
சவீதா எழுதிய கதையை முன் வைத்து
கானகத்தில் காட்டில் இருக்கக்கூடிய மலர், நாட்டில் இருப்பதல்ல .
காட்டில் இருக்கும் மலர் தனிப்பட்டது. அதுவும் வீரியத் தன்மை கொண்டதாகவே இருக்கும். நாட்டின் மலர்கள் மேல் ஆர்வம் இழந்தவர்கள் காட்டின் மலர்களை நாடுவார்கள். இப்படி காட்டு மலர் போன்ற வீரியத் தன்மை கொண்ட ஒரு பெண்தான் கதாநாயகி மஞ்சு.
திருமணமான ஜீவாவுடன் உறவில் இருக்கிறாள்.
சீரற்ற உறவு. மஞ்சுவுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது . ஜீவாவுடனான தொடர்பில் குழந்தை கூடாது என்ற விதி இருப்பதும் கதை சுட்டிக்காட்டுகிறது.
பாலியல் உறவின் தேவை இருவரையும் பிணைத்திருக்கிறது. காட்டு விலங்குகள் போன்ற வீரிய உறவு கொள்வதில் நாட்டம் கொண்டவர்களாக இருவரும் இருக்கிறார்கள்.
அவனுக்கு அவள் மீது கடுமையான சந்தேகம். அவள் அலைபேசியை ஆராய்வதே அவன் வேலை. அவள் தன் புகைப்படத்தை எந்தச் செயலியிலும் பதிவிடக்கூடாது என வலியுறுத்துபவன். அதில் ஏற்படும் முரணில் அவளை பாலியல் தொழிலாளி என்ற கொச்சை சொல்லால் அவளைத் தரப்படுத்துகிறான். அதில் ஏற்படும் முரண்பாடும் உடல் உறவால் தீர்கிறது.
அவன் மனைவி அவனைக் கண்காணிக்கிறாள். குடும்பத்தின் பொருளாதார சுமைதாங்கியாக இருப்பவனுக்குக் கதாநாயகிதான் பாலியல் விடுதலை அளிப்பவளாகிறாள்.
திருமணத்தை மீறிய உறவு பற்றி வெளிப்படையாகப் பேசும் கதை.
திருமணத்தை மீறிய உறவு பற்றி அணுக தமிழில் இருக்கும் பின்புலம் எத்தகையது என்பதைப் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தைப் பார்க்கலாம்.
பாலியல் வாழ்வு அறம் சார்ந்ததாக ஒழுக்கம் சார்ந்ததாக விதிக்கப்பட்டதைத்தான் தமிழின் மரபார்ந்த சிந்தனை கட்டமைத்திருக்கிறது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், அறநூல்கள், திருக்குறள் போன்ற அனைத்து இலக்கியங்களும் பாலியல் ஒழுக்கத்தை வலியுறுத்துபவைதான்.
இராமாயணம் ஆணுக்கான ஒழுக்கத்தை ராமன் பாத்திரத்தின் மூலம் வலியுறுத்துகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை பெண்ணுக்கான ஒழுக்கத்தை கண்ணகி, மணிமேகலை மூலம் வலியுறுத்துகின்றன.
ஆண் ஒழுக்க சீலனாக இருந்தால் இறைவனுக்கு நிகராகிறான்.
பெண் ஒழுக்க சீலியாக இருந்தால் தெய்வமாகிறாள். பெண்ணுக்கான ஒழுக்கத்தைத் தமிழ் இலக்கியங்கள் முன் வைத்ததற்குக் காரணம் மனித மறுஉற்பத்தி தாறுமாறாகிவிடும் என்பதால்தான்.
ஆனால் அத்தகைய ஒழுக்கம் குறித்த மாறுபாடும் உதாசினமும் தமிழ் மரபில் பண்பாட்டில் எப்படி உருவானது? இந்தக் கேள்வியை அழுத்தமாகக் கேட்க வேண்டிய நிலைக்கு இந்தக் கதை தள்ளுகிறது.
ஏனெனில் அறம் பற்றிய கருத்து இந்தக் கதையின் ஆண், பெண் இரு பாத்திரங்களுக்குள்ளும் இல்லை.
பாலியல் மீதான விருப்பத்தை முன் வைத்த உடல்களாக மட்டுமே இரு பாத்திரங்களும் உள்ளன. பெண் பாத்திரமான மஞ்சு ஒரு செயலியில் தன் புகைப்படத்தைப் பதிவிட்டால் கூட அச்சமடைந்துவிடும் ஆண் பாத்திரமாக ஜீவா உள்ளது. ஜமாலன் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். பெண் எனும் பேரச்சம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை ஆணால் பெண்ணின் தேவைகளை குறிப்பாக பாலியல் தேவைகளை நிறைவு செய்ய முடியாது. அப்படி நிறைவு செய்ய முடியாத இடத்தில் பெண்ணை தெய்வமாக உயர்த்துவதும் பாலியல் தொழிலாளியாகத் தாழ்த்துவதும் நடக்கிறது என்கிறார். இந்தக் கதையில் அந்த ஆண் பாத்திரத்தின் கண்களில் பயம் தெரிந்ததைக் கதை பதிவு செய்கிறது.
எனவே, பாலியல் மீதான கட்டுப்பாடு அறத்தினால் சாத்தியமில்லை;
ஒழுக்கத்தினால் சாத்தியமில்லை ; மதத்தினால் சாத்தியமில்லை.
உடல் விருப்பம் தன்னிச்சையானது. விலங்கின் வாழ்வைப் போலிருப்பது என்பது போன்ற கருத்துகளை உருவாக்கிக் கொள்ள இந்தக் கதை வழிவகுக்கிறது..
விருப்பம் மட்டுமே வாழ்வின் இலக்காகுமா ? உடல் மீதான சுயக் கட்டுப்பாடு தேவையா? துறவு வாழ்வுக்கான வலியுறுத்தல் வேண்டாம்,
ஆனால் உடல் எனும் எந்திரம் தாறுமாறாக ஓடலாமா
ஒழுக்கம் என்பது ஓர் உடன்படிக்கை . அதில் மீறல் சாத்தியமா?
கள்ள உறவிலும் ஒழுக்கத்திற்கான விதிகள் வந்துவிடுகின்றன என்பதுதான் சமூக செயலிகளில் படம் பதிவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு. படம் பதிவிட்டதால் அவள் வேறு ஆண் நண்பர்களைத் தேடக்கூடும் என்ற அச்சம் ஆணுக்கு ஏற்படுகிறது.
குடும்பம் எனும் நிறுவனத்தின் தோல்வி குறித்து அழுத்தமாகச் சொல்கிறது கதை. குடும்பம் என்பது வேறு; பாலியல் மீறல் என்பது வேறு. குடும்பத்தின் உறுப்பினராக மனைவி, கணவன் இருப்பதற்கும் பாலியல் விருப்பத்தின் பகிர்வாளர்களாக இருப்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதுதான் இந்தக் கதை சொல்லும் செய்தி.
பாலியல் வரலாற்றிற்கும் குடும்ப வரலாற்றிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பாலியல் மீதான ஒழுக்க வரையறையை இனிமேலும் குடும்பங்கள் நிர்வகிக்க முடியாது. குடும்பங்கள் பாலியலை ஒடுக்கும் எந்திரங்களாக மாறிவிட்டதன் விளைவை இந்தக் கதை காட்டுகிறது. பாலியல் இன்பத்தைப் பொறுத்தவரை கதையில் வரும் கதாநாயகி சுதந்திரமாக அணுகுகிறாள். ஆனால் ஆண் பாத்திரம் கள்ளத்தனமான இன்பத்தை அனுபவிக்கிறான்.
பாலியல் மனித மறுஉற்பத்திக்கானதாக குடும்பம் வலியுறுத்துவதால் அதன் இன்பத்தை கள்ள உறவில் தேடவேண்டிய நிலைக்குக் குடும்ப உறுப்பினர்கள் தள்ளப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் இந்தக் கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றுக்கும் மேலான உடல்களை அடைதல் என்பது தண்டனைக்குரிய குற்றமாக ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் விதி. அதை மீறுதலே பாலியல் இன்பத்தைக் கொடுத்துவிடுகிறது.
மஞ்சுவின் கொலுசு சத்தத்தை வைத்து அவன் மனைவி அவனது மீறலைக் கண்டுபிடிக்கிறாள் என்பது குடும்பத்தின் ஒழுக்க விதிகள் தொடர்வதை கதை பதிவு செய்கிறது. தனிமனித ஒழுக்கமாக இதுவரை சமூகம் சுட்டிக்காட்டியவை காலாவதியாகிவிட்டன.
உளவியல் ரீதியாக இயல் உலகில் இது போன்ற கள்ளத்தனங்கள் நடந்தேறிக் கொண்டுதான் உள்ளன. ஆனால் குடும்ப ஒடுக்குதல் மூலம் அவை நடைமுறையில் அனுபவிக்கப்படுவதில்லை. அத்தகைய ஒரு கள்ளத் தொடர்பு எப்படிப்பட்ட இயங்குமுறைகளைக் கொண்டிருக்கும் என்பதை இந்தக் கதை மிகவும் விரிவாகக் காட்டியிருக்கிறது.
இது போன்ற கள்ளத்தனங்களே நடைமுறையில் இல்லை, அது பற்றிப் பேசுவதைத் தவிர்த்தல் அல்லது அது விலக்கடைந்த கருத்து என்ற அணுகுமுறை குடும்பத்தின் உடைதலுக்கான அடிப்படையை உருவாக்கிவிடும் என்பதுதான் இந்தக் கதை சுட்டிக்காட்டும் விளைவாக உள்ளது. கள்ளத்தனத்துடன் பாலியல் மீறல் செய்வதன் மூலம் ஒழுக்கம் கட்டிக்காக்கப்படும் என்ற சமூகத்தின் மீமெய் கனவைத் தட்டி எழுப்புகிறது கதை.
