
தமிழில் : க.மோகனரங்கன்
என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவர்
எங்கேயோ பியானோ வாசித்தார்.
காலத்துக்கும் வெளிக்கும் அப்பால் இருந்து வந்த ஒலி
என் காதுகளை வருடியது.
இப்போதும் அது காற்றை நடுங்க வைக்கிறது.
தொலைவிலிருந்து ஒர் இனிமையான கிசுகிசுப்பு─
என்னால் அதை விளக்க முடியாது.
காற்றின் சலசலப்பிற்கு
இணங்கி நிற்கும்
தோப்பு மரங்களைப் போல
என்னால் அதற்கு
என்னை ஒப்புக் கொடுக்க மட்டுமே முடிந்தது.
முதல் ஒலி எப்போது பிறந்தது?
வெற்றிடமான பிரபஞ்சத்தின் மத்தியில்
யாரோ ரகசியமாக அனுப்பிய குறியீடு போல,
புதிரானதாக….
மேதைகள் எவரும்
இசையை உருவாக்கவில்லை.
அவர்கள் அர்த்தத்திற்கு
தம் செவிகளை அடைத்துக்கொண்டனர்.
அழியாத காலம் முதல் இருந்து வருகிற
மௌனத்தை பணிவுடன் கேட்டனர்.
–
