
சற்று நேரம் அப்படியே நில்லும்
ஆதித்யரே!
சந்தி பண்ணி முடித்து விடுகிறேன்.
கொஞ்சம் காயத்ரியை வாங்கிக் கொண்டு
தெம்பாகச் செல்லும் வே!
நாளை உதயகாலம் ‘பல்’லென்று விடிவீர் தானே?
யுகம்யுகமாய் எரிந்து கொண்டிருப்பதாய்
சலித்துக் கொள்ளாதீர்!
ஒரு நாள் நீர் உதிக்காமல் போனால்
என்னாகும் என நினைக்கவே இயலவில்லை.
இருந்த வரை பெற்றோர் இருப்பையே
கவனம் கொள்ளாத பிள்ளைகள் போலவே
உன்னை ஏறெடுத்தும் பாரார் மானிடர்!
அதற்காக சுணக்கம் கொள்ளாதீர்!
கதிரவனே!
ஆறு கடவுளரில் உன்னையும்
வைத்தே துதிக்கின்றோம்.
ஒளியேற்றி உலகாளும் தெய்வமே!
எங்கள் மனத்தின் இருளையும் போக்க
வழியுண்டா பாரும்!
அனலி கனலி வெய்யோன் பரிதி
அலரி பானு அர்கா ஆத்மகாரகன்
ஆன பெயர் அத்தனையும் போற்றுவோம்
வான வெளிமேவும் கண்கண்ட தெய்வமே!
