சேர்ந்தவர்கள். , கொள்கையில் உறுதியான நம்பிக்கை உடையவர்கள். 1870ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் நாள் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சித்தரஞ்சன் என்று பெயரிட்டு. அக்குழந்தையை அவர்கள் செல்லமாக வளர்த்துவந்தார்கள்.
புவன மோகன் தாஸ் வக்கீல் மட்டும் அல்ல; ஒரு பத்திரிகையாளர். பிர்ம சமாஜத்தில் அவர் ஒரு பிரமுகர். அதனுடைய கருத்துகளை வெளியிடும் ‘பங்கால் பிர்மோ பப்ளிக் ஒபீனியன்’ என்ற பத்திரிகைக்கு அவர் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். சிறுகச் சிறுக அவர் இப்பத்திரிகையில் அரசியல்பற்றியும் எழுதலானார். அவருடைய தீவிரமான போக்கைக் கண்டு பல பிர்ம சமாஜ நேயர்கள் அஞ்சி விலகிவிட்டனர். புவன மோகனர், தம்மால் சமாஜத்துக்கு இடையூறு வேண்டாம் என்று கருதிச் சொந்தத்தில் பப்ளிக் ஒபீனியன் என்னும் பெயருடன் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். ‘ தம் சொத்து முழுவதையும் இதனாலேயே அவர் இழக்க நேர்ந்தது. இந்த நிகழ்ச்சிகள் யாவும் சித்தரஞ்சனின் உள்ளத்தில் ஆழப் பதிந்தன.
புவன மோகன் அரசியலில் முற்போக்கான கருத்துக்கள் உடையவர் என்றாலும், சமூக, சமய சம்பந்தமான விஷயங்களில் அவர் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை. இவ்விஷயங்களில், அவருடைய தமையனார் துர்கா மோகன் தாஸ் இந்தப் பணிகளில் தலைமை பூண்டார்; அவர் மிகவும் முற்போக்கான சமூக சீர்திருத்தவாதி. பிர்ம சமாஜக் கொள்கைகளில் அவருக்கு உறுதியான நம்பிக்கை; வெறும் வாய்ச்சொல் வீரர் அல்லர். அவருடைய மூத்த பெண்ணுக்கும் கூச்பிகார் இளவரசருக்கும் மணம் புரிய முடிவாகி இருந்தது. பெண்ணுக்குப் பதினான்கு வயது நிரம்பவில்லை; பிர்ம சமாஜ விதிகளின்படி பதினான்கு வயதான பிறகுதான் பெண்களுக்கு மணம் செய்ய வேண்டும்; ஆகையால், துர்கா மோகன் பெரிய இடத்துச் சம்பந்தம் என்பதையும் பாராட்டாமல் பெண்ணின் கலியாணத்தை நிறுத்திவிட்டார். ஆனால், அக்காலத்தில் மிகப் பெரும் தலைவரான கேசவ சந்திர சென், அதே இளவரசருக்குப் பதினாலு வயதாகாத தம் புதல்வியை மணமுடித்துவிட்டார்; ‘பெரிய இடம்’ என்ற அசட்டு ஆசைதான் இதற்குக் காரணம். இந்த நிகழ்ச்சியால் துர்கா மோகன் சினம் கொண்டார்; இன்னும் சில நண்பர்களோடு சேர்ந்து அவரே ‘சாதாரண பிர்ம சமாஜ’த்தை நிறுவினார்; அல்லும் பகலும் அதற்காகவே உழைத்தார். அவருடைய சிற்றன்னை இளமைப் பருவத்தினர்; அவர் கைம்பெண் ஆகிவிட்டார்; அவருக்குத் துர்கா மோகனரே முன் நின்று மறுமணம் செய்து வைத்தார்; இதனால் வங்காளம் முழுவதுமே ஒரு சலசலப்பு ஏற்பட்டது; எதிர்ப்புகள் எழுந்தன; துர்கா மோகன் இவைகளை உறுதியாகச் சமாளித்தார். ‘கிரிமினல்’ வழக்குகளை நடத்துவதில் அவர் மிகவும் கெட்டிக் காரர். ஏராளமாக வழக்குகளும் இருந்தன; ஆயினும், இத்தகைய சீர்திருத்த வேலைகள் என்றால் அவர் முன்னிற்பார்.
தந்தையின் நாட்டுப்பற்றும், பெரிய தந்தையின் சீர்திருத்த மனப்பான்மையும் சித்தரஞ்சனை வளர்த்து வந்தன; அன்னை நிஸ்தாரிணி தேவியின் குணச்சிறப்பு அவருடைய மனப்பாங்கை ஒழுங்குபடுத்தியது. அந்த அம்மையார் இராஜா ராம்மோகன் ராயைப் பின்பற்றியவர்; ஆனால், சமூகத்திலும் வீட்டிலும் ஹிந்துக்களின் பழக்க வழக்கங்களை ஒட்டியே இருந்தார். அவர் பழங்காலத்துப் பெண்மணிகளைப் போன்று கடமை தவறாமல் அன்பும் இரக்கமும் காட்டும் அரிய பண்பு உடையவர். இக்குணாதிசயந்தானே குழந்தையை வளர்த்தது? சித்தரஞ்சனிடம் இந்தச் சிறந்த பண்புகள் குடிபுகுந்தன.
அக்காலத்துப் பிர்ம சமாஜிகள் வெள்ளைக்காரர்களின் பழக்கவழக்கங்களை விரும்பிப் பின்பற்றினார்கள்; இந்நாட்டின் பழக்கவழக்கம் ஒவ்வொன்றையும் அவர்கள் வெறுத்தார்கள். குடும்பத்தையும் உறவினரையும் அவர்கள் போற்றுவதில்லை. ஆனால், சித்தரஞ்சனின் பெற்றோர் அத்தகையவர்கள் அல்ல. மற்றவர்களோடு அவர்கள் அன்போடு உறவு பூண்டார்கள். இவ்வாறு, சித்தரஞ்சனின் மனப்பான்மையில் வங்காளத்தின் சிறப் பான அம்சங்கள் பங்கு பெற்றன.
சித்தரஞ்சனின் தந்தையார் பிர்ம சமாஜத்துக்காகக் கவிதை களும் பாட்டுகளும் எழுதுவது வழக்கம். சித்தரஞ்சன் கவியாகவும் இலக்கிய ஆசிரியராகவும் உருவானதற்கு இது ஒரு காரணம்.
அவர் பிறந்து வளர்ந்தபோது, வங்காளத்தில் கிளர்ச்சிகள் நிறைந்த காலம். அரசியலிலும், சமூகத்துறையிலும் பல மாறுதல்கள் நிகழ்ந்து வந்தன. மக்களிடையில் விழிப்பு ஏற்பட்டு வந்தது; வங்காளமெங்கும் பல கல்விச் சாலைகள், மக்களின் முயற்சியால் தோன்றின; பல செய்தித்தாள்கள் தொடங்கப்பட்டன. வெள்ளையரையும் கறுப்பரையும் பேதப்படுத்தி, இந்தியரை இழிவுபடுத்தும் இல்பர்ட் மசோதா’வை அரசாங்கம் அறிவித்தது; இதனால் வங்காளிகளுக்கிடையில் உணர்ச்சி வேகம் உண்டாயிற்று. அப்போது, சித்தரஞ்சனுக்கு வயது பன்னிரண்டு; இந்த மசோதா அவர் இளம் மனத்தையும் புண்படுத்தியது.
இவ்வாறு, குடும்பத்திலும் நாட்டிலும் இருந்த சூழ்நிலை சித்தரஞ்சன் தாஸை ஓர் அரசியல்வாதி ஆக்கியது; விடுதலை வீரர் ஆக்கியது.
(இப்புத்தக வெளியீட்டாளர் : பழனியப்பா பிரதர்ஸ், 14 பீட்டர்ஸ் சாலை, சென்னை 600 014)
இன்னும் வரும்

One Comment on “எம.வி.வெங்கட்ராம்/ நாட்டுக்கு உழைத்த நல்லவர்”
Comments are closed.