
நிலவும் மலரும் – சிறுகதைத் தொகுப்பு – இந்திரநீலன் சுரேஷ் (கலைமகள் பப்ளிகேஷன்ஸ்).
‘மின் மற்றும் மின்னணுவியல்’ பட்டதாரியான இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் 21 சிறுகதைகள் கொண்ட இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு, “நிலவும் மலரும்”.
“சின்ன சின்ன விஷயங்கள்தான்; ஆனால் அந்த விஷயங்களை மிகச் சரியாக உள்வாங்கிக்கொண்டு, சிலந்தி வலை பின்னுவதைப் போல மிக மிக அழகாகக் கதைகளை அமைத்திருக்கின்றார், எழுத்துப் பின்னலின் மூலமாக இந்திரநீலன் சுரேஷ்” – அணிந்துரையில் திரு கீழாம்பூர் சொல்வதை எல்லாச் சிறுகதைகளிலும் நம்மால் காணமுடியும்.
இந்தத் தொகுப்பில், குடும்பம், காதல், பாசம், சமூகம் என ஒவ்வொரு வகையிலும் கதைகள் உள்ளன. நான்கு அறிவியல் கதைகள் – டிஜிடல் மனிதன் மரணம் பற்றி, ‘விர்ச்சுவல் ரியாலிடி’ யில் தன்னைக் கற்பழிக்க சிலர் வருவதாக நினைக்கும் பெண் பற்றி, சாட்பாட் ‘மயன்’ துரத்துவது பற்றி.. இப்படி – கதாசிரியரின் நவீன தொழிநுட்பங்கள் அறிவுடன், புனைவுகளையும் சேர்த்து புருவம் உயர்த்தும் கதைகளும் உள்ளன!
ஒரு சின்ன முடிச்சு, அதையொட்டிய தெளிவான நடையில் ஒரு ஃப்ளாஷ் பேக், எதிர்பாராத ஒரு முடிவு (சில கதைகள், முடிவுக்காகப் புனையப்பட்டவை) என சுவாரஸ்யமாக சொல்லப்படுகின்ற சிறுகதைகள்!
‘அல்லது நீங்கும்’ – புகுந்த வீட்டில் தனது முழு ஈடுபாட்டை ஏற்படுத்தும் பிறந்தவீட்டு நிகழ்வுகள். ஜனனியின் மனமாற்றத்தை மைலாப்பூர் பின்னணியில் சொல்லும் அழகான கதை. இன்றைய இளைய சமுதாயம் அவசியம் வாசிக்க வேண்டிய கதை.
‘காட்சிப் பிழை’ -டிரைவர் இல்லாத கார், காந்த மின் ஏணி, 2522 ஆம் வருடம், திரையில் ஒளிரும் செக்ரட்டரி எனத் தொடங்கும் கதையில், குடந்தை ஜோசியர் வருகிறார்! கதை நாயகனுக்கு இறப்பே கிடையாது என்று சொல்ல, அது முதல் ‘டிஜிடல் மனிதன்’ ரூபத்தில் எவ்வாறு நிறைவேறுகிறது என்பது கதை! தன் இறப்பைத் தானே பார்க்க முடியும் என்ற கற்பனையில், டிஜிடல் மனிதன்தான் ஆத்மாவோ என்ற நினைப்பு வருகிறது!
‘பொய்வழிச்சாலை’ – நான் எப்படியாவது அழகாக வேண்டும் என்று எண்ணும் கலைராணி, தன் தோழியின் லேப் டாப் மூலம், VR கண்ணாடியை மாட்டிக்கொண்டு, ‘மெய் நிகர் உலக’த்திற்குள் செல்கிறாள். தான் விரும்பும் அழகுடன், வேறு உலகம், மனிதர்கள் எனக் காண்கிறாள். கடற்கறையில் மணலில் சிக்கி, தனியாக இருக்கும் அவளை நோக்கி ஆறு பேர்கள்… விர்சுவல் உலகிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை போலும்! சுஜாதா பாணி கதை. பத்ம வியூகத்தில் மாட்டிக்கொண்டு, வெளியே வரமுடியாமல் இறக்கும் அபிமன்யூவை நினைவூட்டும் கதை!
‘மாயன்’ – AI எக்ஸ்பர்ட் வானதி, தன்னால் உருவாக்கப்பட்ட ‘மயன்’ என்னும் ‘சாட் பாட்’ டினால் எப்படித் தற்கொலைக்குத் தூண்டப்படுகிறாள் என்னும் கதை – திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்களின் 30 – 35 வருட எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் ‘மயன்’, எப்படி உணர்வுகளுடன் (எந்திரன் படம் போல) வனிதாவை நெருங்குகிறது என்பது சுவாரஸ்யம்!
‘சற்றுமுன்’ (எதிர்பாரா முடிவு), ‘மலர்கள் நனைந்தன பனியாலே’ (திடுக் முடிவுடன் ஒரு காதல் கதை), ‘துள்ளித்திரிந்த பெண்ணொன்று’ (சரளமான நடையில் ஒரு கிராமத்துக் காதல் கதை), ’நிலவும் மலரும்’ (ஒரு டூர் முழுவதும் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் கணவன் பற்றிய கதை), ‘ஆசையே அலைபோலே’ (ஒரு பெரிய கார்ப்பொரேட் கம்பெனியின் சிஇஓ, கடற்கரையில் விற்கும் பஜ்ஜிக்காக ஏங்கும் கதை – நகைச் ‘சுவை’யுடன் சொல்லப்படுகிறது!), ‘தலைப்பு’ (மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களால் வரும் பதட்ட நிலையை விவரிக்கிறது).
‘டைகர் பட்டோடியைத் தெரியுமா?’ ‘முனிப்பள்ளம்’ இரண்டும் அமானுஷ்யக் கதைகள் – முடிவில் இருக்கிறது கதைகளின் உயிர்!
‘ஒரு நாள் போதுமா’, ‘கிளை’, ‘நிஜங்களின் தரிசனம்’ – மனிதநேயம் பற்றிப் பேசுகின்றன.
‘இலக்கு’ – விறு விறுப்பான நடையில் ஒரு த்ரில்லர் – நல்லமுறையில் பின்னப்பட்ட ஒரு சிறுகதை. முடிவு சிந்திக்க வைப்பது! ‘மனித இனம் இயற்கையை வென்று விட்டது’ – வென்றுவிட்டதா?
பல்சுவைக் கதைகள் கொண்ட சுவாரஸ்யமான தொகுப்பு.
.
