தொகுப்பு ஸ்ரீதர் சாமா /ஆன்மிகத் தகவல்

JUST WAIT

காஞ்சி மகா பெரியவரைப் பார்க்க இரு ஜெர்மனியப் பெண்கள் (வயது 25 இருக்கலாம்) வந்தனர் .

ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி சாஸ்திரி (பெரியவர் மடத்து ஆட்கள் யாரும் அவரை வெறுமனே வேதபுரி என்று பெயரிட்டு அழைக்கக்கூடாது என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார் ) 60 ஆண்டுகளாக மகா ஸ்வாமிகளிடம் சேவை செய்பவர் . கொஞ்சம் அவசரப்படுகிற வேறொரு பார்ட்டியிடம் அந்த ஜெர்மனி பெண்களைச் சுட்டிக் காட்டி சொன்னார். “நீங்க ஒரு மணி நேரம் பெரியவளுக்காக காத்திருப்பதையே பெரிசா சொல்றேள். இதோ இவா அன்ன ஆகாரம் பத்திக் கவலைப் படாம மூணு நாளா காத்திருக்கா”
“எதுக்காம் ?”
“அவாளுக்கு ஒரு கேள்வி இருக்காம் . அமெரிக்கன் சர்வ கலாசாலையிலே நம்ம வேத சாஸ்திரம் /வேதாந்தம் பி எச் டி படிச்சு முடிச்சுட்டாளாம். இது போறுமா , மேல படிக்கணுமான்னு கேக்க வந்திருக்காளாம். பெரியவாவை மூணு நாள் முன்னால பார்த்தப்ப ‘கொஞ்சம் பொறுங்கோ’ன்னு ஆங்கிலத்துல சொன்னேளாம். அதான் வேத வாக்குன்னு பழியா இங்கேயே உட்கார்ந்திருக்கா.”
“சாப்பாடு தூக்கம்லாம் ?”
“கிடைக்கற பழம், பால், த்யானம், தூண்லயே சாஞ்சு குட்டி தூக்கம் , திரும்ப த்யானம் ….”
மூன்று நாட்கள் பொறுத்திருந்த ப்ரஹ்மஸ்ரீ சிஷ்யருக்குப் பொறுக்க முடியலை . அடுத்த முறை கிடைத்த வாய்ப்பில் பெரியவரிடம் நினைவுறுத்தினார் .
“அந்த ரெண்டு வெளிநாட்டுக்காராளும் இங்கேயே தான் வெயிட் பண்ணறா . ஜஸ்ட் வெயிட்டுன்னு சொன்னேளே ….”
ஓ! நாராயணா . மறந்தே போச்சு . எங்கே அவா ? இவா தானா ? ஏதோ கேட்க வந்தேளே … சொல்லுங்கோ .”
சங்கரரின் இரு கண்கள் வெளிநாட்டு நான்கு கண்களை அன்புடன் உற்றுப் பார்த்தன . ஜெர்மனி அங்கே உருகி வழிந்து ஓடியது .
“நத்திங் ….”
“பெரியவர் மற்றவர்களைப் பார்த்து அளவளாவ ஆரம்பித்தார் . ப்ரஹ்மஸ்ரீ “ஒண்ணும் கேள்வியே இல்லையோ ?” என்பது மாதிரி அந்த இருவரையும் பார்த்தார் .
” சாரி . உங்களைத் தொந்தரவு பண்ணிட்டோம். பி ஹெச் டி இல்லை. நாங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்லை .” மகானின் மந்திரப் பார்வையிலிருந்து இன்னும் முழுதாக மீளாத ஜெர்மன் பெண்கள் சொன்னார்கள் . “ஹோ . ஹி இஸ் ரியலி கிரேட் “