
அம்மாவுக்கு நான்
அடிக்கடி வந்து பார்ப்பதில்லை
என்று என்மீது குறை.
எப்போதும் உடனிருப்பார்
என்று நம்பிய அப்பா
இடையிலேயே
இல்லாமல் போய்விட்டார்.
சகோதரர்களோடு பெரிதாக
சச்சரவு ஏதுமில்லை.
காதலைச் சொன்ன பெண்
யாரையோ கல்யாணம் செய்துகொண்டு
நிறை வாழ்வு வாழ்கிறாள்.
உற்ற நண்பர்கள்
ஒரிரண்டு பேர் உண்டு
அவர்களும் அவ்வப்போது காணாமல்போய்
திரும்ப வருவார்கள்.
வேலை செய்யும் இடத்திலும்
வேற்றுமை பாராட்டுபவர்கள்
இருக்கவே செய்கிறார்கள்.
வீடு வேறு வழியில்லாமல்
என்னைச் சகித்துக்கொள்கிறது.
தெருவிலும் ஊரிலும்
தெரிந்தவர்களைக் காட்டிலும்
தெரியாதவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
கடவுளுக்கு பயந்து
யாரும் நடக்கிற மாதிரி
தெரியவில்லை,
கடற்கரையைப் போல
கோவில்களிலும் நல்ல கூட்டம்.
எதைப் படித்தாலும்
எப்போதோ படித்த நினைவு.
இப்போதெல்லாம்
குழந்தைகளைக் கொஞ்சுகையில்
அசட்டுத்தனம் மேவி
கண்களில் நீர் துளிர்த்துவிடுகிறது.
அந்தியில் மறைகிற சூரியனை
அசந்தர்ப்பமாக காணும்போது
உற்ற ஒருவரின் சடலம்
மயானத்தில் எரிவது போலிருக்கிறது.
நெற்றுக்குள் முற்றிடும் விதையென
எல்லாவற்றின் மீதும் பட்சமின்றிப்
படர்கிறதொரு பற்றின்மை.
இருப்பினும்
இன்னும் பிரிக்கப்படாததொரு
பரிசுப் பொதியைப்போலவே
ஒவ்வொரு நாளையையும்
அனுமானம் எதுவும் கொள்ளாமல்
அவிழ்க்க முற்படுகிறேன்.
