
நின்றும் நடந்தும் (6)
எலிமெண்டரி ஸ்கூலில் ஐந்தாவது படிக்கும்போது நடந்த நிகழ்ச்சி இது.
மொத்தம் ஐந்து ஆசிரியர்கள் இருந்தார்கள். நான்கு பேர் பெண்கள் ஆண் வாத்தியார் நடேசய்யர் மட்டுமே. அவர் கணக்குப் பாடம் நடத்துவார்.
பெண் வாத்தியார்களில் மேரி டீச்சர் பிரபலமானவர்.
வெள்ளிக்கிழமைகளில் கடவுள் வாழ்த்தாக “எல்லாம் ஏசுவே – எனக்கு எல்லாமே ஏசுவே” என்ற பாடலை இனிமையான குரலில் பாடுவார். அப்போது ஓடிக் கொண்டிருந்த மிஸ்ஸியம்மா என்ற படத்திலிருந்து “எனையாளும் மேரி மாதா” என்ற பாடலை எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருப்பார். ஒரு தலைமை ஆசிரியர் போலவே பள்ளியில் எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். பெற்றோர்களுக்கும் மிகவும் பிடித்தமானவர்.
அவர் என் வகுப்பிற்கு என்ன பாடம் எடுத்தார் என்று இப்போது நினைவில்லை. ஆனால் அவருடைய தோட்ட வேலை மட்டும் நினைவிருக்கிறது.
மங்களூர் ஓடு வேய்ந்த உயரமான ஒற்றைக் கட்டிடம். ஓடுமாற்றிப் பல வருடங்கள் ஆகியதால், கூரையில் பல இடங்களிலிருந்து சூரியக் கதிர்கள் தரையில் விழும். இந்தக் கதிர்கள் விழும் வட்டத்தின் மீது அமர்வதற்கு எங்களுக்குள் போட்டி இருக்கும். மழைக்காலங்களில் அங்கிருந்து மாறிச் சுவர் ஓரமாக அமர்ந்து கொள்வோம்.
வெளிப்புறம், சுற்றுச்சுவருக்குள், கட்டிடத்தைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் 5 அடி அகலத்திற்குக் காலியிடம் இருந்தது. அங்குத் தோட்டச் செடிகள் பயிரிட்டு அழகாக்கினார் மேரி டீச்சர்.
ரோஜா, கனகாம்பரம் பூச்செடிகள் பயிரிட்டார். பிறகு கத்தரி வெண்டை கொத்தவரை செடிகள் வந்தன. பிறகு ஏதோ ஒரு கொடி வகை தரை எங்கும் படர்ந்தது. சில மாதங்களில் அதில் பச்சை நிறமான நீண்ட காய்கள் ஏராளமாக முளைக்க ஆரம்பித்தன. வெள்ளரிக்காய்கள்!
ஆனால் அந்த வெள்ளரிக்காய்களை மாணவர்கள் பார்க்க அனுமதி இல்லை. ஆசிரியர்கள் மட்டுமே பின் கதவு வழியாகச் சென்று காய்கறிகளின் வளர்ச்சியைப் பார்த்து வருவார்கள்.
அக்காலத்தில் வெள்ளரிக்காய் விலை உயர்ந்த பொருள். எனவே வீட்டில் அடிக்கடி சமைக்க மாட்டார்கள். சாலட் மாதிரி ஹோட்டல்களில் பரிமாறுவதும் கிடையாது. எனவே வெள்ளரிக்காய்கள் வாரத்திற்கு 10, 12 என்று விளைந்து விட்ட நிலையில் அவற்றை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது.
சீசன் முடியும் வரை, பத்து காய்கள் முற்றியவுடன் பறித்து ஏதேனும் ஒரு ஓட்டலுக்கு விற்று விடுவது, வரும் தொகையில் பள்ளிக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது என்ற மேரி டீச்சரின் யோசனையை எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள்.
பஜார் தெருவில் இருந்த ‘பாலாறு கேப்’ என்ற ஓட்டலுக்கு இந்த வெள்ளரிக்காய்கள் புறப்பட்டன. மாதம் ஒரு முறை மொத்தமாகப் பணம் வாங்குவது என்று ஏற்பாடு.
ஒரு மாதக் கடைசியில் மேரி டீச்சர் என்னிடம் அன்று பறித்த 10 வெள்ளரிக்காய்களையும் ஒரு மடித்த துண்டுச் சீட்டையும் கொடுத்து “பணம் வாங்கி வா” என்றார்கள்.
மடித்த சீட்டில்: எஸ்.மணி -12, எம்.குமார் -10, ராஜா -11, செல்லப்பா -10 என்று இருந்தது.
அதாவது யார் மூலம் எவ்வளவு காய்கள் ஓட்டலுக்கு அனுப்பப்பட்டன என்ற கணக்கு.
ஹோட்டல் உரிமையாளரான ஐயர் ரொம்ப நல்லவர். என்னை உட்காரச் சொல்லிச் சூடாக ஒரு காபி கொடுத்தார். நான் அதுவரை ஓட்டலுக்கு சென்று காபி குடித்ததில்லை. நான் மட்டுமல்ல எங்கள் வீட்டில் யாருமே ஓட்டலுக்குச் சென்றதில்லை. ஆச்சாரமான குடும்பம்.
அந்தக் காபி மிகவும் சுவையாக இருந்தது. நம் வீட்டு காப்பி மட்டும் ஏன் வேறு விதமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
ஐயர் துண்டுச் சீட்டை வாங்கிப் பார்த்தார். கல்லாப்பெட்டி மீது இருந்த ஒரு நோட்டைப் புரட்டினார். எஸ்.மணி -12 என்பதை அடித்துவிட்டு 10 என்று திருத்தினார். எம்.குமார் -10 என்பதை 9 என்றும், ராஜா -11 என்பதை 8 என்றும் திருத்தினார். செல்லப்பா -10 என்பதைத் திருத்தவில்லை. நான்தான் கொண்டு போன 10 காய்களையும் அப்படியே கொடுத்து விட்டேனே!
திருத்தப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்பப் பணத்தைக் கணக்குப் பண்ணிக் கொடுத்தார் ஐயர். நான் மேரி டீச்சரிடம் கொடுத்துவிட்டேன். பள்ளி முடியும் நேரம். அதனால் டீச்சரும் அவசரமாக வாங்கி, எண்ணாமலேயே துண்டுச் வீட்டுடன் தன் பைக்குள் வைத்துக் கொண்டார்.
மறுநாள் காலை பிரேயர் முடிந்தவுடன் மணி, குமார், ராஜா மூவரும் தனியாக அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. ஹோட்டலுக்கு போகும் வழியில் சில காய்களைத் தங்கள் வீடுகளில் பதுக்கி வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.
மேரி டீச்சர் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தார். ஒரு வார்த்தையும் பேசவில்லை. இனிமேல் இங்கு விளையும் வெள்ளரிக்காய்களைத் துண்டம் போட்டு மாணவர்களுக்கே கொடுத்து விடலாம் என்றார்.
அந்த வாரத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் மாலை நடைபெறும் சரஸ்வதி பூஜையின்போது பொரிகடலையுடன் வெள்ளரிக்காய்த் துண்டுகளும் மாணவர்களுக்குக் கிடைக்க ஆரம்பித்தன.
ஓட்டல் ஐயர் கடைத்தெருவில் ஒரு நாள் என்னைப் பார்த்தபொழுது, “ஏண்டா அம்பி, உங்க ஸ்கூலில் வெள்ளரிக்காய் இப்பொழுதெல்லாம் காய்ப்பதில்லையா?” என்று கேட்டார்.
“காய்க்கிறது, ஆனால் எங்களுக்கே போதவில்லை” என்று சிரித்தேன்.
(குருபூர்ணிமா தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்.)
July 15, 2024
