சோ.சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. காணாமற்போன ஓடு

‘அடுத்தாற்போல் சிதம்பரத்தில் என்ன பார்க்கவேண்டும்?” என்று கேட்டார் சம்பந்தம்பிள்ளை. “சிதம்பரத்தைப் பொறுத்த வரையில் நாட்கணக்காகத் தங்கியிருந்தாலும் எல்லாவற்றையும் பார்த்துவிட முடியாது. ஆனால் நாங்கள் வந்த நோக்கத்துக்கு வேண்டிய இடங்களையும் அவற்றுடன் தொடர்புள்ள ஐதிகங் களையும்தான் முக்கியமாக நாங்கள் கவனிக்க வேண்டியிருக்கிறது. திருநீலகண்ட நாயனார் இந்தத் தில்லையைச் சேர்ந்தவர்தானே?” என்று கேட்டோம். “அவர் சம்பந்தப்பட்ட தலம் திருப்புலீச்சரம், சிதம்பரம் கோயிலுக்கு மேற்கிலிருக்கிறது. போய்ப் பார்க்கலாம் வாருங்கள்” என்று சொல்லி சம்பந்தம்பிள்ளை எங்களை அங்கே அழைத்துச் சென்றார்.
திருநீலகண்ட நாயனார் கதை தமிழ் நாட்டில் பலருக்கு நன்கு தெரிந்த கதை. மண்பாண்டம் செய்து விற்கும் குயவ சாதியைச் சேர்ந்தவர் திருநீலகண்டர். இறைவனிடத்திலே நிரம்பிய பக்தி கொண்டவர். சிவபெருமானுக்குக் கண்டத்திலே நீலம் இருப்பதால் நீலகண்டன் என்ற பெயர் வந்தது. அந்தப் பெயரையே கொண்ட நமது அடியாரும் சீல வாழ்க்கை நடத்தி வந்தார். இளம் வயதினரான இவரும் இவர் மனைவியும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்தனர். ஒரு நாள் ஏதோ விதி வசத்தால் இவர் ஒரு தாசி வீட்டுக்குப் போய்த் திரும்பியதும், மனைவி அதனைத் தெரிந்து கொண்டு, கணவனின் உடலைத் தீண்ட மறுத்துவிட்டார். திருநீல கண்டர் எவ்வளவோ முயன்றும் மனைவி இடம் கொடாமல் திருநீல கண்டத்தின் மேல் ஆணையிட்டு, மறுத்துவிட்டார். இறைவன் ஆணைக்குக் கட்டுப்பட்ட திருநீலகண்டரும் சரி என்று அன்று தொட்டு மனைவியையோ அல்லது வேறு பெண்ணையோ உடலால் மாத்திரமல்ல, மனத்தாலும் தீண்டாமல் இருந்து விட்டார். கணவ னுக்கும் மனைவிக்கும் இந்த ஒரு விஷயத்தைத் தவிர மற்றும் இல்வாழ்க்கை எவ்வித பேதமும் இல்லாமல் நடந்துவந்தது.


இவர்களின் உறுதியையும் உடலுறவற்ற நிலையையும் ஊரவர்கள் அறியாமல் நடந்து கொண்டதுதான் இவர்களின் உயர்வுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. வருடங்கள் பல சென்றன. இவர்கள் இளமைப் பருவம் கழிந்து முதுமையேற்பட்டது. அப்படியும் அவர்கள் விரதம் தடைபடவில்லை. ஒரு நாள் இறைவனே இந்தத் தம்பதியைச் சோதிக்க வந்துவிட்டார்.
திருநீலகண்டர் பானை முதலிய பாத்திரங்களை வனைந்து கொடுப்பதோடு சிவனடியார்களுக்குத் திருவோடு செய்துகொடுத்தும் வந்தவர். ஒரு நாள் சிவபெருமான் ஒரு காபாலிக சந்நியாசி வேடத்தில் கையில் ஒரு திருவோட்டுடன் வந்து, திருநீலகண்டரைப் பார்த்து, “பக்தா! இந்தத் திருவோட்டைக் கொஞ்சநாள் பத்திரமாக வைத்திருந்து திருப்பிக் கொடு. நான் வேறோர் ஊருக்குப் போய் விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்றார். நீலகண்டரும், “அப்படியே ஆகட்டும் சுவாமி” என்று சொல்லி காபாலிகர் கொடுத்த ஓட்டை வாங்கித் தம் வீட்டில் பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தார்.
சில நாள் சென்றபின் காபாலிகர் வந்தார். நீலகண்டரிடம் தாம் கொடுத்து வைத்திருந்த ஓட்டைக் கேட்டார். திருநீலகண்டர் தாம் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் பார்த்தால் ஓட்டைக் காணோம்! மனைவியாரைக் கேட்டார். அவருக்கும் தெரியவில்லை. ஓடோ மாயமாய் மறைந்துவிட்டது! காபாலிகரின் திருவிளையாடல் களில் இதுவுமொன்று என்பதையறியாத திருநீலகண்டர் திகைத்து நின்றார். காபாலிகரோ தமது ஓட்டைத் தாவென்று பிடிவாதம் பிடிக்கிறார். திருநீலகண்டர் சமாதானம் சொல்லி, “சுவாமி, ஏதோ நடந்தது நடந்து விட்டது. எங்கு தேடியும் அந்த ஓடு அகப்படவில்லை. அதற்குப் பதிலாக நான் புதிதாகவே ஒரு சிறந்த திருவோடு தயாரித்துத் தருகிறேன். பொறுத்தருள்க” என்றார். காபாலிக சந்நியாசியோ வெகுண்டெழுந்தார். “நான் கொடுத்த ஓடு சாமானிய ஓடென்று நினைத்துக் கொண்டாயா? நீ புதிய ஓடல்ல, பொன்னா லிழைத்த ஓடு தந்தாலும் எனது ஓட்டுக்கு இணையாகாது! என் திருவோட்டையே நான் கேட்கிறேன். உன்னிடத்தில் நான் வைத்த அடைக்கலப் பொருளை அபகரித்து விட்டாய்! நீ திருடன்!” என்று குற்றம் சுமத்தினார். திருநீலகண்டர், “சிவ! சிவ! நான் திருடவில்லை என்பதை எப்படித் தங்களுக்குத் தெரிவிப்பேன்,” என்று வருந்தவும், காபாலிகர், “அப்படியானால் உன் புத்திரனைக் கையில் பிடித்துக் கொண்டு குளத்திலே மூழ்கி, நான் திருடவில்லை என்று சத்தியம் பண்ணிக் கொடு” என்றார். நீலகண்டர், “அப்படிச் சத்தியம் செய்வதற்கு எனக்குப் புத்திரன் இல்லையே சுவாமி” என்றார். “அப்படியானால் உன் மனைவியைக் கைபிடித்து முழுகிச் சத்தியம் பண்ணித் தா” என்றார் காபாலிகர். இதைக் கேட்ட திருநீலகண்டர் கவலைப்பட்டார். மனைவியைத் தீண்டலாகாது என்று சபதம் செய்தவர் இப்போது தர்மசங்கடமான நிலைமையில் மாட்டிக் கொண்டார். காபாலிகரைப் பார்த்து, “சுவாமி, நானும் என் மனைவியும் ஒரு சபதம் காரணமாக ஒருங்கே முழுகுதல் கூடாது. நான் மாத்திரம் முழுகிச் சத்தியம் பண்ணித் தருகிறேன்” என்றார். காபாலிகர் கோபங்கொண்டு, “நான் அடைக்கலம் வைத்த திருவோட்டைத் தராமலும், திருடவில்லை என்று சத்தியம் பண்ணித் தராமலும் ஏமாற்றுகிறாயா?” என்று சொல்லி, நீலகண்டரை அழைத்துப் போய்த் தில்லைவாழந்தணர்கள் முன்னிலையில் நிறுத்தி முறையிட்டார். அந்தணர்கள் அந்த முறையீட்டைக் கேட்டபின், “சிவயோகியார் கேட்பது நியாயம்தானே? ஓடு இல்லையென்றால் சத்தியம் செய்து கொடும்” என்றார்கள். நீலகண்டர் சிறிது யோசித்து விட்டு, “சரி, தகுந்தபடி குளத்திலே மூழ்கிச் சத்தியம் செய்து தருகிறேன்” என்று சொல்லித் தம் மனைவியை அழைத்துவந்து திருப்புலீச்சரத்துக்கு முன் இருக்கிற குளத்திலே, ஒரு மூங்கில் தண்டை, ஒரு புறத்திலே மனைவியும் மறுபுறத்திலே தாமும் பிடித்துக்கொண்டு இறங்கினார். காபாலிகர் உடனே, “என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? மூங்கில் தண்டை விட்டு உன் மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு மூழ்கு” என்று பிடிவாதம் பிடித்தார். திருநீலகண்டர் அப்போதுதான் தமது இரகசியத்தை வெளிப் படுத்தி, தாம் பரத்தையர் வீட்டுக்குப் போனதும், அதனாலுண்டாகிய சபதமும் உலகத்தார் அறியும்படி சொல்லி, மனைவியின் கையை இப்பொழுதும் பிடித்தல் முடியாது என்று மறுத்து நீரில் மூழ்கி எழுந்தார். என்ன ஆச்சரியம்! காபாலிகரைக் காணவில்லை. திருநீலகண்டரும் மனைவியும் தாம் இழந்த யௌவனப் பருவத்தை மீண்டும் பெற்று இளம் தம்பதிகளாகக் காட்சி தந்தனர். அங்கு கூடியிருந்தவர் யாவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
திருப்புலீச்சரத்து சந்நிதியிலிருக்கும் குளம் ‘இளமையாக்கினார் குளம்’ என்று வழங்கப்படுகிறது. திருநீலகண்டர் வரலாற்றை நினைவுபடுத்த இந்தக் குளத்தின் படிக்கரைச் சுவரில் இவர்களின் முதுமை இளமை வடிவங்கள் சிற்பமாகக் காட்சியளிக்கின்றன.
புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் வழிபட்ட காரணத்தால் இந்தத் தலம் திருப்புலீச்சரம் என்ற பெயர் பெற்றதாம். குளத்தின் பெயரும் வியாக்கிரபாத தீர்த்தம். சிதம்பரம் கோயிலுக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கும் பத்து தீர்த்தங்களில் இந்த வியாக்கிரபாத தீர்த்தமும் ஒன்று. திருநீலகண்டர் வரலாற்றையொட்டி இளமை யாக்கினார் குளம் என்றும் சொல்லப்படுகிறது.
திருப்புலீச்சரத்துடன் தொடர்புடைய மற்றொரு நாயனார் பெயர் கணம்புல்ல நாயனார். இவர் தமது சொந்தச் செலவிலே திருப்புலீச்சரத்தில் விளக்கேற்றித் தொண்டு செய்து வந்தார். வறுமை யெய்தியதும் கணம்புல் என்ற புல்லை அரிந்து அதை விற்று வரும் பொருளைக் கொண்டு நெய் வாங்கி விளக்கேற்றினார். அதனால் அவருக்கு கணம்புல்லர் என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர், புல்லும் விலைப்படாமையால், நெய் வாங்கப் பணமில்லாமல், அப்புல்லையே விளக்காயெரித்தார். சோதனை மேல் சோதனையாக, பாவம், புல்லும் விளக்கெரியப் போதவில்லை. உடனே கணம்புல்லர் சிறிதும் தயங்காமல், தமது முடியையே விளக்காயெரித்தார். இறைவன் இதைப் பொறுக்காமல் தடுத்தாட்கொண்டார் என்பது பெரிய புராணத்திலுள்ள வரலாறு. திருப்புலீச்சரத்தினுள்ளே தெற்குப் பிராகாரத்தில் இவரது சிலை வைத்து வணங்கப்படுகிறது.
சுவாமி தரிசனம் செய்துகொண்டு வெளியே வந்தோம். எங்கள் கார் சாரதி ராதாகிருஷ்ணனைக் காணவில்லை. சிறிது நேரம் காத்திருந்தபோது அவர் இளமையாக்கினார் குளத்திலிருந்து எழுந்து வரக்கண்டோம். “இவரும் பத்து இருபது வயதைக் குறைத்து இளமை தேடுகிறார்” என்று பரிகசித்தார் சிட்டி. ராதாகிருஷ்ணன் ஓர் அபூர்வப் பேர்வழி. நாங்கள் தரிசித்த எந்தக் கோயிலானாலும், குளமோ, ஆறோ பக்கத்தில் இருந்தால், உடனே அதில் குளித்துவிட்டு, விபூதிப் பூச்சுடன் சுவாமி தரிசனம் செய்து கொள்வார். நாங்கள் புகைப்படம் பிடித்துக் கொண்டோ, கோயில் நிர்வாகிகள் அல்லது அர்ச்சகர்களுடன் பேசிவிட்டோ வரும்போது நல்ல சிவப்பழமாகக் காட்சி தருவார். எங்கள் யாத்திரையின்போது ராதாகிருஷ்ணனின் இறை பக்தியும் ஒத்துழைப்பும் எவ்வளவோ துணை செய்தன.
திருப்புலீச்சரம் என்ற தலத்துக்கு இளமையாக்கினார் கோயில் என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. நண்பர் சம்பந்தம் பிள்ளைக்கு இங்கு தெரியாத குருக்கள் இல்லை. நாங்கள் உள்ளே சென்று எல்லா இடங்களையும் சிற்பங்களையும் பார்ப்பதற்கு அர்ச்சகர் ஒருவரை அழைத்து அவர் துணையோடு போய்ப் பார்க்க ஏற்பாடு செய்து தந்தார். “இனி நீங்கள் முக்கியமாகப் பார்க்கவேண்டியது திருநாளைப் போவார் என்ற நந்தனார் சம்பந்தப்பட்ட இடங்களைத்தான். இங்கு நந்தனாருக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. அவர் தீக்குளித்த இடம் ஓமகுளம் என்ற பெயரில் ஒரு குளமாக இருக்கிறது” என்று சொல்லி, எங்களை மேலும் அழைத்துச் சென்றார். நந்தனார் பிறந்த ஆதனூரும் அவர் வழிபட்ட திருப்புன்கூரும் எங்கள் யாத்திரையில் பின்னால் பார்க்கவேண்டிய தலங்கள். ஆகையால் சிதம்பரத்தில் நந்தனார் சம்பந்தப்பட்ட இடங்களை இப்பொழுதே பார்த்துப் போக விரும்பினோம். முதலில், சிதம்பரத்திலே செங்காட்டன் தெரு என்ற பகுதியில் நந்தனாருக்குள்ள ஒரு சிறு கோயிலைப் போய்ப் பார்த்தோம். செங்காட்டன் தெரு என்பது கைத்தறி நெசவாளர் வசிக்கும் பகுதி. இங்கேயுள்ள சிறு கோயிலில் நந்தனார் விக்கிரகம் வைத்துப் பூஜையும் வழிபாடும் நடந்துவருகிறது. அங்கிருந்து ஓமகுளம் என்ற இடத்துக்கு அழைத்துப் போய்க் காண்பித்தார் சம்பந்தம் பிள்ளை. இந்த இடத்தில்தான் நந்தனார் தீக்குளித்துத் தில்லைப் பெருமானுடன் இரண்டறக் கலந்தார் என்பது ஐதிகம். தில்லை வாழந்தணர்கள் மூட்டி வைத்த தீயில் நந்தனார் புகுந்தார். அது அவருக்குத் தண்ணென்றிருந்த காரணத்தால், குளமாக வெட்டி வைத்திருக்கிறார்கள். மிகப் பெரிய குளத்துக்குப் பக்கத்திலே நடராஜர் கோயில் என்ற பெயரில் ஒரு புதிய கோயில் இருக்கிறது. ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த சகஜானந்தா என்பவர் இந்தக் கோயிலை ஹரிஜனங்களுக்காகக் கட்டி வைத்து அவர்கள் சமூக முன்னேற்றத் துக்குப் பல சேவைகள் செய்தார் என்று சொல்லப்படுகிறது.
தேவாரத் திருமுறைகள் கண்டது சிதம்பரம். திருவாசகம் தந்த மாணிக்கவாசகரை வரவேற்றது சிதம்பரம். திருவிசைப்பா பாடிய சேந்தனார், திருமாளிகைத் தேவர், கருவூர்த்தேவர், கண்டராதித்தர் முதலியவர்களை ஏற்றுக்கொண்டது சிதம்பரம். சைவசித்தாந்த சாத்திரங்களில் பெரும்பகுதியை (8) வரைந்த உமாபதிசிவத்தைத் தந்தது சிதம்பரம். இறையருளும் கல்வியும் வளரக் காரணமாயிருந்த சிதம்பரம் நகரத்தைச் சுற்றிப் பார்த்தோம். ஞானப்பிரகாசர் மடம், சேக்கிழார் கோயில், ஆறுமுக நாவலர் வித்தியாசாலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்- இவற்றையெல்லாம் பார்த்து விட்டு நமது கதாநாயகன் சுந்தரமூர்த்தியை நினைவு கொண்டோம். திருவாரூரை நோக்கிச் செல்பவர் பக்கத்திலுள்ள சீர்காழி வழியாகச் செல்கிறார் என்று தெரிகிறது. திருநாவுக்கரசரும் அங்கேதான் சென்றிருக்கிறார். ஆகையால் நாமும் சீர்காழிக்குச் செல்வோம். சிதம்பரம் நண்பர் சம்பந்தம் பிள்ளையிடம் விடைபெற்றுக் கொள்கிறோம்.

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “சோ.சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்”

Comments are closed.