
காஃபி வெறும் பழக்கமல்ல
வெற்று நடைமுறையும் அல்ல
காஃபி ஒரு கடிகார முள் சிலருக்கு –
காலத்தைச் சரியாகக் காட்ட வேண்டும்
அன்றாடத்தின் ஒவ்வொரு காஃபியும்
காஃபி அருந்துவதற்கு அல்ல
பேச வைப்பதற்கு
சொக்க வைப்பதற்கு
நாக்கிலேயே குடியிருப்பதற்கு
நினைவில் தங்கி வாட்டுவதற்கு
விரலில் சுற்றிவிட முடியுமெனப்படும்
டாக்கா மஸ்லின் சேலை போலவே
இறுதிச் சொட்டு வரைக்கும்
நுரையால் நெய்யப்பட்டிருக்கும்
காஃபி ஓர் அமுதம்
காஃபி
அன்பின் கதகதப்பு
நட்பின் ஓயாத புதுப்பித்தல்
முந்தைய சந்திப்பின்
முந்தைய பிரிவின்
முந்தைய முறிவின்
நினைவுச் சூட்டுச் சுவடு
காஃபி ஓர் உறவின் முதற்புள்ளி.
காற்புள்ளிகள் பின்னிணைப்பு
முற்றுப்புள்ளி வைக்க விடுவதில்லை
ஆவியாக நின்று பேசும் காஃபி
இணையாகக் கலந்து
இருவர்க்குமாகப் பகிர்ந்து
இடைவெளியற்று அமர்ந்து
இதமாகப் பருகும் வேளையில்
காதல் கடத்தி, காஃபி
***

நாவினில் தங்கியிருக்கும்
காப்பியின் சுவை போல…..
மனம் ரசிக்கும் இக் கவிதையை 💐
காதல் கடத்தி. அருமை அருமை. காதலர்கள் சந்திக்கும்இடம் பெரும்பாலும் காபி ஷாப் தானே!
சோகம் என்னவென்றால் என்னால் இதை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. நான் காபி குடிப்பது மில்லை. எனக்கு காபி பிடிக்காது.
உண்மை! அடியேனும் அங்ஙனமே. காபி குடிப்பதில்லை. ஆனால் கவிதை அருமை!
கும்பகோணம் காபி பிரியர்களுக்கு தமிழகமெங்கும் கும்பகோணம் டிகிரி காபி கடை மாதிரியான கவிதை