
பிளாஸ்க்கிலிருந்து ஒரு கோப்பை தேநீரை கப்பில் ஊற்றினான் ஈஸ்வர். சூடான தேநீரின் வாசம் காற்றில் நறுமணத்துடன் பரவியது. ஒரு மிடறு உள்ளே சென்றதும் உடம்பிற்குள் வெது வெதுப்பு பரவத் தொடங்கியது.
உடனே வான்மதி ஞாபத்திற்கு வந்தாள். அவன் வேகமாகப் போய் பீரோவிற்குள்ளிருக்கு கெட்டி அட்டை போட்ட அந்த வெள்ளை நிற
டைரியை எடுத்துக் கொண்டு வந்து , அதை மேசை மீது வைத்து ,புரட்ட ஆரம்பித்தான்.
முதல் பக்கத்தில் அவள் எப்போதோ எழுதி வைத்த கவிதை ஒன்று அழகழகான கையெழுத்தில் முகம் காட்டிச் சிரித்தது.
” அன்று நீ நேசித்த மேகம்
இன்று மழையாக
உன்னைத் தழுவிப் போகிறது
கடலோடு கடலாக
இந்தக் கடல்
மறு ஜென்மம் எடுத்து
மீண்டும் மீண்டும்
உன்னைத் தழுவ வரும் போது
அடையாளம் கண்டு கொள்வாயா ?
மீண்டும் மீண்டும் .
அது தானே காதலின் விதி….
வான்மதி நீ அன்று மழையாக என் மீது பொழிந்து கடலாக கரைந்து போனாய் . இனி எப்போது மறு ஜென்மம் எடுத்து என்னை வந்து தீண்டப் போகிறாய் சொல்
என்றபடி அவன் கண்களை முடிக் கொண்டான்.
தேநீர் முடிந்திருந்தது . பதினைந்து வருடங்கள் கடந்து விட்டிருந்தன.
அவனது வாழ்க்கை ஒரு திரைப்படம் போல கட கட வென்று மனதிகள் ஓடி மறைந்தது.
கல்லூரியில் முதலாம் ஆண்டு வான் மதி என்ற அழகான , மிக வசதியான இளம் பெண் வந்து சேர்ந்தது, அவர்களுக்குள் முதலில் மோதல் எழுந்தது ,பிறகு அவர்கள் காதலிக்க ஆரம்பித்தது, தினமும் கல்லூரிக்கு அருகில் இருக்கும் நேரு பார்க்கில் இருவரும் சந்தித்து உறவாடியது , இது அவளது வீட்டிற்கு தெரிந்து போய் , ,அவர்கள் அவளை இரகசியாக அழைத்துப் போய் யார் கண்ணிலும் காட்டாமல் மறைத்து வைத்து வெளி நாட்டிற்கு அனுப்பி வைத்தது, அவன் துடி துடித்து மாய்ந்தது, அதன் பிறகு ஒரு வாரத்திற்குள் இந்த டைரி அஞ்சலில் வந்து அவன் கைகளில் சேர்ந்தது.. பிறகு அந்த விலாசத்திற்கு இவன் கடிதங்கள் எழுதி ஓய்ந்தது, எந்தக்
கடிதங்களுக்கும் பதில் வராமல் போனது….
அடக் கடவுளே !
காலம் என்ன வேகமாக வாழ்க்கையை தின்று தீர்க்கிறது.! அந்தக் காதலின் மிச்சமாக இன்று உடனிருப்பது இந்த டைரியும் இந்தக் கவிதையும் அவனது உயிரும் மட்டும் தான். அவளுக்கு என்ன நேர்ந்ததோ ? யாருக்குத் தெரியும் !
ஆனால் காதலின் விதி உயிரோடு இருந்தால் , அவள் மீண்டும் வருவாள் அவனிடம்.
கடலை சுமந்து வரும் கார்கால மேகமாக மறு ஜென்மம் எடுத்து . வருவாள்.அவன் மீது பெரும் மழையாகப் பொழிவாள்.
சட்டென்று டைரியை முடி வைத்து விட்டு வெளியில் பார்த்தான். விடியத் தொடங்கியிருந்தது. வழக்கம் போல அவர்கள் சந்தித்த நேரு பூங்காவுக்கு கிளம்பினான்.
தெருவில் இறங்கியதும் மேலே அண்ணாந்து பார்த்தான்.
வானம் இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது.
ஒரு வேளை அது இந்த நாளாக இருக்க கூடுமென்று நினைத்துக் கொண்டு முன்னெப்போதையும் விட வேகமாக நடந்தான்.
