விஸ்வநாதன் ரமேஷ்/டைரி


பரம ரகசியங்கள் உள்ளடங்கியது
என்கிறார்கள்
என் டைரியில்
அம்மா வைத்த
பூசணிக்காய் மோர் குழம்பு
பீன்ஸ் பருப்பு உசிலி பிறகு
ராஜம்மா பாட்டியும்
நானும் சாப்பிட்ட கருணை கிழங்கு மசியல் பற்றிய
குறிப்புகள் உண்டு
பெரம்பூர் சங்கீத சபாவில் மகாராஜபுரம் சந்தானம் பாடிய அமிர்தவர்ஷினி
ஸ்வரங்களில்
மழை பொழியும்
நாதம் கேட்டது உள்ளது
எங்களுடைய நாடக ஒத்திகைகளில்
நானும் நண்பர்களும் சொக்காயைப் பிடிக்காமல் போட்ட
சண்டைகள் பற்றியும் உள்ளது. வேண்டாதவற்றில் எல்லாம் விழுந்து புரண்டு அடிபட்டு மீண்டு எழுந்து வந்து எனக்கு வலிக்கலையே
என்று கடந்து நடந்தது பற்றி உண்டு
குழந்தைகளுக்கு கல்யாணம் நடந்த பிறகு நாங்கள் இருவரும் கடற்கரையில் உட்கார்ந்து அமைதியாக கடலைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தது உள்ளது
என்னுடைய அழகிய தருணங்கள் பற்றியது பல உள்ளது
ஏதோ ஒரு பக்கத்தில்
நான் ஏன் சாக வேண்டும் என்று என்னைக் கேட்டு விட்டு கேன்சரில் போன என் 24 வயது கடைசி தம்பியும் உண்டு
அதே கேள்வியை கேட்டுக் கொண்டு வீம்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் என் டைரியில் ரகசியங்கள் என்று எதுவும் இல்லை என் வாழ்க்கையைத் தவிர.