ரெஜினா சந்திரா/இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்

‘என்னம்மா இன்னைக்குத்தானே கடைசி?”
“ஆமாம்ப்பா”
நிதி ஆண்டு இறுதி என்பதால், மாதத் தொடக்கத்திலிருந்தே வேலை வாட்டியெடுத்த போதிலும், தினமும் காலந்தாழ்ந்து வீட்டிற்குச் செல்ல அது காரணமாயிருந்தது பூஜாவுக்கு ஆசுவாசமளித்தது. ஏனெனில், மத்திய அரசுத்துறை உயர் பதவியிலிருக்கும் அப்பா வெங்கடகிருஷ்ணனுடன் மாலை நேரங்களைக் கடத்துவது இப்போதெல்லாம் பெரும்பாடாக இருந்தது அவளுக்கு.
அன்று அவள் மும்பையிலுள்ளத் தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிப் பணியை நிறைவு செய்யும் போது இரவு மணி எட்டு. பல வணிக நிறுவனங்களின் சரணாலயமான அந்த ஏழு மாடிக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அலுவலகம். தரைத்தளத்தில் காலணி, ஆடை, அணிகலன், உணவு, புத்தகம், பரிசுப் பொருட்களுக்கெனப் பல கடைகள். அங்கிருந்த வட இந்தியத் துரித உணவகத்திலிருந்து பாவ் பாஜியின் மணம் மூக்கைத் துளைத்த போது தான் மாலை இரவாகிப் போயிருந்ததை உணர்ந்தாள் பூஜா.
போக்குவரத்து மேலாண்மை நிறுவனமொன்றில் சீனியர் அஸோசியேட். ஐந்தரை அடி உயரம். கோதுமை நிறம். கழுத்து, நடை அசைவுகளில் மயிலின் சாயல், கலகலப்பான பேச்சு, தெற்றுப் பல் சிரிப்பு. பார்த்தவுடன் மனதில் பதிந்து விடும் முகம். படிப்புக்கேற்ற பிடித்த வேலை. போதுமான ஊதியம். டீம் லஞ்ச், சனி இரவு டின்னர்கள், இலக்கியக் குழுக்கள், ‘எஃப் டி எஃப் எஸ்’களுக்கெனத் தனித்தனி நண்பர்கள் வட்டம் எனப் பலரும் ஏங்கும் வாழ்க்கை. மரவட்டை போன்ற புருவங்கள், பெரிய தொப்பை, எப்போதும் வெள்ளை சட்டை, நீளமாக வளர்ந்து வளைந்திருந்த இடது பெருவிரல் நகத்தில் சிகப்பு, கருப்பு என அடிக்கடி நகப்பூச்சை மாற்றும், இரட்டை அர்த்தத்தில் பேசும் அந்த மேலாளரைத் தவிர வேறு பிரச்சினை இல்லை.
கடந்த நான்கு ஆண்டுகளாக இதே வளாகத்துக்குள் வந்து செல்வதால், கண்ணாலேயே நோட்டம் விடுபவர்கள், ‘ஹலோ எப்படி இருக்கீங்க?’ என்று புன்னகைப்பவர்கள், ‘கல்யாணம் எப்போ?’ என்று உரிமையோடு கேட்பவர்களெனப் பலருக்கு, குறிப்பாக, இளைஞர்களுக்கு அவள் நன்றாகப் பரிச்சயம், எல்லாரையும் தெரிந்திருந்தாலும், யாருக்குப் புன்னகை போதும், யாருடன் பேசலாம், யாருடன் நெருங்கிப் பழகலாம் என்ற அதீத உள்ளுணர்வு அவளுக்கிருந்தது. எப்பொழுதும் மனிதர்களுடன் இருந்தாலும் ஏதோ ஒருவிதத் தனிமை அவளை ஆட்கொண்டிருந்தது.
அப்பா, தினமும் காலை ஐந்தரை மணிக்கு அலாரம் வைத்து அம்மாவை எழுப்புவார். அவர் தரும் காஃபியை அருந்திய பின் பிராண்டட் டிராக் சூட், ஷூவுடன் நடைபயிற்சி, இதற்காகப் பிரத்தியேகமாக ஏழெட்டு உடைகளும் நான்கு ஜோடி ஷூக்களும் வைத்திருந்தார். திரும்பியதும் செய்தித்தாளுடன் இரண்டாவது காஃபி. குளித்து பூஜை அறைக்குள் சில நிமிடங்கள். வந்ததும் மேசையில் தயாராக இருக்கும் சிற்றுண்டி. அடுத்தது அலுவலகம்.
இப்படியொரு இயந்திர வாழ்க்கைக்குள் அவர் வந்து பல வருடங்கள் ஆகியிருந்தன. அலுவலக வேலை நிமித்தமானத் திட்டமிடல்கள், கூட்டங்கள், வெளியூர்ப் பயணங்கள், அலைபேசி உரையாடல்கள், தயாரிப்புகளே அவரது நேரத்தை ஆக்கிரமித்திருந்தன.
கணிதம் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பட்டதாரி ஜானசி, கும்பகோணத்திலிருந்து பல கனவுகளுடன் வெங்கடகிருஷ்ணனை மணந்து 28 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தவர். திருமணத்திற்கு முன் சொன்னபடி வேலைக்குச் செல்ல அனுமதித்திருந்தால் இப்போது ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்திருப்பார்.
பூஜா பிறந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தபோது வேலை பற்றியப் பேச்சைத் தொடங்க, “நான் தான் நல்லா சம்பாதிக்கிறேனே. அதுவே போதும். நீ டீச்சர் ட்ரெய்னிங் தானே படிச்சிருக்க. புள்ளைய நல்லா படிக்க வை” என்ற பதில், லட்சக் கணக்கானவர்களுக்குப் பாடமெடுக்க வேண்டிய ஜானகியை, தினமும் மாலை, கையில் குச்சி, சாக்பீஸ், தோளில் துப்பட்டாவுடன் டீச்சர் வேடமிட்டு பாடம் நடத்தும் குட்டிப் பூஜாவுக்கு மாணவியாக்கியது. கூண்டுக்குள் வட்டமிடும் கிளிக்கு நிகரானது ஜானகியின் வாழ்க்கை. நாளடைவில் அதுவே பழகிப்போனது.
இப்போது, அகால வேளையில் பத்துப் பதினைந்து விருந்தாளிகள் வந்தால் கூட சமாளித்து விடக்கூடிய வச வசதிகள் நிறைந்த சென்னையின் பிராதனப் பகுதியில் கணவர் பெயரிலிருக்கும் மூன்று படுக்கையறைகள் கொண்ட விசாலமான வீடு ஜானகியின் பொறுப்பில். வரவுசெலவு பராமரிப்பு, அலங்கரிப்பு, சமையல், என எல்லாமே.
வரவேற்பறையில் இட்டாலியன் கார்ப்பெட், சுவர்களில் சட்டமிடப்பட்ட வண்ண ஓவியங்கள், வித்தியாசமான விரிப்புகள், நவீன வசதிகளுடன் சமையலறை, குளியலறைகள் எனப் பார்த்துப் பார்த்து வாங்கவும் வடிவமைக்கவும் ஜானகிக்குச் சுதந்தரமிருந்தது. இதோடல்லாமல், அவர் வளர்த்து வரும் விதவிதமான குரோட்டன்கள், மலர், கள்ளிச் செடி வகைகளும், விசேஷ நாட்களில் கருப்பொருளை வைத்து வீட்டை அலங்கரிப்பதும் புடவைக்கேற்ப தங்க, டிசைனர் நகைகளை நேர்த்தியாக அணிவதும் அக்கம்பக்கத்தி லிருப்பவர்கள் நண்பர்களிடையே அவருக்கென தனிப்பெயரை வாங்கித் தந்திருந்தது. மூவருக்கும் அவரவர் வேலைகள் எனப் பரபரப்பாசி நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.
“எனக்கு டின்னர் வேண்டாம்.”
“எத்தன டிரஸ் வச்சிருக்க. ஏண்டி போட்டதையே போட்டுட்டுப் போற. கழுத்துல காதுல போட்டுப் பழகு.”
“இன்னைக்கு ஈவ்னிங் ஃப்ரண்ட்ஸோட சினிமா போறேன்”
“ஏங்க, இன்னிக்கு கேஸ் புக் பண்ணிடுங்க” என, காலை நேரங்களில் முகத்தைப் பார்த்துப் பேச அவசியமில்லாத மேம்போக்கான உரையாடல்கள் மட்டுமே இவர்களுக்குள். அத்தியாவசியத் தேவைக்கு மேல் பணம் புழங்கும் அக்மார்க் மேல் நடுத்தர வர்க்கக் குடும்பம்.
தான் ஓய்வு பெற ஒரு வருடம் இருந்தபோது, வெங்கட கிருஷ்ணனுக்கு குடும்பத்தின் மீது கவனம் திரும்பியது. குறிப்பாகச் சொன்னால், ஓய்வு பெறுவதற்குள் மகளுக்குத் திருமணம் முடித்து தனது மதிப்பை ஊரார் மத்தியில் நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கம்.
இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருந்தவர் சட்டென திருமண வேலைகளில் இறங்கினார். வரன் பார்க்க ஆரம்பித்தார். கள நிலவரம், தங்கத்தின் விலை, மாப்பிள்ளை வீட்டாரின் எதிர்பார்ப்பு, நிதித் தேவை எனக் கல்யாண மார்க்கெட்டை அவர் புரிந்து கொள்வதற்குள் இரண்டொரு மாதங்கள் ஓடிவிட்டன.
தேவைக்கு மட்டும் பேசிக் கொண்டிருந்தவர் அடிக்கடிப் பேச ஆரம்பித்தார். மாலைகளில் முன் கூட்டியே வீடு திரும்பினார். பூஜாவின் மாலை நேரங்கள் அமைதியிழக்கத் தொடங்கின.
“நான் ரிட்டையர் ஆகறதுக்குள்ள உனக்குக் கல்யாணம் பண்ணாத்தான் கௌரவம்”
“அந்த பெங்களூர் பையனப் பாக்கலாமா? நீ வேலைக்குக் போக வேண்டான்னு சொல்றான்”
“எங்களப் பத்திக் கவலைப் படாதே. அந்த யுஎஸ் பையனக் சுட்டிக்கோ”
“இன்னும் எத்தனை நாள் கல்யாணத்தத் தள்ளிப் போடமுடியும். சட்டுனு முடிவெடு. வயசு 25 ஆகுதில்ல” எனவீட்டுக்குள் நுழைந்ததிலிருந்து சரமாரியாக வந்து விழும் கல்யாணம் குறித்த புலம்பல்களும் அறிவுரைகளும் கேள்விகளும் அவளுக்கு மனப்பாடம்.
இறுதியாக, “மனசுல யாரையாவது நினைச்சுட்டிருந்தா சொல்லிடு” என முடிப்பார்.
பூஜா எந்தப் பதிலும் இதுவரைச் சொன்னதில்லை. அம்மா திருமணத்தைப் பற்றி கேட்ட பொழுதெல்லாம் கூட மழுப்பலாகவே பதில் சொல்லி வந்திருந்தாள். ஆனால், நான்கு நாட்களுக்கு முன் அவள் தன் முடிவைத் தெரிவித்த போது, அதிர்ந்து போனார்.
நாளாக நாளாக அழுத்தம் அதிகரித்தது. தாமதித்தால், வீணாக அப்பாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்ற நிலைமை வந்திருந்தது.
எல்லாவற்றுக்கும் இன்று முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். ஆரம்பத்திலேயே முடிவைச் சொல்லி விட்டால் பல சங்கடங்களைத் தவிர்க்கலாம். இந்த விஷயத்தில் தன் மனம் எட்டியிருந்த உறுதியை அறிவிக்கும் நேரம் நெருங்கிவிட்டதென அவள் உணர்ந்தாள். தான் இதுவரை சந்தித்த ஆண்கள் வாழ்க்கையின் மீது ஏற்படுத்திய கோபம் அது. திருமணமாகி எதிர்பாராத பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தனது தோழிகள் மூவரது வாழ்க்கை ஏற்படுத்திய அவநம்பிக்கையின் முடிவு அது.
நாள் முழுதும் உழைத்த சோர்ந்த முகத்துடன் பேருந்து நிலையங்களில் நின்று கொண்டும், வாகனங்களில் விரைந்து கொண்டும் இரவு வாழ்க்கைக்குத் தயாரகிக் கொண்டிருந்த பெருநகரத்தின் இரைச்சல்களினூடே, இந்த நினைவுகள் மனதில் அசைவாடிக் கொண்டிருந்தாலும், கால்கள் சரியாக அருகிலிருந்த மெட்ரோ நிலையத்திற்குள் பூஜாவைக் கொண்டு சேர்க்கின்றன. சில நிமிடங்களில் இரயில் வர. அவள் ஏறும் பெட்டியில் ஓர் இருக்கை காலியாக இருக்கிறது. அமர்கிறாள் எதிரில் ஓர் இளைஞன். முகவாய்க்கட்டில் மட்டும் குறுந்தாடி லேசான கோடு போல் காதுகள் வரை செல்லும் முடி, அந்தக் குறுந்தாடியுடன் சேரும் மீசை அவன் முக வெட்டுக்குப் பொருந்தியிருக்கிறது. கையிலிருக்கும் புத்தகத்தில் மூழ்கியிருக்கிறான்.
தான் உட்காருவதற்காகவே இறங்குவது போல் பாசாங்கு செய்திருக்கிறான் என்பது பூஜாவுக்கு விளங்குகிறது. சிரித்துக் கொள்கிறாள். இதைக் கவனித்த அந்தக் கர்ப்பிணிப் பெண் முகத்திலும் புன்முறுவல்.
அடுத்த நிறுத்தத்தில் பெண் ஒருவர் ஏறுகிறார். இருக்கை ஏதும் இல்லாததால் ஓரமாகச் சென்று கம்பியைப் பிடித்து நிற்கிறார். இரயில் புறப்படுகிறது.
இரண்டொரு நொடிகளுக்குப் பின் அந்தப் பெண் கர்ப்பிணியோ எனப் பூஜாவுக்குச் சந்தேகம். வயிறு பெரியதாக இல்லை. கர்ப்பிணி என அவளும் காட்டிக் கொள்ள முயலவில்லை. ஆனால், இரண்டு கைகளிலும் இருக்கும் கண்ணாடி வளையல்கள் காட்டிக் அடுக்கடுக்கான கொடுக்கின்றன.
பூஜா உட்கார இடம் கொடுத்து எழுந்து நிற்கிறாள். அவளும் அமர்கிறாள். இவர்களது அசைவினால் அனிச்சையாகத் தலைநிமிர்ந்த அந்த இளைஞனது கண்கள் பூஜாவின் கண்களைச் சந்தித்த வேளையில் அவன் நிலைமையை உணர்ந்து, தன் இருக்கையில் அமர பூஜாவை அழைத்தவாறு எழ, கையிலிருந்த புத்தகம் கீழே விழுகிறது. அதை எடுத்து அவனிடம் கொடுக்கும்போது அது அவளுக்குப் பிடித்த எழுத்தாளரின் நாவல் என்பதைக் கவனித்தவள், புத்தகத்தைக் கொடுத்தபடி “பரவாயில்லை, வேண்டாம்” என்று சைகை காட்டி, நின்றவாறே பயணம் செய்கிறாள். அவன் தன் இருக்கையிலேயே மீண்டும் அமர்கிறான். இதற்கிடையில் அந்நாவலின் நாயகியைப் பற்றிய அந்த இளைஞனின் கருத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆவல், ஒரு நொடி பூஜாவுக்குள் வந்து போகிறது.
இரயில் சென்று கொண்டிருக்கையில், அமிதாப் பச்சனின் காந்தக் குரலில் கொரோனா விழிப்புணர்வுச் செய்தி ஒலிபரப்பாகி ஓய்கிறது. அந்த இளைஞன் கண் கொட்டாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பூஜா உணர்கிறாள் அந்தப் பார்வை அவளிடம் ஏதோ சொல்ல விழைவது போல் இருக்கிறது.
அடுத்த நிறுத்தம் நெருங்க, அவன் எழுந்து கதவருகே செல்கிறான். பூஜா காலியான அவனது இருக்கையில் அமர்கிறாள். ஆனால் நிறுத்தம் வந்தும் அவன் இறங்கவில்லை இரயில் நின்று கிளம்புகிறது. அவன் வெளிப்புறம் பார்த்தவாறே. பயணிக்கிறான்.
தான் உட்காருவதற்காகவே இறங்குவது போல் பாசாங்கு செய்திருக்கிறான் என்பது பூஜாவுக்கு விளங்குகிறது. சிரித்துக் கொள்கிறாள். இதைக் கவனித்த அந்தக் கர்ப்பிணிப் பெண் முகத்திலும் புன்முறுவல். பயணம் தொடர்கிறது. பின்பக்கத்தைக் காட்டிக் கொண்டிருந்தவனை இப்போது பூஜா கூர்ந்து கவனிக்கிறாள்.
வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் வெள்ளை நிறச் சட்டையும் ஸ்கெச்சர்ஸ் ஷூவும் அணிந்திருக்கிறான். கண்டிஷனர் பயன்படுத்தி நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டத் தலைமுடி, தோளில் லேப்டாப் பை. தற்காலத்து நகர இளைஞன். காதில் ஹெட் ஃபோனும் கையில் அலைபேசியும் இல்லாதது அவனை மற்ற இளைஞர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது.
அவன் தொடர்ந்து வெளிப்புறமாக கொண்டிருப்பதில் ஒரு செயற்கைத்தனம் இருக்கிறது. என்றாலும், தான் கர்ப்பிணிப் பெண்ணுக்குச் செய்த உதவியைச் சாதுர்யமாகத் தனதாக்கிக் கொண்ட அவன் ஆகச் சிறந்த அழகனாய்த் தெரிகிறான் பூஜாவுக்கு’. அவன் வீட்டுப் பெண்கள் அதிர்ஷடசாலிகள் என நினைக்கிறாள்.
சில நிறுத்தங்கள் கடந்த பிறகு, அவனும் அந்தக் கர்ப்பிணியும் ஒருவரையடுத்து ஒருவர் இறங்கிச் செல்கின்றனர்.
வீட்டிற்கு வந்து உடைமாற்றித் தேநீர் அருந்தி பூஜா வரவேற்பறையில் அமர்ந்ததும், அதற்காகவே காத்திருந்தது போல, சில நாட்களாகக் கல்யாணப் பேச்சை எடுத்திராத அப்பா,
“இனிமேலும் லேட் பண்ண முடியாது. அந்தப் பெங்களூர் பையன் மற்றும் யுஎஸ் பையனின் ஃபோட்டோ, விவரங்களை உனக்கு ஃபார்வேர்ட் பண்றேன். யார முதல்ல பாக்கலான்னு சொல்லு. வேலையை இப்ப ஆரம்பிச்சாத்தான் ரிட்டையர்மெண்ட்டுக்குள்ள கல்யாணத்தை முடிக்க முடியும்” என்று அலுவலகத்தில் டெட்லைன் அலர்ட் கொடுப்பது போல் படபடவெனப் பேசுகிறார்.
திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கையே இல்லை என்ற அவளது முடிவை எப்படிச் சொல்லப் போகிறாள் என்று கலக்கத்துடன் ஜானகி கவனித்துக் கொண்டிருக்க, சற்றும் எதிர்பாராத விதமாகப் பூஜா, “எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்கப்பா” என்கிறாள். ரிக்டர் அளவுகோலில் இதுவரை பதிவாகாத அளவுப் பெரிய பூகம்பம் வெடிக்கப் போகிறதென எதிர்பார்த்த ஜானகிக்கு ஒரு புதிர் வெடித்ததை நம்ப முடியவில்லை.
“சரி. நல்லா யோசிச்சுப் பதில் சொல்லு. ஒரு வாரம் அல்லது பத்து நாள் டைம் எடுத்துக்கோ. வேண்டான்னாலும் உடனே சொல்லிடு. அடுத்ததைப் பார்க்கலாம்” என்கிறார் வெங்கடகிருஷ்ணன்.
காலையில், அம்மா வந்து உலுக்கி எழுப்புவதற்குள் தூக்கம் கலைகிறது பூஜாவுக்கு. அலாரம், அவள் எழுந்த பிறகே ஒலிக்கத் தொடங்குகிறது. அதன் ‘ஸ்பிரிங்’ இசையை படுக்கையையிலிருந்தபடியே சிறிது நேரம் ரசித்த பின் நிறுத்துகிறாள். கதிரவனின் ஒளிக் கீற்றுகள் பூமியைத் தீண்டியிராத அந்த பங்குனி மாத நிசப்தத்தில் கூ… கூ…வென ஒரு குயில் ஏக்கக் குரல் எழுப்ப, மறுதிசையிலிருந்து கூ… கூ.. வென வரும் பதிலின் பொருள் அவளுக்குக் புரிகிறது. ‘சரக்’ ‘சரக்’ எனத் தெரு சுத்தப்படுத்தப்படும் சத்தம், காக்கைகளின் கரைசல், சிட்டுக் குருவியின் ‘கீச்’ ‘கீச்’ எனப் பல ஒலிகள் இன்று அவளது கவனத்தை ஈர்க்கின்றன.
குளிப்பதற்கு முன், சிற்றுண்டிக்காக நறுக்கிவைக்கப்பட்டிருந்தப் பப்பாளித் துண்டைக் கூழாக்கி, முகத்தில் அப்புகிறாள். அடுத்து வரும் நிகழ்வு ஒன்றிற்காக வாங்கி வைத்திருந்த மஞ்சள் சுடிதாரை அணிகிறாள். காதிலிருக்கும் மஞ்சள் தோடு அவள் அணிவதற்காகவே காத்திருந்தது போல் மகிழ்ந்து மின்னுகிறது. புறப்படுகிறாள். கதவு வரை சென்றவள் மீண்டும் அறைக்குள் வந்து, பப்பாளிக் கூழ் தந்தக் கூடுதல் பளபளப்பை ரசித்தவாறே புன்முறுவலுடன், ஐ-லைனர் இட்டு, நெற்றியில் சிறு பொட்டிட்டுக் கொள்கிறாள். அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிசயங்களின் வியப்பை வெளிக்காட்டாமல் கவனித்துக் கொண்டிருக்கிறாள் ஜானகி.
பூஜாவின் வழக்கமான காலை மெட்ரோ பயணம் தொடங்குகிறது. அன்று அவள் மனது இனம் புரியாத உணர்வுகளில் திளைத்திருக்கிறது. இரயில் ஒவ்வொரு நிறுத்தமாகக் கடந்து செல்கிறது. ஒவ்வொன்றுக்கும் இடையில் இயல்பைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்வது போல் தோன்றுகிறது. இதயம் படபடக்கிறது. வியர்க்கிறது. இறுதியில், நேற்று மாலை அந்த இளைஞன் இறங்கிய நிறுத்தம் நெருங்க, நிறுத்தத்தின் பெயரைக் கூறி “இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்” என்ற அறிவிப்பு ஒலிக்க, கால்கள் தானாக எழுந்து கதவருகே செல்கின்றன. கதவு திறந்ததும் அவளது கண்கள் அப்பேரழகனை ஆவலாய்த் தேடுகின்றன.