
நல்ல மழை பெய்தபோதுதான்
நான் மழையில்
மாட்டிக்கொண்டதே இல்லை என்பது
நினைவுக்கு வந்தது
நான் பாலத்தடியில்
ஒதுங்கி நின்றது இல்லை
மழைக் கோட்டு அணிந்ததில்லை
தெப்பலாக நனைந்து
விடு திரும்பியதில்லை
முழங்கால் அளவு மழை நீரில்
நடந்து சென்றது இல்லை
குடையைப் பிடித்துக்கொண்டு ஓடியதில்லை
நான் இந்த சக்கர நாற்காலியில் இருப்பதால் இழந்தவற்றில்
மழை தொடர்பான இழப்புகளுக்கு
ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது
கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமான
ஆசைதான்
நான் வீட்டைவிட்டு சற்றே வாசலில் இறங்கி
மழை என் தலைக்கு மேலும்
பொழியட்டும் என
ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு
என் சக்கர நாற்காலியில் இருந்தேன்
ஏதோ இயல்பு நிலைக்குத்
திரும்பினாற்போலிருந்தது
உனக்கும் எனக்கும் இடையே
பெரிய வேற்றுமைகள் இல்லை
12.7.2024
இரவு 10.24
