
ஒரு சிறிய தேங்காய் சில்லுக்காக
பொறியில் அகப்பட்டு
செத்துப் போன
பருத்த எலியின் குரு மிளகு கண்கள்
இன்னும் மனதிற்குள்
உருண்ட படியே தான் இருக்கின்றன
வெட்டுப்பலகையில்
விறைத்துக் கிடக்கும்
கெண்டை மீனின்
விரிந்த விழிகளுக்குள்
கடல் வண்ணம்
தீர்ந்து விடாமல்
இன்னும் கொஞ்சம்
மிச்சமிருக்கிறது
பாதியில் முறிந்து போன
ஒரு அந்தரங்க கவிதை கூட
தொண்டைக்குள் மாட்டிக் கொண்ட
கெளுத்தி முள்ளைப் போல இப்பொழுதும்
உயிரை வாதித்துக் கொண்டேயிருக்கிறது
கம்பளிப் பூச்சி போல ஊர்ந்து போகும்
காலத்தின் மீது
நாம் காண்பதெல்லாம்
காலத்தின் கோடுகளன்றி வேறில்லை
நகக்கண்களுக்குள் மாட்டிக் கொண்ட
அழுக்கினைப் போல
துயரமிக்க தொரு பொழுதுக்குள்
சிக்கி கொண்டு
அல்லாடிக் கொண்டிருக்கிறது மனது
நள்ளிரவில்
கண்முன்னால்
உதிர்ந்து கொண்டிருக்கும்
ஒரு நட்சத்திரத்தை
பார்த்த அந்த நொடியில் தான்
இரவில் கை விடப்பட்டு
அனாதையாக பரிதவித்துக் கொண்டிருக்கும்
அத்தனை இதயங்களையும்
மீன் குஞ்சுக்களைப் போல
உள்ளங்கையில் ஏந்திக்கொள்ள வேண்டுமென்று
ஆசையாக இருந்தது
