ஜெ.பாஸ்கரன்/டொராண்டோ டைரி 1

ஜூலை 1 மாலை ஏர் இண்டியா விமானத்தில் கனடா பயணம் செய்யத் தீர்மானம் – சென்னை -டெல்லி, டெல்லி – டொராண்டோ எனத் திட்டம்.

ஜூன் 30 மாலை வரை கலந்துகொள்ள ஒப்புக்கொண்ட கூட்டங்கள் – எல்லாம் முடித்து, அவசர அவசரமாக பெட்டிகளை பேக் செய்து, புத்தகங்கள், லேப் டாப் என எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு ஏர்போர்ட் வந்தோம். சென்னை ஏர்போர்ட் முன்பு மாதிரி இல்லை – கிளாம்பாக்கத்திற்கு மாற்றும் முன் இருந்த கோயம்பேடு பஸ் ஸ்டண்டை விடக் கூடுதல் கூட்டம்! டிக்கட், பாஸ்போர்ட் எல்லாம் காண்பித்து, உள்ளே சென்று, நான்கு பெட்டிகளையும் உள்ளே தள்ளி, கையில் இரண்டு சின்னப் பெட்டிகளுடன் செக்யூரிடி செக் சென்றோம்.

லிப்ஸ்டிக், கொண்டை, யூனிஃபார்ம் சகிதம் இருந்த ஏர் இண்டியா பெண் அலுவலர்கள் எழுந்து நின்று வணக்கம் சொல்லி, பணி முடிந்ததும் திரும்பவும் எழுந்து நின்று வணக்கம் சொன்னது செயற்கையாக இருந்தது. ‘கொஞ்சம் இருங்கள்’ என்று சொல்லும் இடைவெளி விட்டு ஒரு புன்னகையை வலிந்து ஒட்டிக்கொண்ட அம்மணிக்கு ஏதோ மனவருத்தம் போலிருக்கிறது! பக்கத்துக் கவுண்ட்டர் நாரீமணி கொஞ்சம் பரவாயில்லை – புன்னகையைச் சொன்னேன்.

ஏர்போர்ட் சாங்கியங்கள் பழகிவிட்டதால், விரைவாக அனைத்தையும் களைந்து, ஸ்கானருள் உருளவிட்டு, தலை முதல் கால் வரை பெரிய லென்ஸால் தடவப்பட்டு, ஸ்கானரிடமிருந்து வெளியே வந்த உடமைகளைப் பொறுக்கிக் கொண்டு – பெருமூச்சு விட்டோம்! நேரமிருந்ததால், லவுஞ்சுக்குச் சென்று, பஜ்ஜி, சாண்ட்விச், சாலாட் என எதையோ கொறித்தோம். பின்னர் குறித்த நேரத்தில் விமானத்துள் சென்று, அமர்ந்தவுடன், ஜூஸ்/மோர் குடித்து, பிடி சோறு, வெண்டைக்காய் பொறியல், சப்ஜி எனும் கூட்டு, தடிமனான ரோட்டி, யோகர்ட் எல்லாம் அரைத் தூக்கத்தில் தின்றோம். கையில் ஸிந்துஜாவின் ‘சாகரம்’ சிறுகதைத் தொகுப்பு – ஒரு கதைதான் படிக்க முடிந்தது. இரண்டு காங்கிரஸ் எம்.பி. (ஒருவரை சினிமாவில் பார்த்திருக்கிறேன்), ஒரு பிஜேபி பிரமுகர் என ஏழெட்டு பேர் சிரித்துப் பேசியபடி உடன் பயணித்தனர்.

நள்ளிரவில் டெல்லி ஏர்போர்ட் சுறுசுறுப்பாக இருந்தது. வீல்சேர் உதவி கேட்டிருந்தோம், அலைச்சலையும், நடையையும் தவிர்க்க – கொஞ்சம் குழப்பத்திற்குப் பிறகு, இரண்டு வீல்சேர்களையும் ஒருவரே தள்ளிச்சென்று இமிக்ரேஷன், செக்யூரிடி செக் முடித்து, லவுஞ்சில் கொண்டு விட்டார். அவருக்குத் தமிழ் தெரியாது. எங்கள் ஹிந்தி அவருக்குப் புரியாது – ஒரு மாதிரி பேசியபடியே சென்றோம். நல்ல சிவப்பு, சிரித்த முகம், புரியாவிட்டாலும், ‘நான் எல்லாம் பார்த்துக்கொள்கிறேன்’ என்பதை மட்டும் புரிய வைக்கும் தந்திரம், சுறுசுறுப்பு (இரவு 1 மணி). நான் ‘டிப்ஸ்’ கொடுக்க, வழக்கப்படி, அவர் தலையைச் சொறிய டிப்ஸுக்கு டிப்ஸ் கொடுத்தோம்! ‘சரியான நேரத்திற்கு வேறு ஒருவர் வருவார், தன் டியூட்டி ஓவர்’ என்று சொல்லி அவர் செல்ல, லவுஞ்சில் கண்ணில் பட்டதைக் கொறித்தோம். அதிகாலை 3.30க்கு அந்த ‘வேறு’ ஒருவர் வந்தார். அவரும் இரண்டு வீல்சேர்களையும் ஒருவராகவே உருட்டிச்சென்று விமானத்தின் அருகில் விட்டார். டிப்ஸ் உண்டு. ஆனாலும் அவர்கள் சேவை பாராட்டுக்குரியது – சீனியர் சிடிசன்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது.

15 மணிநேரம் – அமர்ந்தும், படுத்தும், சிறிது படித்தும், ஒரே மாதிரியான உணவைக் கொறித்தும், கண்கள் எரிந்தும், மூக்கு அடைத்தும் – வானில் பறந்தது ஆயாசமாக இருந்தது. சரியான நேரத்திற்கு டொராண்டோவில் இறக்கிவிடப்பட்டோம். ‘இமிக்ரேஷன்’ கியாஸ்கில் சடுதியில் முடித்து, கான்வேயர் பெல்டில் பெட்டிகளைத் தேடிப் பொறுக்கி ஒரு ட்ராலி வாடகைக்கு எடுத்து, வெளியே வந்தோம். சிரித்த முகத்துடன் ட்ராலியுடன் வந்த ஆப்பிரிக்க பெரியவர், மிகவும் ஃப்ரெண்ட்லி! என் பேரனையும், மகளையும் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்தார். ‘ஹாவ் அ ப்ளஸண்ட் ஸ்டே’ – வாழ்த்திச் சென்றவரின் மனவாசம் வெகுநேரம் எங்களைத் தொடர்ந்தது!

எதுவும் மாறவில்லை – காலை 9 மணிக்கே வெயில் சுட்டெரித்தது. இது சம்மர் சீசன். வீட்டிற்கு வந்து, செட்டில் ஆனோம். கொலு பொம்மை, பொடிகள், புதுத் துணிகள் என ஒரு மினி இந்தியன் ஸ்டோர் இடம் மாறியது!

தினம் ஏதாவது எழுதவேண்டும், வாசிக்க வேண்டும் என ப்ளான் போட்டது சிறிது தடை பட்டது – ஜலதோஷமும், மூக்க டைப்பும், ஜுரமும் படுத்தியது!

பார்க்கலாம்….