அதங்கோடு அனிஷ்குமார்
மெய்மறந்து
மிதக்க கற்றுக்கொள்ளுங்கள்
நீரின் மேல்
ஒரு சவாசனம் போல.
நீரின் அசைவில்
மிதக்கும்
ஒரு இலையென மிதத்தல்
சாத்தியப்படும் வேளை
அன்றாட அவஸ்தைகளின்
சங்கிலிகளிலிருந்து
உங்களை
விடுவியுங்கள்.
மிதக்க மிதக்க
உடலின் கனம்
கொஞ்சம் கொஞ்சமாய்
விடுபட விடுபட
மிதத்தலை மறக்கும் நிலை
தியானத்தின் உச்சம்.
நீர் மேல் தான்
நாம் மிதக்கிறோம் என்பதை
மனம் கடக்கும் நிலையில்
ஒரு பரவசம்
நமக்குள் குடியேற
ஏகாந்தப் பெருவெளியில்
உடலுக்கு
சிறகுகள் முளைத்தது போல்
நம்மை நாம்
மறக்கக் கடவோம்.
மெய் மறக்காது
மிதத்தல்
மீன் செத்து மிதத்தல்
போலாகும்.
