
.
இதோ, இந்த வருடத்திலேயே இது மூன்றாவது கருச்சிதைவு!
சத்து பற்றாக்குறையா அல்லது என் கருப்பை அத்தனை பலவீனமாக உள்ளதா என்னவென்று தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்கு மேல் என் கருப்பையில் கரு தங்கவில்லை.
சென்ற முறையே மாமியார் பிலாக்கணம் பாடினார். இந்த முறை கேட்கவே வேண்டாம். அநேகமாக இனி நான் அந்த வீட்டில் வாழ்வது கேள்விக்குறிதான்.
அதெப்படி அவர் அந்த முடிவை எடுக்கலாம்? கட்டியவனுக்கு எங்கே போயிற்று? கேள்வி கேட்பது எளிது! ஆனால் எல்லா கேள்விகளுக்கும் எப்போதும் சரியான விடை கிடைக்காது. சரியான விடையென்ன, பல சமயம் விடைகளே இல்லாமல் கேள்விகள் மட்டும் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும்.
நான் ஊகித்த மாதிரியே என்னை கறிவேப்பிலையாய் உதறிவிட்டுப் போய்விட்டார்கள்.
பிறந்த வீட்டில் எத்தனை காலம் ஒட்டுண்ணியாய் வாழ்வது? அண்ணன் எவ்வளவுதான் செய்வான்? அவனும் தன் குடும்பத்தையும் தன்னை நம்பி வந்தவளையும் பார்த்தாக வேண்டாமா?
விக்கிரமாதித்தன் முதுகில் விடாப்பிடியாய் ஏறிக் கொண்ட வேதாளம் போல என்னால் என் அண்ணன் முதுகில் பாரமாய் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.
ஆனால் என்ன செய்வது என்றுதான் புரியவில்லை.
கோவிலுக்குப் போனாலாவது ஏதாவது வழி பிறக்காதா என்ற நப்பாசையில் அருகிலிருக்கும் கருமாரியம்மன் கோவிலிக்கு வந்தேன்.
மக்கள் மனம் குளிர அருளாசி புரியும் கருமாரியை கடனேயென்று வழிபட்டுவிட்டு கோவில் குளத்தருகே வந்தமர்ந்தேன்.
கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
‘என்ன எதுக்கு இப்டி படைச்ச? நேரத்துக்குப் பூத்தாலும் காய்க்காத மரமா ஆக்கிட்டியே? என்னால யாருக்கும் பயனில்லாம என்ன பிறவி இது? எதுக்கு எனக்கு கல்யாணம்? எதுக்கு புருஷன்னு ஒருத்தர்? எதுக்கு மூணு முறை கருத்தரிச்சேன்? எதுக்கு மூணும் வளராம வயித்திலயே கரையணும்? இதோ நா வேணாம்னு என்ன வெரட்டி வுட்டாங்க.. அண்ணனுக்கும் பாரமா.. இந்த பூமிக்கும் பாரமா.. எதுக்கு இந்த பிறவி.. இந்த இருவத்தியஞ்சி வயசுக்குள்ளயே என் வாழ்க்கையில எல்லாம் முடிஞ்சி போச்சி.. வளராத அந்த மூணு குழந்தையையும் உன்கிட்ட கூப்ட்டுகிட்ட நீ இத்தன நடந்தப்றமும் கூட என்ன கூப்ட்டுக்க மாட்டேங்கறியே?’
மனதுக்குள் கருமாரியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தேன்.
காலையில் அண்ணி பக்கத்து வீட்டு மாமியிடம் பேசியது நினைவுக்கு வந்தது.
“அம்மாப்பா இல்லாத பொண்ணாச்சே! அண்ணிக்காரி நாத்தனாரை கவனிக்கலன்னு நாலு பேர் நாலு விதமா பேசிடக் கூடாதேன்னு ஏதோ முடிஞ்சத குறைவில்லாம செய்து கல்யாணம் பண்ணி அனுப்பினோம்.. வாழக் குடுத்து வைக்கலயே அவர் தங்கைக்கு.. அவ வயித்தில கரு தங்கலன்னு இங்க கொண்டு வந்து தள்ளி வுட்டுட்டு போய்ட்டாங்க.. சரி! ஆனது ஆயிடுச்சு.. இவ தன் கால்ல நின்னுக்க ஏதாவது பண்ணலாம்னா படிப்பு கூட இல்ல.. பத்தாவது பெயிலான பொண்ணுக்கு என்ன வேலை கிடைக்கும்.. அவ அழறத தேத்தறதா.. இல்ல இவர் மனசு சங்கடத்தை நெனச்சி கவலப்படறதா.. இல்ல என் குழந்தைங்கள கவனிக்கறதா.. ஒண்ணும் புரியல மாமி! சாண் ஏறினா முழம் சறுக்குது..” என்ற அண்ணியின் புலம்பல் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் வெயில் உச்சிக்கு வந்த பின்பும் கோவில் வாசலில் இருந்த கடைகள் இன்னும் திறந்திருந்தன.
திடீரென்று யாரோ சத்தமாகப் பேசும் பேச்சில் என் நினைவு நிகழ்வுக்கு வந்தது.
“ஏண்டா? படிப்பு இல்லன்னா என்ன? பொது அறிவு கூடவா இல்ல? அவன் கேட்டானாம்.. இவன் குடுத்தானாம்.. உன்ன நம்பி கடை வுட்டுட்டு போக முடியுதா? உன்னால இன்னிக்கு எரநூறு ரூவா நஸ்டம் ஆகிருக்கும்.. நல்ல வேள.. ஆத்தா காப்பாத்தினா..” என்று முத்துப்பாண்டி அண்ணாச்சி தன் கடைப் பையனிடம் கத்திக் கொண்டிருந்தார்.
அவருடைய வார்த்தைகள் எனக்கு ஒரு தெளிவைக் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
‘படிப்பில்லன்னா என்ன? பொது அறிவு இல்லையா?’
‘இருக்கே! எனக்கு பொது அறிவு இருக்கு! என் பொது அறிவுக்கு எட்டின அளவுக்கு என்னால வேலை செய்ய முடியாதா? என் மிச்ச வாழ்க்கை அண்ணன் வீட்டிலதான்.. அத மாத்த முடியாதுதான். ஆனா அண்ணன் முதுகில ஏன் ஏறி சவாரி செய்யணும்.. அவனுக்கு என்னால தோள் குடுக்க முடியாதா? முடியும்.. பாவம் அண்ணி! என்னிய என் புகுந்து வீட்டு ஆளுங்க மாதிரி வெரட்டி வுடாம தன் கூடப் பொறந்த தங்கச்சியா நெனச்சி வாழற என் அண்ணி! இனிமே என்ன நெனச்சி அவங்கள கவலப்பட வைக்க கூடாது.. கூழோ கஞ்சியோ.. அண்ணன் கூட அண்ணி கூட சேர்ந்து குடிக்கறத நானும் சேர்ந்தே சம்பாதிக்கறேன்..’ மனதுக்குள் திடமாய் முடிவு செய்து கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தேன்.
முத்துப்பாண்டி அண்ணாச்சியின் கடையின் முன் போய் நின்றேன்.
“யாரு ராசு தங்கச்சியா?” கேட்டார் அண்ணாச்சி.
“ம்.. ஆமா அண்ணாச்சி..”
“எல்லாம் கேள்விப்பட்டேன் தாயி..” என்று ஆரம்பித்தார்.
“அத விடுங்க அண்ணாச்சி.. உங்க கடையில வேலை குடுங்க அண்ணாச்சி.. அண்ணனுக்கு உதவியா ஏதோ என்னால முடிஞ்சத சம்பாதிக்கலாம்னு பாக்கறேன்..”
“வா தாயி.. நீ சின்ன வயசிலயே நல்லா கணக்கு போடுவன்னு நம்ம டீச்சரம்மா சொல்லுவாங்க.. நீ இருந்தா எவனும் என் கடையில வந்து ஏமாத்த மாட்டான்.. எனக்கும் நம்பிக்கையான ஒருத்தர்ட்ட கடைய விட்டிருக்கோம்னு வெளிய போக வர சவுரியமா இருக்கும்.. நாளக்கி வெள்ளென வந்துரு தாயி.. என்ன..” என்றவரிடம் நன்றி கூறிவிட்டு வீட்டுக்கு ஓடினேன்.
கோவிலுக்குப் போன என்னை இன்னும் காணவில்லையே எனக் கவலையுடன் வாசலில் காத்திருந்த அண்ணி, என்னைப் பார்த்ததும்,
“போனது போச்சு.. நடந்ததையே நெனச்சி அழுதுகிட்டு உடம்ப கெடுத்துக்காத கௌரி.. அபார்சன் ஆன உடம்பு.. ரொம்ப நேரம் பட்டினி கெடக்கலாமா! வா! வந்து சாப்புடு!” என்று கண்டிப்புடன் கூறினாள்.
அண்ணியிடம் விஷயத்தைக் கூறியதும்,
“நீ கஸட்டப்படாத கௌரி.” என்று கண்ணீர் சிந்தினாள்.
“இல்லண்ணி. நம்ம குழந்தைங்களுக்கு நானும் சேர்ந்து சேத்து வைக்கலாம்னு..” என்று நான் முடிப்பதற்குள் என்னை கட்டிக் கொண்டாள் அண்ணி.
“ஆமா கௌரி! நீ பெத்தா என்ன உன் அண்ணன் பெத்தா என்ன? எல்லாம் ஒண்ணுதான்! எல்லாம் நம்ம குழந்தைங்கதான்!” என்று அவள் வாய் முணுமுணுத்தது.
♥♥♥♥♥
